Published:Updated:

`போலீஸும் இல்லை என்கிறார்கள்; சிசிடிவியும் வேலை செய்யவில்லையா?’ - கொடநாடு விவகாரத்தில் ஆ.ராசா கேள்வி

`போலீஸும் இல்லை என்கிறார்கள்; சிசிடிவியும் வேலை செய்யவில்லையா?’ - கொடநாடு விவகாரத்தில் ஆ.ராசா கேள்வி
`போலீஸும் இல்லை என்கிறார்கள்; சிசிடிவியும் வேலை செய்யவில்லையா?’ - கொடநாடு விவகாரத்தில் ஆ.ராசா கேள்வி

கொடநாடு மர்ம மரணங்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தி.மு.க அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பத்திரிகையாளர் மேத்யூ, கொடநாடு தொடர்பாக கொடுத்த பேட்டியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும் என கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது. அந்தப் புகார் விசாரிப்பதற்கு முன் சில உண்மைகள் கொண்டுவர விரும்புகிறோம். இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது என்ன என்ன நடந்தது என்ன செய்தார்கள் என்ற கோணத்திலும், நடந்த சம்பவங்களின் கோர்வைகளை இணைத்து அனுமானத்தின்படி விசாரணை தொடரலாம். உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இரண்டு கோணங்களிலும் விசாரித்தால், எடப்பாடி பழனிசாமி தான் வழக்கின் குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்கான ஆதாரம் கிடைக்கும். கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். அதிலிருந்து அடுத்த இரண்டு மாதத்தில் சசிகலா தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறார். இதையடுத்து, எடப்பாடி முதல்வராகிறார். அடுத்த இரண்டு மாத்ததில் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து, டிரைவர் கனகராஜ் மரணமடைகிறார். அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் சயன் என்பவர் குடும்பத்தோடு கார் விபத்தில் மனைவி மக்களை பறிகொடுத்து தப்பிக்கிறார். கொடநாடு பங்களாவுக்கு சிசிடிவி கேமரா இன்சார்ஜ் தினேஷ் தற்கொலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சயன் கூறும்போது, `கொடநாட்டில் உள்ள ஆவணங்கள், கம்யூட்டர் மென்பொருள்கள், பென்ட்ரைவ், விவரங்கள் ஆகியவை எடப்பாடி பழனிசாமி கூறியதால்தான் நானும், கனகராஜூம் சென்றோம்’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இரவு நேரத்தில் கனகராஜ் பேப்பர் வெயிட் எடுக்க என்ன காரணம். இது ஒரு பார்வை. கொடநாடு எஸ்டேட் சொத்துகுவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களில் பிரதான சொத்து. அதை ஜெயலலிதா கேம்ப் ஆபீஸாக பயன்படுத்தினார். தலைமை செயலகத்திலிருந்துகொண்டு செய்யும் பணிகளை அவர் அங்கே செய்துள்ளார். அப்படியான இடத்தில் சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு போலீஸ் கூடவா இருந்திருக்கமாட்டார்கள்?. இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?. 27 சிசிடிவி கேமராக்களும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாததற்கு என்ன காரணம்?. இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமிதான் இதை செய்யச்சொன்னார் என சயன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கூட்டு சதி என்றால் இதில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமிதான். விசாரணையை சயன் என்பவரிடமிருந்து தொடங்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமி பெயர்தான் முதலில் குறிப்பிட வேண்டும். குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டும். வழக்கை இந்த அடிப்படையில்தான் விசாரிக்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும். முதல்வரும்கூட பேசுகையில், `எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை’ என்று கூறவில்லை. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனக் கூறி ஏன் தடுமாறுகிறார். கமிஷனரிடம் மனு கொடுத்தால், அவரே முதல்வருக்கு கீழ்தான் பணிசெய்கிறார். அப்படியிருந்தால் விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும். கேட்டால் தி.மு.க, முதல்வர் பதவில் அமர ஆசைப்படுகிறது என்கிறார்கள்.

நாங்கள் மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சியில் அமர்வோம். முதல்வர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சயனிடம் முறையாக விசாரிக்க வேண்டும். தெஹல்காவுக்கும் எங்களுக்கு எதுவும் சம்பந்தமுண்டா?. இதை நாங்கள் செய்தோம் என்பது வேடிக்கை. இப்படியான குற்றச்சாட்டுகள் வரும்போது எதிர்க்கட்சி எப்படி பார்த்துக்கொண்டிருக்கும். முகத்திரையை கிழிக்கும். விசாரணை சரியாக நடக்கவில்லை என்றால் அடுத்த நடவடிக்கையை தி.மு.க எடுக்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிலிருந்து ஆவணங்கள், பென்ட்ரைவ் கைப்பற்றப்பட்டனவே, அதில் இருந்தது ஜெயலலிதா பற்றிய தகவல்களா?. அதேபோல், அதிலிருந்த தகவல்கள் அமைச்சர்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ஆவணங்களா என விசாரித்தால் தான் தெரியும். முதல்வர் மீது குற்றச்சாட்டு இருக்கு. குறைந்தபட்சம் உள்துறை இலாக்காவையாவது அவர் வேறொருத்தருக்கு கொடுக்க வேண்டும். காவல்துறை இலாக்காவையும் கொடுக்க வேண்டும்’’என்றார்.

கொடநாடு சம்பவங்கள் தொடர்பாக வீடியோவை வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்பட வீடியோவில் உள்ளவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.