Published:Updated:

மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!
மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!

மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!

பிரீமியம் ஸ்டோரி

‘ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே விசேஷ மரபணு இருக்கிறது’ என்று பேசி அடுத்த சர்ச்சைக்குத் திரி கிள்ளியிருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

சேக்கிழார், சோப்பு நுரை, தெர்மாகோல்... என மரண மாஸ் காட்டிவரும் அ.தி.மு.க அட்ராசிட்டிகளில், ‘மரபணு ரகசியம்’ பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலோடு அமைச்சரைச் சந்தித்தேன்...

மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!

‘‘சாதி - மதத்தை வேரறுக்க வந்த திராவிடக் கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரே ‘சாதிப்பற்று இருப்பது தவறில்லை’ என்று பேசுவது என்ன நியாயம்?’’

‘‘ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் தனிப்பட்ட மரபணு, பாரம்பர்யம் உண்டு. இந்த நல்ல விஷயங்களை அந்தந்தச் சமுதாயத்தினர் அவர்களது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கோடு நான் பல்வேறு சமுதாய மாநாடுகளில் கலந்துகொண்டு பேசிவருகிறேன். இது அவரவர் சாதியின் மீதான பற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர, சாதிவெறியை வளர்த்துக்கொள்வதாகாது.

இந்த வரிசையில், அண்மையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ‘தொழில் முனைவோர் கூட்ட’த்திலும் நான் கலந்துகொண்டேன்.  நாடார் சமுதாயத்தினரின் வணிகத்திறன் குறித்துப் பேசும்போது, ‘சென்ற இடத்திலெல்லாம் வேர் பிடித்து, வேர் பிடித்த இடத்திலெல்லாம் மணம் பரப்பி, மணம் பரப்பிய இடத்திலெல்லாம் மகிமை சேர்த்த சமுதாயம் இது’ என்று அவர்களது வணிகத் திறனைப் பாராட்டிப் பேசினேன். புலம்பெயர்ந்த சமுதாயங்களான நாடார், மார்வாடி மற்றும் யூத சமுதாயங்களுக்கும் இது பொருந்தும். ஆக, ‘தனிப்பட்ட மரபணுவாக இருக்கக்கூடிய இந்த வணிகத்திறனை நீங்கள் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று ஊக்குவிக்கும் அர்த்தத்தில் நான் பேசியதை, சிலர் சாதி ரீதியிலான பேச்சாக திசை திருப்பிவிட்டார்கள்!’’

‘‘ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி மரபணு உண்டு என்றெல்லாம் பேசுவதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது?’’

‘‘தனிப்பட்ட சாதிக்கென்று மரபணு உள்ளதாக எந்த ஓர் ஆதாரமும் என்னிடம் கிடையாது. அப்படி அறிவியல் பூர்வமான அடிப்படை ஏதேனும் இருக்கிறதா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அதனால், ‘இந்தச் சாதியினர் இப்படி இருப்பார்கள்’ என்று யாரையும் முத்திரை குத்திவிட முடியாது. ஆனால், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அடிப்படையான சில குணங்களும் அடையாளங்களும் இருக்கின்றன!’’

‘‘பள்ளி மாணவர்களிடமே சாதிவெறி வேரூன்றி யிருக்கிறது. பள்ளிகளிலேயே சாதிப் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் களைய வேண்டிய அமைச்சர் நீங்களே, சாதியை ஆதரித்துப் பேசுவது அநீதி இல்லையா?’’

மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!

‘‘அப்படியில்லை... ‘என்னுடைய சாதியைவிடவும் மற்ற சாதிகள் கீழானவை’ என்ற எண்ணத்துடன் மற்றவர்களை எதிரியாக எண்ணுவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவதும்தான் சாதிவெறி! அதேபோல், ‘என் சாதிக்காக மட்டும்தான் செயல்படுவேன்’ என்று சுயநலமாகச் செயல்படுவதும்கூட சாதிவெறியின் ஓர் அங்கம்தான். இதன் உச்சகட்ட அடையாளம்தான் ஆணவப் படுகொலைகள்! சாதி ஒழிப்பு பற்றிப் பேசுகிறவர்களேகூட தங்களது சுய சாதியை வெளியில் சொல்ல வேண்டிய நேரங்களில், ஒருவிதக் கூச்சத்தோடு, சொல்லத் தயங்குகிறார்கள். அது தேவையற்ற தயக்கம் என்று நான் கருதுகிறேன்.  சாதிப்பற்று என்பதே, பாரம்பர்யப் பெருமைகள் சார்ந்த தன் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, மற்ற சமுதாயங்களின் நலன்களுக்கும் உதவ வேண்டும் என்பதுதான்!’’

