Published:Updated:

`சயன், மனோஜ் கைது விவகாரத்தில் எனக்குத் துளியும் தொடர்பில்லை!’ - தமிழக செய்தியாளர் மறுப்பு

`சயன், மனோஜ் கைது விவகாரத்தில் எனக்குத் துளியும் தொடர்பில்லை!’ - தமிழக செய்தியாளர் மறுப்பு
`சயன், மனோஜ் கைது விவகாரத்தில் எனக்குத் துளியும் தொடர்பில்லை!’ - தமிழக செய்தியாளர் மறுப்பு

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர் கூலிப்படைத் தலைவன் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார். குற்றச்சாட்டுகளைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததோடு, அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சயன், வாளையார் மனோஜ் ஆகியோரை டெல்லியில் தமிழக போலீஸார் கைது செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் இருக்கும் இடம் குறித்த தகவலைத் தகவலைth தமிழகத்தைச் சேர்ந்த டெல்லி செய்தியாளர் ரமேஷ் ஹனிகுமார் தமிழக போலீஸுக்குச் சொன்னதாக மேத்யூ சாமுவேல், தன் ஃபேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பதிவில், ``சயன், மனோஜ் ஆகியோர் இருக்குமிடம் குறித்த விவரங்களைத் தமிழகப் போலீஸுக்கு அளித்து சகப் பத்திரிகையாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார்’ என்று மேத்யூ சாமுவேல் கூறியிருந்தார்.

மேத்யூவின் பதிவுக்குச் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் அளித்துள்ள பதிலில், ``துவாரகா பகுதிக்கு மேத்யூ, சயன், மனோஜ் ஆகியோரைப் பேட்டி எடுத்தது உண்மைதான். ஆனால், நான் அங்கிருந்து சென்ற பிறகுதான், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸப் வாய்ஸ் அழைப்பில் மேத்யூஸ் இந்தத் தகவலை என்னிடம் சொன்ன பிறகுதான் எனக்கு அவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது. மேத்யூ சொல்வதுபோல நான் போலீஸுக்கு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை. மேத்யூஸ் வெளியிட்ட பதிவு முற்றிலும் தவறானது. ஒரு பத்திரிகையாளராக நான் உங்கள் பணியை மெச்சுகிறேன். சூழல் காரணமாக நீங்கள் என்னைச் சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். சக பத்திரிகையாளராக என்னுடைய விளக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்'' என்று பதிலளித்துள்ளார்.

இது தொடர்பான சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் ரமேஷ் ஹனிகுமாரிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``துவாரகா பகுதியில் காபி ஷாப் ஒன்றில் மேத்யூ, சயன், மனோஜ் ஆகியோரிடம் பேட்டி எடுத்துவிட்டு நான் கிளம்பிவிட்டேன். எதிர்ப் பக்கத்தில் என் காரை நிறுத்தியிருந்தேன். அலுவலகத்துக்குப் போனில் தகவல் கூறி, பேட்டியை அனுப்பிவிட்டு வாகனத்தில் இருந்து கிளம்பிய அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வாட்ஸப் வாய்ஸ் அழைப்பில் சயன், மனோஜ் ஆகியோரைப் 4 பேர் வந்து தூக்கிக்கொண்டுப் போய்விட்டதாக மேத்யூ என்னிடத்தில் சொன்னார்.

நான் மீண்டும் அந்த இடத்துக்குச் சென்றேன். அங்கே மேத்யூ உட்பட யாரும் இல்லை. மேத்யூவின் குழுவில் இருந்த ஷிவானி என்ற பெண் மட்டுமே அங்கே இருந்தார். அவரிடத்தில் கேட்டபோதுதான் உண்மை தெரிந்தது. சயனைக் கைது செய்தவர்கள். போலீஸ் வாகனத்தில் வரவில்லை தனியார் வாகனத்தில் வந்துள்ளனர் என்று. ஒரு வேளை எனக்கு முன்பாகவே காவல்துறையினர் அங்கு வந்திருக்கலாம். மீடியாக்கள் அந்த இடத்தில் இருந்ததால் பொறுத்திருந்து, நாங்கள் புறப்பட்ட பிறகு, கைது செய்திருக்கலாம். இந்தக் கைது சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. போலீஸுக்குத் தகவல் அளிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை'' என்று உறுதிபடத் தெரிவித்தார்.