மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)

என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)

“கட்சியில் முக்கியத்துவம் இல்லை... என்னால் சாதிக்க முடியவில்லை!”

#EnnaSeitharMP
#MyMPsScore

சிதம்பரம் ரயில் நிலைய ஆய்வுக்கு வந்திருந்த சந்திரகாசி எம்.பி-யை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர், “யார் நீங்க... என்ன வேணும்?” என்று கேட்டிருக்கிறார். “என்னைப் பார்த்தா யாருன்னு கேட்கிறே... நான் இந்தத் தொகுதி எம்.பி-ன்னு தெரியாதா?” என்று சந்திரகாசி எகிற... உடனே அதிகாரிகள் ஓடிவந்து சமாதானம் செய்துள்ளனர். வடிவேலு காமெடி போல, ‘நானும் எம்.பி-தான்’னு அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார் சந்திரகாசி.

நாடாளுமன்றத்துக்குள் சந்திரகாசியை அனுப்பிவைத்த சிதம்பரம் தொகுதி, இந்த நாலரை ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததா? தொகுதியை வலம் வந்தோம்.

“சந்திரகாசி எம்.பி-யா? யார் அவர்?” என்ற கேள்விகளுடன் ஆரம்பித்தார், தி.மு.க-வின் மாநில கொள்கைப்பரப்பு துணைச் செயலாளரான ஜெயங்கொண்டம் பெருநற்கிள்ளி. தொடர்ந்து பேசிய அவர், “இப்படியொரு எம்.பி இருக்கிறார் என்று இந்தத் தொகுதியில் யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு, தொகுதியிலிருந்து அவர் விலகிப்போய்விட்டார். மிகவும் பின்தங்கிய இந்தப் பகுதியில், ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர முந்தைய தி.மு.க அரசு முடிவுசெய்தது. அதற்காக, குன்னத்தில் இடம் தேர்வுசெய்யப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் நேரத்தில் ஆட்சி போய்விட்டது. திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர எந்த முயற்சியையும் எம்.பி எடுக்கவில்லை. ஜெயங்கொண்டம், ஆத்தூர், சேலம் வழியாக ரயில் பாதை அமைக்கத் திட்ட மதிப்பீடு செய்து, அதுவும் நின்றுபோனது.         எம்.பி-யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளைச் செய்து, அவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை” என்று வருத்தத்துடன் பேசினார்.

என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)

சமூக ஆர்வலரான செல்வமணியிடம் பேசினோம். “ஆசியாவிலேயே ஒரே இடத்தில் ஒன்பது சிமென்ட் தொழிற்சாலைகள் இருப்பது அரியலூரில்தான். அதை அடிப்படையாக வைத்து, கட்டுமானத் தொழிலில் முக்கிய வியாபாரத்தலம் ஒன்றை உருவாக்கியிருக்கலாம். குன்னத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டுவர, 6,000 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொகுதிக்கு உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் எம்.பி கொண்டுவரவில்லை. அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 6,000 மீட்டர் ஆழத்தில் எட்டு இடங்களில் மீத்தேன் எடுக்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே, சிமென்ட் தொழிற்சாலை சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போய்விட்டது. இந்த லட்சணத்தில் மீத்தேன் எடுக்க ஆரம்பித்துவிட்டால், இப்பகுதியில் மக்கள் வசிக்கவே முடியாமல் போய்விடும். அதைத் தடுக்க எம்.பி தவறிவிட்டார்” என்றார்.

ஜெயங்கொண்டம் நில உரிமையாளர் சங்கத்தின் செயலர் கலியமூர்த்தியிடம் பேசினோம். “ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்காக, 13 கிராமங்களைச் சேர்ந்த 9,500 விவசாயிகள் சுமார் 7,500 ஏக்கர் விளைநிலங்களை அரசுக்குக் கொடுத்தார்கள். நிலங்களை விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு கையகப்படுத்தி, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அதற்குரிய நியாயமான பணத்தை அரசு கொடுக்க முன்வராததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். 2010-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும்,  இன்றுவரை எங்களுக்கு அரசு இழப்பீடு தரவில்லை. மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இது தொடர்பாக எம்.பி-யிடம் பலமுறை முறையிட்டும் எங்களுக்கு உதவவில்லை” என்றார் வேதனையுடன்.
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், “எங்க சங்கத்துல 750 உறுப்பினர்கள் இருக்கோம். ‘பசுமை வீடு திட்டத்தில் மூன்று சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்’ என்றார்கள். அது நிறைவேற்றப்பட வில்லை. 40 சதவிகிதத்துக்கும் மேல் ஊனமடைந்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று சொன்னதையும் செய்யவில்லை. 2012-ல் எனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்தார்கள். இன்றுவரை இடம் கொடுக்கவில்லை. வெறும் காகிதத்தில் வீடு கட்ட முடியுமா? ‘எப்போது இடம் தருவீர்கள்?’ என்று கேட்டால், ‘இடம் வழக்கில் இருக்கு’ என்கிறார்கள். எம்.பி நிதியிலிருந்து ஒரு சிலருக்கு மூன்று சக்கர வண்டி கொடுத்தார்கள். எம்.பி-யைப் பார்க்கும்போதெல்லாம் மனுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எதுவும் நடப்பதில்லை” என்றார்.