`` ‘இழிவான சாதிகள்’ என்று சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, துப்புரவுப் பணி செய்வதற்கென்றே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சாதிப் பெருமை பேசுவதற்கு என்ன இருக்கிறது? சாதி என்பதே இழிவானதுதானே, இதிலே என்ன பெருமை?’’


‘‘எந்தவொரு தொழிலுமே தப்பானது கிடையாது. வெளிநாடுகளில் எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இதே துப்புரவுப் பணியைத் திறம்படச் செய்துவருகிறார்கள். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதும் இல்லை. ஆனால், இங்கே குறிப்பிட்ட சமுதாய மக்கள்தான் துப்புரவுப் பணி செய்யவேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றால், அது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தவறுதான். அதனால்தான் இன்றைக்குத் துப்புரவுப் பணியில் மனிதர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எந்திரங்களைப் பயன்படுத்துகிற மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இன்றைய ஆய்வில், வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும்கூடப் பெரும்பான்மையாகத் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.’’

‘‘திருச்சியில் நடை பெறுவதாக இருந்த, ‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்’ என்கிற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ‘அரசு அனுமதிக்காது’ என்றுகூறி நீங்கள் தடுத்ததன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்படுகிறதே?’’

‘‘அதில் உண்மையில்லை. ‘இந்தக் கருத்தரங்கம் இந்து மதத்தை இழிவுபடுத்தும்’ என ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிடுவதற்கு முன்பே, ‘அரசு இதை அனுமதியாது’ என்று நான் உறுதிப்படத் தெரிவித்து விட்டேன். அதாவது ஒரே நாளில், திருச்சியிலும் சென்னையிலும் இரண்டு கருத்தரங்குகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், ‘சமய இலக்கியங்களில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். அதில், இந்து சமய இலக்கியத்தில் ஆரம்பித்து தேம்பாவணி, சீறாப்புராணம் என அனைத்துச் சமயங்களிலிருந்தும் தலைப்புகள் கொடுத்துக் கருத்தரங்கம் நடத்தினர். ஆனால், திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் தூய வளவனார் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த கருத்தரங்கத்தில், ‘சூர்ப்பணகையை லட்சுமணன் மூக்கறுத்து அவமானப்படுத்தியது, பாஞ்சாலி ஐந்து பேரைத் திருமணம் செய்தது’ என இந்து மத இலக்கியங்களாகத் தேடியெடுத்துத் தலைப்புகளைக் கொடுத்திருந்தனர். இது ஆய்வு என்றில்லாமல், அவதூறு பரப்பும் விதமாக அமைந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உடனடியாக, ‘இதை அரசு அனுமதிக்காது’ என்று ட்விட்டரில் பதிவிட்டேன். மற்றபடி நான் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் எதிரானவன் கிடையாது. என் மனைவியே ஒரு கிறிஸ்துவர்தான்!’’

‘‘கஜா புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை. அப்படியிருந்தும், மத்திய பா.ஜ.க அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பது, மாநில நலனுக்காகவா அல்லது அமைச்சர்களின் நலனுக்காகவா?’’

‘‘கேரள வெள்ள பாதிப்பினையும்கூட, பிரதமர் வந்து பார்வை யிட்டாரே தவிர, நிதி உதவி ஒன்றும் அள்ளிக் கொடுத்து விடவில்லை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகை யில், தமிழகத்திலிருந்துதான் அதிகளவிலான தொகை ஜி.எஸ்.டி வரியாக மத்திய அரசுக்குக் கிடைக்கிறது. ஆனாலும் அந்தத் தொகையில் வெறும் நான்கு விழுக்காடு பணம் மட்டுமே தமிழகத்துக்குத் திரும்ப வருகிறது. இது மத்திய - மாநில அரசுகளுக்கிடை யிலான நிதி நிலை உறவுகள் சார்ந்த விஷயம். கூட்டுறவு அடிப்படையிலான அரசமைப்பு என்று சொல்லிக்கொண்டு, இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரே தேசம், ஒரே வரி, ஒரே கல்வி வரிசையில், ‘ஒரே கட்சி’ என்ற தத்துவத்தையும் கொண்டுவர நினைக்கிறது பா.ஜ.க. இதைத்தான், ‘மத்தி வாழ்கிறது, சுத்தி தேய்கிறது’ என்று நான் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். மத்திய அரசின் நிதி உதவிகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை என்ற குறைபாட்டை, துணை முதலமைச்சர் சட்டசபையிலேயே பதிவு செய்திருக்கிறார். மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கும் மத்திய அரசு, நல்ல அரசாங்கமே கிடையாது. ஆனால், இந்த நிலையிலும்கூட அவர்களோடு நல்லுறவு பேண வேண்டியிருப்பதன் காரணம், அவர்களிடமிருந்துதான் எல்லா நிதி உதவியையும் நாம் பெற வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நான் இருந்த கல்வித்துறையை எடுத்துக்கொண்டாலும்கூட அதிலுள்ள திட்டங்களுக்கான செலவுகளுக்குப் பாதிப் பணத்தை மத்திய அரசுதான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசோடு சண்டையிடும் போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறார். அதற்காக அவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட அதிக நிதியை அள்ளிக் கொடுத்துவிடவில்லையே..?’’

