
ஒரு வாக்குறுதியும் இன்னும் நிறைவேறலைங்கிறது உண்மைதான்ஓவியம்: கார்த்திகேயன் மேடி
#EnnaSeitharMP
#MyMPsScore
ஒரத்தநாடு அருகில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். உள்ளூர் பிரச்னை காரணமாக ஊரைவிட்டு வெளியேறி, தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பகுதிக்குக் குடிவந்தார். ஃபைனான்ஸ், ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களில் கொடிகட்டிப் பறந்தார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் இவரும் தொழில் பார்ட்னர்கள். ஒரு கட்டத்தில் வைத்திலிங்கத்தின் உதவியால், அ.தி.மு.க-வில் சேர்ந்து நீலகிரி ஊராட்சியில் பஞ்சாயத்துத் தலைவரானார். அதே வைத்திலிங்கம் உதவியுடன் எம்.பி சீட் வாங்கி, வெற்றியும் பெற்றுவிட்டார். தொகுதி மக்களிடம் தொழில் அதிபராக அறிமுகமாகி, அரசியலில் உயர்ந்த பரசுராமன், தன்னைத் தேர்ந்தெடுத்த தஞ்சாவூர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
தொகுதியின் எந்தப் பக்கம் சென்றாலும் கொதித்துக்கிடக்கிறார்கள், மக்கள். “கஜா புயலால் இவ்வளவு கஷ்டப்படுறோம். ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரல. விவசாயம் அழிஞ்சுபோஞ்சு. குடிதண்ணீருக்குக்கூட சிரமப்படுறோம். எங்களுக்கு என்னாச்சுன்னு பார்க்கக்கூட எம்.பி வரல. எங்க நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டு இருக்கு. ஆனா, எம்.பி-யோட லெவல் மட்டும் எங்கேயோ போயிடுச்சு” என்று கொந்தளிக்கிறார்கள்.

பேராவூரணி அருகில் இருக்கும் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமகிருஷ்ணன், “எங்க பகுதிக்கெல்லாம் எம்.பி வந்ததே கிடையாது. தென்னை விவசாயம் செழிப்பா இருக்குற பகுதி இது. ‘கயிறு ஃபேக்டரி மாதிரி தென்னை சார்ந்த தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன்’னு தேர்தல் நேரத்துல வாக்குறுதி கொடுத்தார். அதுக்கு ஒரு துரும்பைக்கூட அவர் கிள்ளிப் போடல. காவிரிப் பிரச்னை தீர்வதற்குள் இப்போ மேக்கேதாட்டூல கர்நாடகா அணைக் கட்டப்போகுது. அதுக்கு எதிரா எம்.பி குரல் கொடுக்கவேயில்ல. தென்னை மரங்கள்லாம் சாய்ஞ்சுபோய்க் கிடக்குது. அதை அகற்றுவதற்கோ, புது கன்றுகளை நடவு செய்றதுக்கோ எந்த உதவியும் கிடைக்கல. இந்தப் பகுதியில ‘வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பேன். உரத்தொழிற்சாலை அமைப்பேன்’னு சொன்னார். எதையும் அவர் செய்யல...” என்றார்.
அ.ம.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்லதுரை, “2014-ம் வருஷம் மீத்தேன் திட்டத்துக்கு ஆதரவு கொடுத்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தஞ்சாவூர் தொகுதியில தி.மு.க சார்பாகப் போட்டியிட்டார். பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா, ‘மீத்தேன் திட்டம் வந்தா தஞ்சாவூர் பாலைவனமாகிடும். மீத்தேன் திட்டத்துக்கு நாங்க அனுமதி அளிக்க மாட்டோம்’னு சொன்னாங்க. ‘பரசுராமனுக்கு ஓட்டுப்போட்டா மீத்தேன் திட்டம் வராது’னு நினைச்சு மக்கள் ஓட்டு போட்டாங்க. அவரும் இந்த விஷயத்தைப் பெருசாப் பேசிதான் ஓட்டு வாங்குனார். இப்போ வேற ஏதோ காரணத்தாலதான் மீத்தேன் திட்டத்தைத் தற்காலிகமா நிறுத்தி வெச்சுருக்காங்க. அந்தத் திட்டம் எப்போது வேணாலும் தஞ்சாவூர் மாவட்டத்துல செயல்பாட்டுக்கு வரலாம்கிற பயத்துலதான் மக்கள் இருக்காங்க. ஒரு எம்.பி-யாக மீத்தேன் திட்டத்தை முற்றிலும் தடை செய்யறதுக்காக இவர் குரல் கொடுக்கவேயில்லை. இப்போ, இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான வேலைகளையும் மத்திய அரசு ஆரம்பிச்சிருக்கு. அதுக்கு எதிராவும் இவர் குரல் கொடுக்கலை. தொகுதிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் இவர் கொண்டுவரலை” என்றார் வருத்தத்துடன்.
மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க), “மன்னார்குடி, நீடாமங்கலம் ரெண்டு ஊர்லயும் பஸ் ஸ்டாண்டு சரியில்லை. இதைச் சீரமைக்க எம்.பி எந்த முயற்சியும் எடுக்கலை. பட்டுக்கோட்டையில புறவழிச்சாலையில புது பஸ் ஸ்டாண்டு அமைக்கணும் என ரொம்ப நாளா மக்கள் கோரிக்கை வெச்சுட்டு இருக்காங்க. அதையும் நிறைவேத்தலை. என்னோட தொகுதி நிதியில இருந்து மன்னார்குடி பஸ் ஸ்டாண்டுக்காக கொடுத்த 25 லட்ச ரூபாயையும் ஏற்க மறுத்துட்டாங்க. வடுவூர்ல ஆறு கோடி ரூபாய் செலவுல உள்விளையாட்டு அரங்கம் கட்டியிருக்காங்க. அதுக்கு கரன்ட் கனெக்ஷன் கொடுக்க ஐம்பது லட்ச ரூபாய் ஆகும். ஆனால், அந்தப் பணம் ஒதுக்கப்படாததால், கட்டடம் கட்டி முடிச்சு, நாலு வருஷம் கடந்தும், சும்மா கிடக்கு. இவர், தொகுதி நிதியில எந்தப் பெரிய திட்டங்களையும் செயல்படுத்தலை. எதில் ஆதாயம் கிடைக்குமோ, அந்தத் திட்டங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கியிருக்கார்” என்றார்.
“தஞ்சாவூர்ல ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கு. தஞ்சாவூர் அரண்மனையையும், பெரிய கோயிலையும் பார்க்க உலகம் முழுக்க இருந்து சுற்றுலாப் பயணிகள் வர்றாங்க. ஆனால், ரயில் நிலையச் சீரமைப்பு, புதிய ரயில் பாதைகள் அமைப்பு, புதிய ரயில் திட்டங்கள் என எதையும் இவர் செய்யலை. வழக்கமா ரயில்வேயில என்ன பணிகள் செய்வாங்களோ, அது மட்டும்தான் நடந்துருக்கு, எம்.பி-யால ஒரு வேலையும் நடக்கலை. ‘தஞ்சாவூர் - சென்னை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் விட நடவடிக்கை எடுப்பேன்’னு சொன்னார். அதுக்கான முயற்சியும் எடுக்கலை. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளும் கிடப்பில் இருக்கு. அதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கலை.
தஞ்சாவூர் நகரத்துக்குள் சாந்தப்பப் பிள்ளை கேட் பக்கத்துல ஒரு சின்ன ரயில்வே பாலம் இருக்கு. அதை ரயில்கள் கடக்குறப்போ ரயில்ல இருந்து மலமும், சிறுநீரும் பாலத்துல இருக்குற இடைவெளியில் கொட்டுது. அதனால, ரயில் சத்தம் கேட்டாலே அந்தப் பாலத்துக்கு கீழே கடந்துசெல்ல பயப்படுறாங்க. ரயில்களில் இருந்து கழிவுநீர் கீழ விழாத வகையில் அந்தப் பாலத்தைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
தஞ்சாவூருக்கு வரவிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்குக் கொண்டுபோயிட்டாங்க. அதுக்கும் இவர் அழுத்தம் கொடுக்கலை. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான முயற்சியும் எடுக்கலை. தேங்காயை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்ற, பட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகம் செயல்படாமல் இருக்கு. அதிராமபட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகள்ல மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இந்தப் பகுதிகள்ல வர்த்தகத் துறைமுகங்கள் அமைப்பேன்னு வாக்குறுதி கொடுத்தார். அதையும் அவர் செய்யலை” என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவகுமார்.
