Published:Updated:

`பணிக்காலம் முடிந்ததாக எடுத்துக்கொள்ளவும்’ - ராஜினாமா செய்தார் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா..!

`பணிக்காலம் முடிந்ததாக எடுத்துக்கொள்ளவும்’ - ராஜினாமா செய்தார் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா..!
`பணிக்காலம் முடிந்ததாக எடுத்துக்கொள்ளவும்’ - ராஜினாமா செய்தார் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா..!

சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு வற்புறுத்தி அவரைப் பதவியிலிருந்து நீக்கியது . அவருக்குப் பதில் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக அலோக் வர்மா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணிக்காலம் முடியும் வரை அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், பிரதமர் இல்லத்தில் நியமனக் குழு ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி சார்பாக மல்லிகார்ஜுன கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் அலோக் வர்மாவை மீண்டும் சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ இயக்குநர் பதவிக்குப் பதிலாக அலோக் வர்மா தீயணைப்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ``இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளவும். தீயணைப்பு  இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் ஏற்கெனவே கடந்து விட்டேன்” என அலோக் வர்மா மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக  கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, `` மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றது. தன்னுடைய அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றது ” எனக் கூறியுள்ளார்.