Published:Updated:

``ஸ்டாலினுக்கு அந்தத் தகுதி இல்லை!'' - வைகைச் செல்வன்

``ஸ்டாலினுக்கு அந்தத் தகுதி இல்லை!'' - வைகைச் செல்வன்
``ஸ்டாலினுக்கு அந்தத் தகுதி இல்லை!'' - வைகைச் செல்வன்

பொங்கல் கொண்டாட்டச் செய்திகளையும் தாண்டி பொங்கிவழிகிறது, `கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம்!', இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியைப் பதவி விலகச் சொல்ல, ஸ்டாலினுக்குத் தகுதியில்லை என்கிறார் வைகைச்செல்வன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 2017 ம் ஆண்டு கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட விலைமதிப்புமிக்கப் பொருள்களை இந்தக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டதாக அப்போது செய்திகளும் வெளியாயின. மேலும், இந்தக் கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்ற எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார் என்றும் வெளியான செய்தி அனைவரையும் பதறவைத்தது.

இதையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஜெயலலிதாவின் கைக் கடிகாரங்கள் மற்றும் பேப்பர் வெயிட் போன்ற பொருள்கள்தான் கொள்ளைபோனதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தக் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரளக் கூலிப்படையினர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோகவே... இவ்விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விடை தெரியாக் கேள்வி மக்களிடையே திகிலை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தெஹல்கா இணையதளப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் மற்றும் கொடநாடு கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் ஆகிய இருவரும் கடந்த வாரம் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்'' என்ற அதிரடிக் குற்றச்சாட்டை சுமத்தினர். இதையடுத்து தமிழக அரசியல் களம் மறுபடியும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. 

இதையடுத்து குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க தலைவர்கள், இந்த அபாண்டக் குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாகக் கூறினர். இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாகக் காவல்துறையில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில்,  பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் பெறுவதற்காக அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் வைகைச் செல்வனிடம் பேசினோம்...

``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்துக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்யாக ஜோடிக்கப்பட்டது. பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிசெய்யும் வகையில், அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர். இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இதைப் பொறுக்கமுடியாத தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் எப்படியாவது அ.தி.மு.க-வுக்கு அவப்பெயரை வாங்கித் தந்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்கள். இவர்களது இந்தச் சதிச்செயலுக்கு ஊடக நபரும் துணைபோயிருப்பதுதான் வேதனையான செய்தி.

மக்கள் விரும்பும் வகையில் நல்லாட்சியை நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது இப்படியோர் அபாண்டக் குற்றச்சாட்டைச் சுமத்துவதும், அதற்காக அவரைப் பதவி விலகச் சொல்வதும் திட்டமிட்ட அரசியல் சதி. `கொடநாடு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' என்று மேடைதோறும் முழங்குகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். முதல்வரைப் பதவி விலகச் சொல்வதற்கு தங்களுக்குத் தகுதியிருக்கிறதா என்பதை முதலில் அவர் சிந்திக்க வேண்டும். 

தங்கள் குடும்பத்தை கோடீசுவர கோமான் குடும்பமாக மாற்றிக் காட்டும் முயற்சியில், மக்கள் பணத்தைக் கோடி கோடியாய் கொள்ளையடித்த தி.மு.க தலைமையைப் பற்றி நாடே அறியும். தங்களது சொந்தக் கட்சிக்குள்ளேயேகூட, இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் முன்னேறிவிட முடியாதபடி, தனித்தனியே அவரவருக்கு எதிரியை உருவாக்கி வளர்த்துவரும் கட்சிதான் தி.மு.க.! இதுமட்டுமா... தமிழக அரசியலில், வன்முறையை அறிமுகப்படுத்தியதும் வளர்த்தெடுத்ததும் தி.மு.க-தான் என்பதைக் கடந்த கால வரலாறு சொல்லும். உண்மை இப்படியிருக்க... எப்படியாவது அ.தி.மு.க-வைப் பழி சுமத்தி பதவி விலகச் செய்துவிடலாம் என்ற இவர்களது நரித்தந்திரங்கள் ஒருபோதும் எடுபடாது'' என்கிறார் உறுதியாக!