பரசுராமன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெரும்பாலும் ஊராட்சிப் பகுதிகளுக்குத்தான் செலவழித்திருக்கிறார். அதனால், இவர் தத்தெடுத்துள்ள ஒட்டங்காடு, ஆலக்குடி ஆகிய கிராமங்களிலும் சில பணிகள் நடந்துள்ளன. ஆனால், தத்தெடுத்த கிராமங்கள் என்பதற்கான எந்தச் சிறப்புப் பணிகளும் அங்கு நடைபெறவில்லை
இவை எல்லாம் குறித்தும் பேச பரசுராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். “தொகுதிக்குள் வரலைங்கிற குற்றச்சாட்டு, எல்லா எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மேலயும் வழக்கமாக சொல்றதுதான். இதுவரை தொகுதியில் கட்சிக்காரங்க வீட்டுல நடந்த 5,000 கல்யாணங்களுக்குப் போயிருக்கேன். தொகுதிக்குள்ள போகாமலா இத்தனை கல்யாணத்துக்குப் போக முடியும். புயல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போகலைனு சொல்றதும் சுத்தப் பொய். தொகுதி முழுக்க போயிட்டுத்தான் வந்துருக்கேன். ஒவ்வொருத்தர் வீட்டுலயும்போய் ஆறுதல் சொல்ல முடியுமா? ஊருக்குப் பொதுவா ஒரு இடத்துலதான் மக்களைச் சந்திக்க முடியும். சின்னச் சின்ன வேலைகளை மட்டும்தான் செய்றேன்னு விமர்சனம் பண்றாங்க. எனக்கு ஒதுக்குற நிதியில எப்படிப் பெரிய திட்டத்தைக் கொண்டுவர முடியும். தொகுதி நிதியைப் பிரிக்கிறப்போ, சின்னச் சின்னப் பணிகளைத்தான் செய்ய முடியும். நான் கொடுத்த எல்லா வாக்குறுதிகள் பத்தியும் நாடாளுமன்றத்துல கேள்வியாகக் கேட்டிருக்கேன். மத்த விஷயங்களை, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களிடம் பேசியிருக்கேன். நிறைய விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு. ஒரு வாக்குறுதியும் இன்னும் நிறைவேறலைங்கிறது உண்மைதான். ஆனா, அதுக்கான வேலைகள் என் மூலமா நடந்துக்கிட்டுதான் இருக்கு.
அதேசமயம், காவிரி டெல்டாவைச் சீரமைக்க மத்திய நீர்வளத்துறை மூலமா 2,298.75 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வாங்கியிருக்கேன். அதற்கான வேலைகள் நடந்துட்டிருக்கு. இவ்வளவு பெரிய தொகையை வேற எந்த எம்.பி-யும் வாங்கலை. அது என்னோட பெரிய சாதனை. என் முயற்சியாலதான் காரைக்குடி-திருவாரூர் ரயில் திட்டம் இப்போ செயல்பாட்டுக்கு வரப்போகுது. ஏராளமான கிராமங்களுக்கு போர்வெல் போட்டுக்கொடுத்திருக்கேன். கிராமப் பள்ளிக்கூடங்களுக்கு டேபிள், சேர் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஹைமாஸ் லைட்டுகள் அமைச்சிருக்கேன். சாலைகள் போடப்பட்டிருக்கு. என் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் கிராமங்களுக்குத்தான் செலவழிச்சிருக்கேன்” என்றார் பரசுராமன்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- ஜி.பிரபு, கே.குணசீலன்



எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரஹ்மா நகர்ப் பகுதியில் தனது வீட்டிலேயே அலுவலகம் அமைத்திருக்கிறார் பரசுராமன். இது தஞ்சாவூர் நகரிலிருந்து ஒதுங்கியிருக்கும் பகுதி என்பதால் வெளியூரிலிருந்து எம்.பி-யைச் சந்திக்க வருகிறவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ‘ஆழிவாய்க்காலுக்கும் தென்னமநாடு கிராமத்துக்கும் நடுவே 650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஆழித்தேரி ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வாரிக் கொடுத்தால், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மீன் வளர்ப்பு, விவசாயம் சிறக்கும்’ என மனுக் கொடுத்திருந்தார். அதற்கு எம்.பி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

