மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)

என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)

பரிவுடன் பேசுகிறார்... பணிகள் நடப்பதில்லையே!

#EnnaSeitharMP
#MyMPsScore

டிப்படையில் ஓர் வழக்கறிஞரான செல்வக்குமார சின்னையன், அ.தி.மு.க-வின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் இருந்துவருகிறார். ஈரோடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி-யான இவரை, தொகுதி மக்களால் எளிதில் அணுக முடிகிறது. பூங்காவில் பொதுமக்களுடன் நடைப்பயிற்சி செல்கிறார். மனுக்கள் தரும் மக்களிடம் பரிவுடன் பேசுகிறார். ஆனால், அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில்லை. ஈரோடு அ.தி.மு.க-வினர், எம்.பி-யை விட்டுச் சற்று விலகியே நிற்கிறார்கள். சொந்தக் கட்சியினர் இவரைக் கண்டுகொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இவரை எம்.பி-யாகத் தேர்வுசெய்த ஈரோடு தொகுதி மக்களை இவர் கண்டுகொண்டிருக்கிறாரா?

“இந்தியாவின் மொத்த மஞ்சள் தேவையில் 25 சதவிகிதம், ஈரோடு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், ஈரோட்டில் மஞ்சளுக்கு ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகமோ, மஞ்சளில் இருந்து மதிப்புக் கூட்டி பொருள்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளோ இல்லை. காங்கேயம், மூலனூர் பகுதிகளில் முருங்கை விவசாயம் அதிகளவு நடக்கிறது. இங்கு முருங்கை பவுடர் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கலாம். இப்படி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக எம்.பி எதுவும் செய்யவில்லை. ஜவுளிப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஈரோடு மக்களின் கோரிக்கை பற்றி டெல்லியில் இவர் பேசவில்லை. விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தத் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள். 

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி, “ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்காலை நம்பியே உள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் உற்பத்தியாகும் நீர், கேரளாவுக்குள் நுழைந்து சுமார் 180 டி.எம்.சி கடலில் கலக்கிறது. தமிழக - கேரள எல்லையில் தடுப்பணைகளைக் கட்டி, அந்த நீரைப் பவானிசாகர் அணைக்குக் கொண்டுவந்தால், கீழ்பவானி பாசன விவசாயிகளின் நீர் பற்றாக்குறை தீரும். இந்தத் திட்டத்துக்காக எம்.பி நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)

நீரோடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிலவன், “ஈரோடு, நாமக்கல், திருப்பூர் பகுதிகளில் இயங்கும் சாய, தோல் தொழிற்சாலைகளால் கங்கையைவிட காவிரி ஆறு 600 மடங்கு மாசடைந்துவிட்டது என்று சமீபத்திய ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரைச் சுத்திகரிக்கப் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கை. எம்.பி இதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வருவதாகச் சொன்னார்கள். பிறகு மதுரைக்குப் போய்விட்டது. அதை, பெருந்துறைக்கு கொண்டுவர எம்.பி எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைப் பொதுச்செயலாளர் சிவநேசன், “பருத்தி, நூல் விலை ஏற்ற இறக்கத்தால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தீர்வாகப் பருத்தி மற்றும் நூல் வங்கிகளை அமைக்க வேண்டும்; ஜவுளி பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று பத்து வருடங்களாகக் கேட்கிறோம். எம்.பி எதுவும் செய்யவில்லை. ஈரோடு - நாமக்கல் - திருப்பூர் நகரங்களை இணைக்கும் ரிங் ரோடு பணிகள் பாதியில் நிற்கின்றன. ஈரோடு புறநகர்ப் பகுதியில் ரயில் நிலையம், ரயில்வே குடோன் அமைக்காததால் ஈரோடு நகருக்குள் தினமும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நுழைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ‘கோவை - ஈரோடு - சென்னைக்கு இரண்டு அடுக்கு மின்சார ரயில் சேவையை ஏற்படுத்திக் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதையும் அவர் செய்யவில்லை” என்றார்.

உப்பாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், “தாராபுரம் தொகுதியில் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி) மூலமாகத் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. உப்பாறு அணை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கிறது. இதனால், தாராபுரம் பகுதியில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. குடிநீருக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. மழைக்காலங்களில் அமராவதி அணையிலிருந்து வரும் உபரி நீரைத் திருப்பி, உப்பாறு அணையை ஒருமுறை நிரப்பினால் அடுத்த ஐந்து வருடங்களுக்குச் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் பிரச்னை இருக்காது. அதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை. மாறாக, தண்ணீரே இல்லாத உப்பாறு அணைக்குச் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில், கரை மற்றும் மராமத்துப் பணிகளைச் செய்திருக்கின்றனர்” என்றார். 

சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள எக்கட்டாம்பாளையம் ஊராட்சியை மூன்று மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்தார் எம்.பி செல்வக்குமார சின்னையன். அங்கு அடிப்படை வசதிகளைத் தவிர, பெரிதாக எதையும் செய்யவில்லை. அங்குள்ளவர்களிடம் பேசியபோது, “கிராமத்தைத் தத்தெடுத்தபோது ‘உங்க கிராமத்தைத்தான் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டப்போறேன்’ன்னு சபதம் போட்டாரு. ஆனா, இப்ப வரை அவர் எட்டிக்கூடப் பார்க்கலை. தினமும் இரண்டு தடவை மட்டும்தான் எங்க ஊருக்குள்ள பஸ் வரும். நல்ல ரோடும் முறையான பஸ் வசதியும் தேவை. மாடுகளுக்கு ஏதாவது பிரச்னைன்னா, 12 கி.மீ தூரத்தில் இருக்கும் குண்டடம் மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போகணும். எங்க கிராமத்திலேயே ஒரு கால்நடை மருத்துவமனை கொண்டுவரணும்’’ என்றனர்.

எம்.பி செல்வக்குமார சின்னையனிடம் பேசினோம். “தொகுதிப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். மக்களிடம் 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை வாங்கி, பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்திருக்கிறேன். ஈரோடு கிழக்கு, மேற்குப் பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கான ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த, நாடாளுமன்றத்தில் பேசி, ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் நிதி வாங்கிக்கொடுத்தேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி வாங்கிக் கொடுத்திருக்கிறேன். பள்ளிபாளையம் பேப்பர்மில் அருகே உயர்மட்டப் பாலம், தரைமட்டப் பாலம் கட்ட ரயில்வே அனுமதி வாங்கிக்கொடுத்தேன். குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் விபத்துகளைத் தடுக்க சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். உப்பாறு அணைக்கு பி.ஏ.பி உபரி நீர் கிடைப்பதில் பிரச்னைகள் நிலவுவதால், அமராவதி அணை உபரி நீரை, கால்வாய் மூலமாக உப்பாறு அணைக்குக் கொண்டுவர அமைச்சர்களிடம் பேசிவருகிறேன். கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீரை சூரிய சக்தியைப் பயன்படுத்தி குழாய் மூலம் எடுத்துவந்து முருங்கத்தொழுவு கிராமத்தில் இருக்கும் 17 ஏக்கர் கோயில் குளத்தில் நிரப்பியிருக்கிறேன். இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் முதல் முயற்சி என்பதால், இந்தத் திட்டம் குறித்து தேசிய விருதுக்காக விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள். ஈரோடு மாவட்ட மின் பிரச்னைகளை தீர்க்க சுமார் 205 கோடி ரூபாயை அரசிடமிருந்து வாங்கிக்கொடுத்திருக்கிறேன். அந்த நிதியில்தான் ஈரோடு நகரில் தரைவழி மின் கேபிள் அமைக்கப்படுகிறது.

நான் தத்தெடுத்த கிராமங்களில் சமுதாயக் கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், சாலை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தியுள்ளேன். எக்கட்டாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை கலெக்டரிடம்  சொல்லியிருக்கிறேன். ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைப்பதில் விவசாய சங்கத்தினர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மஞ்சள் மதிப்புக் கூட்டும் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறேன். விவசாய விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் செல்வதைத் தவிர்த்து, தரை வழியாக மின் கேபிள் அமைக்கச் சொல்லி மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்திருக்கிறேன்.

சாய, தோல் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுவருகிறது.  விரைவில் பணிகள் தொடங்கும். ரிங் ரோடு பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆறு மாதங்களில் சாலைப் பணிகள் முடிந்துவிடும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கொடுமுடியிலும், நாகர்கோவில் பயணிகள் விரைவு ரயில் ஊஞ்சலூரிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளேன். அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் கொடுமுடியில் நிற்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். என் சொந்த ஊர், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ளது. ஈரோடு மேற்குத் தொகுதியில் என் வீடு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் அலுவலகம் உள்ளது. எனவே, தொகுதி முழுக்க பயணித்துவருகிறேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/  என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஆர்.பி., தி.ஜெயபிரகாஷ், நவீன் இளங்கோவன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)
என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)
என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

சா
ய மற்றும் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் ஈரோட்டில் பெருகிவரும் நோய்களைக் கட்டுப்படுத்த, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டைச் சேர்ந்த அர்சத் என்பவரை எம்.பி அலுவலகத்துக்கு மனு அளிக்க வைத்தோம். ஐந்து நாள்கள் கழித்து, ‘உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்’ என போன் மூலமாக எம்.பி-யின் உதவியாளர் பதில் சொல்லியிருக்கிறார். ஈரோடு விருந்தினர் மாளிகையான காளிங்கராயன் இல்லத்தில் எம்.பி-யின் அலுவலகம் இருக்கிறது. எம்.பி டெல்லிக்குச் செல்லாத நாள்களில், தவறாமல் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறார்.

என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)
என்ன செய்தார் எம்.பி? - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)