Published:Updated:

`தி.மு.க கொள்கை இல்லாத கட்சி என்பதை கனிமொழி நிரூபித்துள்ளார்' - தம்பிதுரை குற்றச்சாட்டு!

`தி.மு.க கொள்கை இல்லாத கட்சி என்பதை கனிமொழி நிரூபித்துள்ளார்' - தம்பிதுரை குற்றச்சாட்டு!
`தி.மு.க கொள்கை இல்லாத கட்சி என்பதை கனிமொழி நிரூபித்துள்ளார்' - தம்பிதுரை குற்றச்சாட்டு!

 ``தி.மு.க ஒரு கொள்கை இல்லாத கட்சி என்பதை கனிமொழி நிரூபித்திருக்கிறார்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் நடைபெற்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கடவூர் ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.


 

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சமூகநீதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் அதிக வருமானம் ஈட்டக்கூடிய, வருமான வரி செலுத்தக் கூடியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதை எதிர்த்து கருத்து கூறாமல், அந்த மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்ப கனிமொழி சொல்கிறார் என்றால் என்ன பொருள். தி.மு.க ஒரு கொள்கை இல்லாத கட்சி. அதைதான் கனிமொழி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைச் செய்து சிறைக்குச் சென்றவர்கள் கனிமொழி மற்றும் ராஜா போன்றவர்கள். 2 ஜி வழக்கில் அவர்கள் ஜாமீனில் வந்து இருந்தாலும், கீழமை நீதிமன்றங்களில் விடுதலை பெற்றாலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொள்ளாமல், மணப்பாறையில் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டுகிறார். தமிழக முதலமைச்சர் மீது வழக்குகள் ஏதேனும் உள்ளதா? திருவாரூர் தொகுதி அவருடைய தந்தை தொகுதி. அங்கு தேர்தல் அறிவித்தபோது, தேர்தலில் போட்டியிட பயந்துகொண்டே மு.க.ஸ்டாலின் அவசரத்தில், 'ஆத்திரத்தில் முதலமைச்சராக முடியாது' என்ற விரக்தியில் ஏதேதோ உளறி வருகிறார்" என்றார்.