Published:Updated:

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

அருணன்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1920-ல் தாஷ்கண்டில் துவக்கப்பட்டது. இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களோடு தொடர்புகொண்டு, அவர்களைக் கொள்கைரீதியாகவும் அமைப்புரீதியாகவும் ஒன்றுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டது.

1922-ல் கயாவில் காங்கிரஸ் மகாசபை நடந்தபோது, அதில் பங்குகொண்ட சிங்காரவேலர், “மகத்தான உலக கம்யூனிஸ்ட் அமைப்பின் பிரதிநிதியாகப் பேசுகிறேன்” என்றார். காங்கிரஸின் வரலாற்றில் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று ஒருவர் அறிவித்துக்கொண்டு பேசியது அதுதான் முதல்முறை. கூட்டம் அசந்துபோனது.

காங்கிரஸின் இந்த மகாசபைக் கூட்டத்திற்கு, ரஷ்யாவிலிருந்து ஒரு திட்டத்தைத் தயாரித்து அனுப்பினார் அன்று கம்யூனிஸ்டாக இருந்த எம்.என்.ராய். அதில், `1. முழுமையான தேசிய சுதந்திரம், 2. அனைவருக்கும் வாக்குரிமை எனும் அடிப்படையில் ஒரு தேசியச் சபைக்குத் தேர்தல், 3. இந்திய சமஷ்டி குடியரசை அமைத்தல்” எனும் மகத்தான லட்சியங்கள் இருந்தன. காங்கிரஸ் முழு சுதந்திரம் கேட்காத காலம் அது. அப்போதே கம்யூனிஸ்ட்டுகள் அதைக் கேட்டது மட்டுமல்லாது, சுதந்திர இந்தியா எத்தகைய ஜனநாயகப் பாதையில் நடைபோட வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னது.

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

தாங்கள் போட்ட அத்தனை தடைக்கற்களையும் மீறி, கம்யூனிஸப் புயல் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்குள் புகுந்துவிட்டது கண்டு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அதிர்ந்துபோனார்கள். காற்றுக்கு ஏது வேலி, கடலுக்கு ஏது மூடி என்பதை மறந்தார்கள். ஆசை வெட்கமறியாது என அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினார்கள். எம்.என்.ராய், சிங்காரவேலர், எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது உள்ளிட்ட எட்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது, `கான்பூர் சதி வழக்கு’ எனப்பட்ட வெட்டரிவாளை வீசினார்கள். நியாயத்தின் மீதான தாக்குதலில் எப்போதும் அதற்குப் பாதகம் மட்டுமல்ல, சாதகமும் உண்டு. காரணம், அது நியாயம். தாக்குதல் அதை ஒருபுறம் முடக்கினால், மறுபுறம் அதன்மீதான அனுதாபத்தை அதுவரை இல்லாத பகுதியினரிடம் உருவாக்கும். அப்படித்தான் இந்தச் சதி வழக்கு கம்யூனிஸ்ட்டுகளின் இருப்பையும் அவர்களின் சிந்தனைகளையும் இந்திய அறிவுஜீவித அரசியல்வாதிகளிடம் கொண்டுசேர்த்தது. `இந்திய கம்யூனிஸ்ட் பாதுகாப்புக் குழு’ என்பதெல்லாம் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டது!

இந்தப் பின்புலத்தில்தான், 1925-ல் கான்பூரில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது, இந்திய மண்ணில், இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியது சிங்காரவேலர். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியது ஒரு தமிழர் என்பது சித்தாந்த ரீதியாகத் தமிழன் அன்றே முன்னணியில் இருந்தான் என்பதற்கான கச்சிதமான அடையாளம்.

அன்றிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி, கம்யூனிஸ்ட் கட்சியை உடனடியாகத் தடை செய்யவில்லை என்றாலும், அடுத்தடுத்து சதி வழக்குகள் போட்டு அதன் இயக்கத்தை முடக்கப் பார்த்தது. 1929-ல் `மீரத் சதி வழக்கு’ எனும் மற்றொரு வெட்டரிவாள் வீசப்பட்டது. 32 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். முந்தைய வழக்கில் எட்டு பேர் என்பதை நினைத்தால், இந்த அடக்குமுறைகளால் இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது விளங்கும்.