“குன்னத்தில் சின்னதாக ஒரு பஸ் ஸ்டாப், உயர்மின் கோபுர விளக்கு ஆகிய இரண்டையும் எம்.பி அமைத்துத் தந்திருக்கிறார். வேப்பூரில் உள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தைப் பிரித்து, குன்னத்தில் அமைத்துத்தருவதாகச் சொன்னார். ஆனால், செய்யவில்லை. வேளாண் விற்பனை நிலையம், புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்றார். வாரத்துக்கு இரண்டு நாள்கள்தான் குடிதண்ணீர் வருகிறது. பெரிய நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று கட்டினால், தினமும் தண்ணீர் கிடைக்கும். இதையெல்லாம் எம்.பி-யிடம் சொல்லிகிட்டுதான் இருக்கோம். எப்போது செய்து தருவாரோ? விரைவில் பதவி வேற முடியப்போகிறது” என்கிறார் குன்னத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-காரரான ராமலிங்கம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், “எங்கள் பகுதியில் முந்திரித் தொழிற்சாலை அமைத்துத் தருவதாக சந்திரகாசி வாக்குறுதி கொடுத்தார். கரும்பு விவசாயிகள் நலனுக்காக, சர்க்கரை ஆலை வேண்டுமென எம்.பி-யிடம் மனுக் கொடுத்தோம். ஓட்டு கேட்டு வந்த அவரை, அதன்பின் ஊருக்குள் பார்க்கவே முடியவில்லை” என்றார்.

சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “சிதம்பரம், முக்கியமான ஆன்மிகத் தலம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இங்கு உள்ளது. ஆனால், சிதம்பரம் வழியாகச் செல்லும் முக்கியமான விரைவு ரயில்கள் இங்கு நின்றுபோவதில்லை. ரயில் நிலையத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்காக, ரயில்வே அதிகாரிகளையோ, ரயில்வே அமைச்சரையோ எம்.பி சந்தித்து வலியுறுத்தியிருந்தால், ஏதாவது முன்னேற்றம் இருந்திருக்கும். அதை, எம்.பி செய்யவில்லை. தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாத எம்.பி-யாக இவர் இருக்கிறார். எம்.பி-யைப் பற்றிய தொகுதி மக்களின் கருத்தும் இதுதான்” என்றார்.

சந்திரகாசியை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் சுதா மணிரத்தினம், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு ஏற்று நடத்திவருகிறதே ஒழிய, கல்விக் கட்டணங்கள் எல்லாம் தனியார் நிறுவனம் போலவேதான் வசூலிக்கப்படுகின்றன. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்தப் பிரச்னைகளில் எம்.பி தலையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதைக் கண்டுகொள்ளவில்லை” என்றார்.

காவிரிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் இளஞ்சீரன், “அண்மையில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டோம். வட இந்திய எம்.பி-க்கள் பலரும் நேரில் வந்து ஆதரவு தந்தார்கள். ஆனால், டெல்டாவைச் சேர்ந்த சந்திரகாசி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. போராடிய எங்களைச் சந்திக்கவும் இல்லை’’ என்றார் வருத்தத்துடன்.

கீழப்பழுவூர், சிறுமத்தூர் ஆகிய கிராமங்களை எம்.பி தத்தெடுத்துள்ளார். அந்த இரண்டு ஊராட்சிகளில் பேருந்து நிறுத்தம், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. ‘‘கொழை என்ற ஊராட்சி, தத்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டதுடன் சரி, அங்கே எம்.பி தலைகாட்டியதே இல்லை” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சந்திரகாசி     எம்.பி என்ன பதில் சொல்கிறார்?

“அரியலூரில் ரயில்வே மேம்பாலப் பணியை, பெருமுயற்சி எடுத்துச் செய்துமுடித்துள்ளேன். திறப்பு விழாவுக்கு ரயில்வே அமைச்சரிடம் தேதி கேட்டுள்ளேன். சிதம்பரத்திலும், அரியலூரிலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை. சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலைத் திட்டம் கொண்டுவந்திருக்கிறேன். மாற்றுத்திறனாளி களுக்கு மூன்று சக்கர வண்டிகள், பேருந்து நிலையங்கள், உயர் மின் கோபுரங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு நிலத்தைக் கையகப்படுத்தித் தந்தால்தான், இழப்பீடு தொடர்பாக தலையிட முடியும் என்கிறது மத்திய அரசு. வழக்கு காரணமாக முடித்துத் தர முடியவில்லை என்கிறது மாநில அரசு. இதில் நான் என்ன செய்ய முடியும்? குன்னத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க தி.மு.க ஆட்சியில் தேர்வுசெய்த இடத்தில் மண் பரிசோதனை செய்தபோது, கட்டடம் கட்டத் தகுதியான இடம் இல்லை எனத் தெரியவந்தது. அதனால், மருத்துவக் கல்லூரி கொண்டு வர முடியவில்லை. தனியார் முந்திரித் தொழிற்சாலை இருப்பதால், அரசு முந்திரித் தொழிற்சாலை அமைக்க முடியவில்லை. மாநில அரசின் திட்டங்களை லோக்கல் எம்.எல்.ஏ-க்கள் செய்வார்கள். இதில் நான் தலையிடுவதில்லை. இதனால், ‘எம்.பி-யைப் பார்க்க முடியல’ன்னு மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் கட்சியில் எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால், என்னால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. அதேநேரம், என்னால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறேன்” என முடித்தார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/  என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- மு.இராகவன், ஜி.சதாசிவம்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)
என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)
என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

டலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்... அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், அரியலூர்... பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ளன. சந்திரகாசி எம்.பி-யின் வீடு, குன்னம் தொகுதியில் உள்ளது. “நான் அலுவலகமோ, உதவியாளரோ வைத்துக்கொள்ளவில்லை. மக்களின் குறைகளைக் கேட்க, ஆங்காங்கே உள்ள  அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களைப் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்கிறார் சந்திரகாசி.

என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)
என்ன செய்தார் எம்.பி? - சந்திரகாசி (சிதம்பரம்)