Published:Updated:

ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேருக்கு ஜாமீன்: ராமநாதபுரத்தில் தங்க நிபந்தனை

ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேருக்கு ஜாமீன்: ராமநாதபுரத்தில் தங்க நிபந்தனை
ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேருக்கு ஜாமீன்: ராமநாதபுரத்தில் தங்க நிபந்தனை
ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேருக்கு ஜாமீன்: ராமநாதபுரத்தில் தங்க நிபந்தனை

சென்னை: ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் 362 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு  கடந்த மே 3 ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது, ஏற்கெனவே விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இருப்பினும் இவர்களை உடனடியாக வெளியில் விடுவித்தால், ஏற்கெனவே கலவரமாக உள்ள சூழ்நிலையில், மீண்டும் கலவரம் நடக்கும் என்று காவல்துறை தெரிவித்த அச்சத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு நிபந்தனை விதித்தார்.

##~~##
அதன்படி, அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வேறொரு மாவட்டத்தில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட்டு வரவேண்டும் என்று கூறினார்.
அப்போது ஜி.கே.மணி தரப்பில், சேலத்தில் தங்கி கையெழுத்து இடுவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுவும் அவர்கள் கட்சியினர் அதிகம்பேர் இருக்கும் இடம் என்று ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேறு இடம் என்று அவர்கள் கூறினர்., தற்போதைய வெயில் காலத்தைக் கருத்தில்கொண்டு, குளு குளு வென இருக்கும் பொள்ளாச்சியில் தங்கி கையெழுத்திடுகிறோம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ராமநாதபுரத்தில் இவர்கள் 362 பேரும் தங்கியிருந்து, தினமும் நகர காவல் நிலையத்தில் 11 மணிக்கு கையெழுத்திட்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும், வழக்கை வரும் ஜுன் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.