மீரத் கைதிகள் பலரும் ஆகஸ்ட் 1933-ல் சிறைமீண்டனர். அந்த ஆண்டு டிசம்பரில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஒன்று கல்கத்தாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வங்காளம், பம்பாய் போன்ற மாகாணங்களில் நடைபெற்ற எழுச்சிகரமான தொழிலாளர் போராட்டங்களுக்குக் கட்சி தலைமை தாங்கியது. கம்யூனிஸ்ட்டுகள் மீதான சதி வழக்குகள் எனும் ஆயுதம் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டதும், கம்யூனிஸ்ட் கட்சி மீதே நேரடியாகப் பாய்ந்தார்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள். 1934 ஜூலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

சட்டப்பூர்வமான தடை என்பது ஓர் அரசியல் கட்சிக்கு, அதன் இயங்குநிலைக்கு எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்றைய அரசியல் நோக்கர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அன்றைய அந்நிய ஆட்சி யாளர்களின் காட்டு தர்பாரில் அது பாரதூரமான பாதிப்புகளைத் தந்தது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் டுகளைப் பயங்கரமானவர்களாக ஆட்சியாளர்கள் சித்திரித்தபோது, அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வழிவகை இல்லை. ஒருவரின் வாயை பிளாஸ்திரி போட்டு அடைத்துவிட்டு, அவர் காதுபடத் திட்டும் கயமைத்தனம் நடந்தது. ஆனால், அதைச் செய்தது ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் என்பதால், அவர்களை வெறுத்த சுதந்திரப் போராளிகளுக்கு அதனாலேயே கம்யூனிஸ்ட்டுகள் மீது அனுதாபமும் பிறந்தது. அவர்களைப் பற்றிய உண்மையை அறிய அவர்கள் துடித்தார்கள். இதை நன்கு பயன்படுத்தியது கட்சி. தடைசெய்யப்பட்டதால் கட்சியைக் கலைக்கவில்லை; மாறாக, அதைத் தலைமறைவாக இயக்கினார்கள். தலையை வெளிக்காட்டியும் நீச்சலடிப்போம், தலையை உள்ளே வைத்தும் கரை சேருவோம் என்று காட்டினார்கள்.

மறுபுறம் `காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி’ என்பதில் இணைந்து, சட்டப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கினார்கள் கம்யூனிஸ்ட்டுகள். இது அங்கிருந்த இடதுசாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. கற்பனாவாத சோசலிஸ்ட்டுகளாக அல்லது நல்லெண்ண அடிப்படையிலான சமதர்மிகளாக இருந்த அவர்களில் பலர், அறிவியல்பூர்வ சோசலிஸத்தின்பால் அதாவது, மார்க்ஸியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். அப்படித்தான் இ.எம்.எஸ்., கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன், பி.சுந்தரய்யா, ஜீவா, பி.ராமமூர்த்தி போன்ற தென்னிந்தியாவின் சிவப்பு நட்சத்திரங்கள் உதயமாயின.

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

கெடுதலில் நன்மை என்பது இதுதான். ஒரு கதவை அடைத்தால், இன்னொரு கதவு திறக்கும் என்பது இதுதான். தடுப்பதாக நினைத்துக் கொண்டு, எதிராளிகளே காதலர்களைச் சேர்த்துவைத்த கதைதான். கட்சியைத் தடைசெய்தால், அதன் கதை முடிந்துபோகும் என்று கணக்கு போட்டார்கள் ஏகாதிபத்தியவாதிகள். நடந்ததோ விரிவாக்கம் - குறிப்பாகத் தென்னிந்தியாவில்.

