Published:Updated:

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பார்வையிட இந்த ஆண்டு வருவதா?: கருணாநிதி வேதனை

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பார்வையிட இந்த ஆண்டு வருவதா?: கருணாநிதி வேதனை
கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பார்வையிட இந்த ஆண்டு வருவதா?: கருணாநிதி வேதனை
கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பார்வையிட இந்த ஆண்டு வருவதா?: கருணாநிதி வேதனை

சென்னை: காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை பார்வையிட மத்திய நிபுணர் குழுவினர், இந்த ஆண்டு வந்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளதோடு, மத்திய குழுவின் இந்த ஆய்வு கண்துடைப்போ என்று விவசாயிகள் சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள கருணாநிதி," தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு; சாகுபடிக்கு காவிரியில் நீர் வராத காரணத்தாலும், மழை பொய்த்துப் போய் விட்டக் காரணத்தாலும், விவசாயிகள் எல்லாம் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். ஆனால் தமிழக அரசு சாகுபடி காலம் எல்லாம் முடிந்து, அறுவடை காலமும் போன பிறகு, அமைச்சர்கள் குழுவினரை அனுப்பி வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடச் செய்தது. அமைச்சர்கள் முதலில் ஒரு சில மாவட்டங்களை மட்டும் பார்வையிட்டு திரும்பினார்கள். பின்னர் மற்ற மாவட்ட விவசாயிகள் எல்லாம் குரல் எழுப்பிய பிறகு அந்த மாவட்டங்களுக்கும் வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றார்கள்.

குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் இரண்டு கட்டங்களாக விவசாயிகளுக்கான நிவாரணங்களை அறிவித்ததோடு, மத்திய அரசு இந்த நிவாரணங்களுக்காக 19 ஆயிரத்து 665 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்திட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

##~~##
முதலமைச்சரின் கோரிக்கைபடி வறட்சி நிவாரணப் பார்வையாளர் குழு ஒன்று மத்திய அரசிலிருந்து வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட தமிழகத்திற்கு வந்துள்ளது.
வறட்சி ஏற்பட்டது கடந்த ஆண்டு; அதற்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்தது கடந்த மாதம்; மத்திய அரசின் வறட்சி நிவாரணப் பார்வையாளர் குழு வருகை தந்திருப்பது இந்த மாதம்! வறட்சி ஏற்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு அந்தப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் நல்லவேளையாக அந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டு தொடங்கிய வறட்சி நிலை இன்னமும் நீடித்த நிலையிலே தான் உள்ளது. அதிலே எந்த மாற்றமும் இல்லை. மழையும் இல்லை. எனவே வறட்சியைப் பார்வையிட வந்தது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அந்தப் பார்வையாளர் குழு வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்டது பற்றி இரண்டு நாட்களாக வருகின்ற செய்திகள் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக இல்லை.
காவிரியில் தண்ணீர் வராததால், வறட்சியால் வெடித்துப் போன விவசாய நிலங்களை ஆய்வுக் குழு பார்வையிடவில்லை; கலங்கி நிற்கும் கடை மடை விவசாயிகளிடம் குழு விசாரிக்கவும் இல்லை என்று செய்தி வந்துள்ளது.
நாம் ஏற்கனவே வலியுறுத்தி வெளியிட்ட கோரிக்கைகள் பற்றியெல்லாம் மணக்குடி என்ற ஊரில் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் நினைவுபடுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; நிவாரணத் தொகையுடன் காப்பீட்டுத் தொகை, 8,400 ரூபாயை மாநில அரசு இணைத்துக் கொண்டது ஏற்புடையதாக இல்லை; 8,400 ரூபாயை மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே மத்திய அரசின் வறட்சி நிவாரண பார்வையாளர் குழுவினர் மத்திய அரசின் சார்பில் நிவாரணத் தொகையை கணிசமாக மாநில அரசுக்கு அளித்திட பரிந்துரை செய்வதோடு, விவசாயிகளின் இந்த முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.