Published:Updated:

கொடநாடு வீடியோ விவகாரம்! - ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

கொடநாடு வீடியோ விவகாரம்! - ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்
கொடநாடு வீடியோ விவகாரம்! - ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், வீடியோ வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவரிடம் முறையிட இருப்பதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் சவால் விடுத்திருந்தார். 

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜ்பவனில் மாலை 5.30 மணிக்கு ஆளுநரை ஸ்டாலின் சந்திக்க இருப்பதாகத் தெரிகிறது.