‘‘அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்புப் பேச்சுவார்த்தை யின் பின்னணியில், பா.ஜ.க இருப்பதாகப் பேசப்படுகிறதே..?’’

‘‘தங்கத் தமிழ்ச்செல்வன் அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், டி.டி.வி தினகரனோ ‘ஊடகங்கள்தான் இப்படியான செய்திகளை ஏற்படுத்திவிடுகின்றன’ என்கிறார். ஆக அவர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன என்பது தெரிகிறது. அடுத்ததாக பா.ஜ.க-வும் இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. எங்கள் தரப்பிலும்கூட இதுகுறித்து முதல்வரும், துணை முதல்வரும் தெளிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.

சமீபகாலங்களில், அ.ம.மு.க-விலிருந்து தினமும் நிறைய பேர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, அவர்களது கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இதுபோன்ற செய்திகள் மூலம் திசை திருப்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், கட்சியில் எந்தவொரு சிறு பிளவும் இன்றி எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று தேர்தலைச் சந்திக்கும்போதுதான் பெரிய வெற்றியைப் பெறமுடியும். ஆனால், அதற்கான முயற்சியை யாரும் எடுத்துவருவதாகவும் எனக்குத் தெரியவில்லை.’’

‘‘அ.தி.மு.க-வில் ரஜினி இணைய வாய்ப்பு இருப்பதாக, சில மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தீர்கள்... இப்போது அதற்கான சூழல் கனிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘ ‘எம்.ஜி.ஆர் அரசை உருவாக்குவேன்’ என்று ரஜினிகாந்த் பேசியிருந்த சூழலில், ‘ரஜினிகாந்த் அ.தி.மு.க-வுக்கு வந்தால், அவரது தலைமையை ஏற்றுக்கொள்வீர்களா?’ என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அப்போது,   ‘எம்.ஜி.ஆர் ஆட்சிதான் எங்களது கொள்கை நிலைப்பாடும்கூட. அதனால், எம்.ஜி.ஆர் அரசை யார் உருவாக்குவது என்றாலும் இங்கே வந்து உருவாக்கலாமே...’ என்ற அர்த்தத்தில் எனது யூகத்தைப் பதிலாகச் சொல்லியிருந்தேன்.

அ.தி.மு.க-வும்கூட ரஜினியை எதிர்த்து இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. அவரும்கூட ‘தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், அ.தி.மு.க அரசைக் குறைகூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்று வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். அதனால், ரஜினிகாந்த்தை ஒரு நல்ல மனிதராக, நடிகராகத்தான் நாங்கள் பார்த்துக்கொண்டி ருக்கிறோம். அவரோடு இணைந்து பணியாற்றுவதிலும் எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. அரசியல் சூழ்நிலைகள் எப்படி மாறும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!’’

‘‘சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க - பா.ஜ.க இடையிலான உறவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா?’’

‘‘கூட்டணி பற்றி இதுவரை அ.தி.மு.க எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, வரவிருக்கிற 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது உள்ளிட்ட விஷயங்களில்தான் இப்போதைக்குக் கவனம் செலுத்திவருகிறோம்.

வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவந்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், மத்திய பா.ஜ.க அரசு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும். கூட்டணியைத் தேடியலையும் நிலையில் இருக்கிற பா.ஜ.க-வுக்கு அப்போதுதான் நல்லதொரு கூட்டணியும் அமையும்!’’

த.கதிரவன் - படங்கள்: க.பாலாஜி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு