Published:Updated:

நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019
நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019

பா.ஸ்ரீகுமார் - ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. இந்த நேரத்தில் இப்படி ஒரு தோல்வியை பா.ஜ.க எதிர்பார்த்திருக்காது.  

நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் `முடிவின் ஆரம்பமா?’ என்று இந்தியாவையே  கேட்க வைத்திருக்கிறது. பிரதமர் மோடியும்கூட `வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம்’ என்று பா.ஜ.க-வின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் தேர்தல் வெற்றி காங்கிரஸை நோக்கி மாநிலக்கட்சிகளை ஈர்க்கவும் தொடங்கிவிட்டன...பா.ஜ.க-வை வீழ்த்தும் மெகா கூட்டணி வேலைகளில் தீவிரமாகிவிட்டார் ராகுல்.

பா.ஜ.க அடைந்திருக்கிற இந்தத் தோல்வி, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வலுவாக எதிரொலிக்குமா..?

பா.ஜ.க தோல்வியடைந்திருப்பது உண்மைதான் என்றாலும், சத்தீஸ்கர் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸால் அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நிஜமாகவே காங்கிரஸ் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதா என்பதும் ஆராயப்படவேண்டிய கேள்வி. 

வெறும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் கணிப்பது சரியாக இருக்குமா? ஏராளமான கேள்விகள் நம் முன்.

சரியும் கோட்டைகள்

கடந்த 15 வருடங்களாக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் பா.ஜ.கதான் வலுவாக ஆட்சியில் அமர்ந்திருந்தது. பா.ஜ.க-வின் வாக்கு வங்கிகள் எனக் கருதப்படும் இந்துக்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களும் இவைதாம். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட பா.ஜ.க-வின் கோட்டை களைத்தான் இப்போது காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

பொய்த்துப்போன வாக்குறுதிகள் 

நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019

2014-ல் ‘இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்’ எனச் சூளுரைத்து ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஊழலை ஒழிப்பேன், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவேன், கறுப்புப்பணத்தை அழிப்பேன் என அவர் மேடைதோறும் முழங்கியதெல்லாம்  நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது. மோடி ஆட்சி குறித்த எளிய மக்களின் கனவு பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது. ஆனால், அள்ளி வீசிய ஏராளமான வாக்குறுதி களில் கால்வாசியைக்கூட பா.ஜ.க.வினால் நிறைவேற்ற முடியவில்லை.

``கடந்த நான்காண்டுகளாக மத்தியதர வர்க்கத்தினர்மீது மத்திய அரசு தொடுத்த பொருளாதாரத் தாக்குதல்கள் அவர்களைப் பெரிய அளவில் நேரடியாக பாதித்திருக்கிறது. மாபெரும் தோல்வியில் முடிந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிகள், பெட்ரோல் விலையுயர்வு இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றியது. பல லட்சம் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவோம் என்ற முழக்கமும் தோல்வியடைந்திருக்கிறது. கூடவே அடுத்தடுத்து மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் சிறுகுறுந்தொழில்களை முடக்கி, பல லட்சம் பேருடைய வேலைவாய்ப்புகளையும் பறித்துள்ளது. விவசாயத்துறை முற்றிலும் நொடிந்துபோயுள்ளது. ஊழலும் குறையவில்லை, கறுப்புப்பணமும் ஒழியவில்லை...  இதுபோதாதென்று பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள், பசுப்பாதுகாப்பு என்கிற பேரில் நடக்கும் படுகொலைகள் என பா.ஜ.க ஆட்சிமீது மக்களிடையே பெரிய அதிருப்தி உருவாகி யிருக்கிறது. இவைதாம் சமீபத்திய தேர்தல்களில் எதிரொலித்திருக்கின்றன’’ என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

நூலிழை ஆதரவு


பா.ஜ.க மீதான அதிருப்தி பரவத்தொடங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், அது காங்கிரஸ் ஆதரவு அலையாக மாறவில்லை என்பதையே ஐந்து மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் வெளிப்படுத்து கின்றன. இப்போதும் பா.ஜ.க-வுக்கு வாக்கு வங்கியில் பெரிய அளவில் சரிவு இல்லை என்பதையே காண்பிக்கின்றன. ஒரு நூலிழை வித்தியாசத்தில்தான் காங்கிரஸ், பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க மீதான அதிருப்தி வாக்குகளைக் காங்கிரஸோடு மற்ற கட்சிகளும் அதிக அளவில் பங்கிட்டுக்கொண்டு ள்ளன என்பதும் நிதர்சனம்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நமக்குத் தெளிவாக்குவது ஒரே ஒரு விஷயத்தையே. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எல்லாக் கட்சிகளுக்குமே சவாலான ஒன்றாகவே இருக்கப்போகிறது. பா.ஜ.க மீது மக்களுக்குக் கோபம் இருப்பது உண்மைதான் என்றாலும், அது முழுக்கவே காங்கிரஸ் ஆதரவாக மாறவில்லை.

மக்களுக்கு இன்னமும் காங்கிரஸ் கட்சியின் மீதான விமர்சனங்கள் எஞ்சியிருக்கவே செய்கின்றன. சென்ற தேர்தல்போல இந்தமுறை மோடி அலை இல்லவே இல்லை... அதைப்போலவே, ராகுல் அலையும் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ரஜினிகாந்த் குறிப்பிட்டதுபோல, மிக பலசாலியாகத் தெரியும் பா.ஜ.க-வை வீழ்த்துவதே இப்போதைய தேவை என்ற விதத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகும் வாய்ப்புகளே உள்ளன. ராகுல்காந்தி அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார். 

கைகோக்கும் கை!

மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில்ஆட்சியமைக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் முன்வந்துள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு ஓர் உத்வேகத்தைத் தந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கீரியும் பாம்புமாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் பா.ஜ.க-வை வீழ்த்த அணி சேர்கின்றன.

ஆந்திராவில் முக்கிய எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கரம்  கோக்கிறார். இடதுசாரி கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு காங்கிரஸ் அமைக்கும் மெகா கூட்டணி யில் இணையக் காத்திருக்கின்றன. 

தென்மாநிலங்களை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் பா.ஜ.க யாருடன் கூட்டணி என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசின் மீதான அதிருப்திகள் தேர்தலில் தங்களுக்கு எதிராகப் போகும் என்ற பயம் மற்ற கட்சிகளுக்கு உள்ளது. ஸ்டாலின் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியுடனான  கூட்டணியை உறுதிசெய்து ``ராகுலே வருக... நல்லாட்சி தருக’’ என அழைப்பும் கொடுத்துவிட்டார்.

கேரளாவைப் பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே போட்டி இருக்கும். மொத்தமுள்ள 20 தொகுதிகளில் சரி சமமாக இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சிக் கூட்டணிகளும் பிரிக்கும் என்பது வரலாறு.

கர்நாடகாவில் ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 28 இடங்களில் அதிக இடங்கள் வெல்ல வாய்ப்புண்டு. பா.ஜ.க-வுக்கு ஒருசில இடங்கள்தான் வெல்ல வாய்ப்புண்டு.

ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எப்படி, எத்தனை தொகுதிகளைத் தரப்போகிறது என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் அதிக எண்ணிக்கையில் வெல்லவே அங்கும் வாய்ப்பு. தெலங்கானாவைப் பொறுத்தவரை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி செல்வாக்குடன் உள்ளது. இங்குள்ள 17 தொகுதிகளில் அதிக அளவில் இக்கட்சி வெல்வதற்கு வாய்ப்புண்டு. ஆக தென் மாநிலங்களில் உள்ள  130 தொகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பா.ஜ.க-வினால் வெல்லமுடியும் என்கிற நிலைமையே உள்ளது.

இந்த மாநிலங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க-களுக்கு அதிக எண்ணிகையில் தொகுதிகள் கிடைப்பது கடினம். வெற்றிகரமான தோல்வியைத் தழுவிய சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் ஆகிய இந்தி மாநிலங்களின் இதயப் பகுதியில் மொத்தமுள்ள 65 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்கு சதவிகிதம் சம பலத்துடன் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி வரவிருக்கும் நாள்களில் எப்படி ஆட்சி செய்கிறதோ அதைப் பொறுத்தே மக்களவைத் தேர்தலில் தொகுதிகள் தீர்மானிக்கப்படும். வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 25 தொகுதிகளைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கஷ்டப்படும். இந்த மாநிலங்களை எப்படி பா.ஜ.க தக்கவைக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை 48 தொகுதிகளில் பா.ஜ.க கணிசமான தொகுதிகளை வெல்ல வாய்ப்புண்டு. பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் மாநிலங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளன. பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கடுமையான போட்டியை பா.ஜ.க சந்திக்க வேண்டியிருக்கும், 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ஜ.க 2014 தேர்தலில் கைப்பற்றியது, காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 தொகுதிகள் கிடைத்தன. இந்த முறை காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ்யாதவின் சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புண்டு.

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ளது. இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் பெரிதாக வெற்றி பெற வாய்ப்பில்லை.

மாநிலக்கட்சிகளே தீர்மானிக்கும்

2014 தேர்தலைப்போல இந்தமுறை பா.ஜ.க-வினால் எளிதாக வெற்றிபெற முடியாது. அதுபோல, காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் இப்போது இல்லை. சரியான கூட்டணியைக் காங்கிரஸ் அமைக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றியை சுவைக்க முடியும். தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுத்துப் போனால் காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியும்.  காங்கிரஸுக்கு இப்போதைக்கு இருக்கிற பெரிய பிரச்னையாக இந்தத் தொகுதிப்பங்கீடு தான் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.

பா.ஜ.க இழந்துவிட்ட இமேஜைத் தூக்கி நிறுத்த, அமித்ஷா தலைமையில் அடுத்தகட்ட எமர்ஜென்ஸி நடவடிக்கைகளில் நிச்சயம் இறங்கும். பிரதமர் மோடி இனி இருக்கும் சில மாதங்களில் மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் “அச்சே  தின்”  கொண்டுவர, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கலாம்.

2014-ஐப்போல இல்லை இன்றைய காட்சிகள். யார் வென்றாலும், அடுத்து அமையப்போவது கூட்டணி ஆட்சி என்கிற நிலைதான் கண்ணெதிரே தெரிகிறது. புத்தெழுச்சியோடு பலம்பெற்றுள்ள மாநிலக்கட்சிகள்தாம் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கிற சக்திகளாக இருக்கப்போகின்றன. அந்த உதிரிகளின் ஆதரவு யாருக்கோ அவருக்கே நாற்காலி!   

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள 30 தொகுதிகளுக்கான மக்களவை இடைத்தேர்தலில் வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. மற்ற இடங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் மற்றும் ஒருசில இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு