Published:Updated:

பழையக் கூட்டாளிகள் தானாக வருவார்கள்! -கணக்குப் போடும் பா.ஜ.க

பழையக் கூட்டாளிகள் தானாக வருவார்கள்! -கணக்குப் போடும் பா.ஜ.க
பழையக் கூட்டாளிகள் தானாக வருவார்கள்! -கணக்குப் போடும் பா.ஜ.க

மிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  பாரதிய ஜனதா கட்சிக்கு இதுவரை எந்த தமிழக கட்சிகளும் பிடி கொடுக்கவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு விஷயங்களில் தமிழகத்துக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளதாகத் தமிழக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இதனால், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் 'கிடைப்பதும் கிடைக்காமல் போய் விடும்' என்று தமிழக கட்சிகள் கருதுகின்றன. 

பிரதமர் மோடி பழைய கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்தும் தே.மு.தி.க. , பா.ம.க போன்ற கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் விஷயத்தில் ஆற அமர யோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்கிற முடிவில் உள்ளனவாம். கடந்த 2014- ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தே.மு.தி.க, பா.ம.க ஆகியவை பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் தருமபுரியில் அன்புமணியும் வெற்றி பெற்றனர். ஆனால், தற்போதைய சூழலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் கிடைப்பதும் கிடைக்காமல் போய் விடும் என்று தமிழக கட்சிகள் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது. 

வரும் பொதுத்தேர்தலில் அதிமுக, பா.ஜ.க. தே.மு.தி.க, பா.ம.க ஆகியவை சேர்ந்து ஒரே அணியில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பது மோடி, அமித் ஷா வின் திட்டம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போது, அவரிடத்தில் தொடர்ந்து பா.ஜ.கவினர் பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான  பியூஸ் கோயல், கர்நாடக மாநில எம்.எல்.ஏ ரவி ஆகியோர் வெள்ளிக்கிழமை சென்னை வருகின்றனர். இங்கு அதிமுக தலைவர்கள், பா.ம.க தலைவர், தே.மு.தி.க முக்கியத் தலைகளைச் சந்தித்து பியூஸ் கோயல்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறைந்தபட்சம் பா.ம.க, தே.மு,தி.க தலைவர்களையாவது சமாதானப்படுத்தி விட வேண்டுமென்பது முதல்கட்ட திட்டமாம். 

தே.மு.தி.க, பா.ம.க கட்சிகளை வழிக்குக் கொண்டு வந்து விட்டால்,  அ.தி,மு.க வுக்கு வேறு வழியில்லை தங்களுடன்தான் கூட்டணி சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி கணக்குப் போடுகிறது. 'முன்பு ஜெயலலிதா முகத்துக்காக மக்கள் ஓட்டுப் போட்டார்கள். இதனால், தனித்துப் போட்டியிட்டாலும் அதிமுக வெற்றி பெற்றது. இப்போது அப்படியில்லை.... உங்கள் கட்சியில் மக்களைக் கவர்ந்து இழுக்கும் தலைவர்கள் இல்லை. எங்களுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே நீங்கள் திமுகவை பலவீனப்படுத்த முடியும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க-வின் வெற்றிக்குத் தேவையான உதவியைச் செய்யும் ' பா.ஜ.க தரப்பில் வாக்குறுதி அளிக்கவும் தயாராக உள்ளதாக கமலாலயம் வட்டாரங்கள் சொல்கின்றன.