Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராக உதவித் தொகை: ஜெயலலிதா அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராக உதவித் தொகை: ஜெயலலிதா அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராக உதவித் தொகை: ஜெயலலிதா அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராக உதவித் தொகை: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வுக்குத் தயாராக ஆதி திராவிட மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில்,"மாநில அரசால் செயல்படுத்தப்படும் மாநில போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம், விடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை, குடிமைப் பணி பயிற்சி மையத்தில் சேர்க்கை, உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை உட்பட, அனைத்து திட்டங்களுக்கும் தற்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் கூடுதலாக 30,000 மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

தற்போது முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள கல்லூரியில் தங்கி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு தலா 18,000 ரூபாயும், விடுதியில் தங்கி பயிலாத மாணாக்கர்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள ஆதி திராவிட  மாணவ – மாணவியருக்கு இந்தத் தொகை போதாது என்பதைக் கருத்தில் கொண்டு, முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் 700 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ – மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 50,000/- ரூபாய் வீதம்  4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

##~~##
தமிழகத்தில் தற்பொழுது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,300 ஆதி திராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக இடை நிற்றல் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், அதிக அளவு மாணாக்கர்கள் சேர்க்கையின் காரணமாக, வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் உள்ள இட வசதி, குளியல் அறை வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும்  52 ஆதி திராவிட நல விடுதிகள், 2 பழங்குடியின நல விடுதிகள் என மொத்தம்  54 விடுதிகளுக்கு 52 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
தற்பொழுது மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆதி திராவிட மாணாக்கர்களுக்கு முதன்மைத் தேர்வில் சிறப்பாக செயல்பட அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற ஏதுவாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் தொகுதி I, முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆதி திராவிட மாணாக்கர்களுக்கு, அவர்கள் முதன்மைத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற ஏதுவாக தலா 50,000/- ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இவ்வாறு உதவித் தொகை வழங்கும் இத்திட்டம் முதன் முறையாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அறிமுகப் படுத்தப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.