Published:Updated:

சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க பிரதமர் முடிவு?

சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க பிரதமர் முடிவு?
சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க பிரதமர் முடிவு?
சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க பிரதமர் முடிவு?

புதுடெல்லி: நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருவதால், மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வனி குமார் கவனித்து வந்த சட்டத் துறையை மூத்த அமைச்சர் ஒருவரிடம் கூடுதல் இலாகாவாக ஒப்படைக்கலாமா அல்லது சிறிய அமைச்சரவை மாற்றத்தை செய்து அஸ்வினி குமாருக்குப் பதிலாக மற்றொருவரை நியமிக்கலாமா என பிரதமர் ஆலோசித்து வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை பார்வையிட்டு திருத்தம் செய்ததற்காக, சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட தேதிக்கு  2 தினங்களுக்கு முன்னதாகவே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே அஸ்வனி குமாரையும், உறவினரின் லஞ்சப் புகாரால் சர்ச்சையில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலையும் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புவதாகவும், ஆனால் தனக்கு நெருக்கமான அவ்விருவரையும் பதவி நீக்கம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்றும், இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

##~~##
இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை அஸ்வனி குமார் பார்வையிட்டு திருத்தம் செய்ததற்காக, கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனால் அஸ்வனி குமாரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரதமருக்கு அதிகரித்ததை தொடர்ந்தே, அவர் மேற்கூறிய முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பிரதமருடன் அஸ்வனி குமார் சந்திப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய மந்திரி அஸ்வனி குமார் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது தன் மீது எந்த தவறும் இல்லை என்று பிரதமரிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. அதன்பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாஹன்வதியும் பிரதமரை சந்தித்துப் பேசினார்.


ஜனாதிபதியுடன் ஆலோசனை

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் நாடாளுமன்ற கூட்டம் குறித்து ஜனாதிபதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும், குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பன்சால் ஆகியோரை நீக்கிவிட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அப்போது பிரணாப்புடன் விவாதித்ததாக தெரிகிறது.

அஸ்வனி குமார் மறுப்பு

இதனிடையே தாம் பிரதமரை சந்தித்துப் பேசவில்லை என அஸ்வனி குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.