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது, காங்கிரஸ் மகாசபைக்குள் மட்டுமல்லாது காங்கிரஸிலிருந்து வெளியேறி பெரியார் கண்டிருந்த சுயமரியாதை இயக்கத்திற்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிங்காரவேலர் அந்த இயக்கத்தோடு ஆரம்பகாலம்தொட்டே தொடர்புகொண்டிருந்தார். 1931-32ல் பெரியார் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ரஷ்யாவுக்குச் சென்றார்; இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவைக் கண்டு பேசினார். சிங்காரவேலரின் உதவி இந்தப் பயணத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

இந்தியா திரும்பிய பெரியாரின் நெஞ்சமெல்லாம் கம்யூனிஸ சிந்தனைகள் நிறைந்திருந்தன. சிங்காரவேலர் தயாரித்திருந்த `சுயமரியாதை இயக்கச் சமதர்ம கட்சியாரின் உத்தேசத் திட்டம்’ பெரியாரின் `குடி அரசு’ ஏட்டில் வெளிவந்தது. அதாவது, சமூகச் சீர்திருத்தத்தையும் சமதர்ம அரசியல்-பொருளாதாரச் சிந்தனையையும் ஒருங்கிணைக்கிற முயற்சியாக அது  இருந்தது என்பதை அந்தப் பெயரே சொல்லும். இதற்கு அந்நிய ஆட்சி ஒழிய வேண்டும் என்பது இயல்பான முன்நிபந்தனையாக இருந்தது வெள்ளிடை மலை.

நடப்பிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாகத்தான் பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் இருந்தன. `இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்று தலையங்கம் எழுதியதற்காக வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளால் சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார். 1934-ம் ஆண்டு மே மாதத்தில்தான் விடுதலையானார். இப்படிப்பட்ட சூழலில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட அறிவிப்பு வெளிவந்தது.

பெரியாருக்கு ஓர் இக்கட்டான நிலைமை உருவானது. `ஈரோட்டுத் திட்டம்’ எனப்பட்ட சிங்காரவேலர் தயாரித்துத் தந்ததுபடி தொடர்ந்து செயல்பட்டால், அவரின் சுயமரியாதை இயக்கமும் தடைசெய்யப்படும் ஆபத்து இருந்தது. அரசியல் விடுதலைக்கு முன்னுரிமையா, சமூக விடுதலைக்கு முன்னுரிமையா எனக் கேட்டுக்கொண்டு அவர் பின்னதையே தேர்வுசெய்தார். இரண்டையும் இணைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கருதவில்லை. பிராமணிய எதிர்ப்பு எனும் தனது இயக்கத்தின் மையச்சரடைப் பிடித்தபடி அவர் பயணப்படத் தொடங்கினார்.

இது சுயமரியாதை இயக்கத்திற்குள் ஒரு சலசலப்பை உருவாக்கவே செய்தது. பெரியாரின் இந்த நிலைப்பாட்டை சிங்காரவேலர் ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, அங்கிருந்த ஜீவா போன்றோரும் ஏற்கவில்லை. 1935-ல் நடந்த திருச்சி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் ஜீவா பேசினார்: “பாழாய்ப்போன தேர்தல் காரணமாகச் சுயமரியாதை வீரர்கள் பெரியமலை உச்சியிலிருந்து கீழே தரைக்கு வந்துவிட்டார்கள். பிராமணியத்தை ஒழித்து, அதை வேரறுத்துத் தூளாக்கிக் காற்றில் பறக்கவிட வேண்டும் என்று எண்ணுகிறவர்களில் நான் முதலானவன். சமதர்மம் நிலைநாட்டப்பட வேண்டும். சமதர்ம முறையில் ராஜாங்கம் ஏற்படுத்திப் பொருளாதார சமதர்ம இயக்கத்தை நிலைநிறுத்த வேண்டும்” (குடி அரசு 27-10-1935).

சமூகச் சீர்திருத்தத்தையும் அரசியல்-பொருளாதார விடுதலையையும் இணைக்கும் பாதையையே ஜீவா வலியுறுத்தியது இதில் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், பெரியார் சமூக விடுதலையையே பிரதான இலக்காகக் கொண்டு தொடர்ந்து பயணப்படவும், அவரிடமிருந்து விலகி ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி’யில் இணைந்தார் ஜீவா. அங்கிருந்தபோது, கம்யூனிஸ்ட்டுகளோடு தொடர்பு ஏற்படவும் ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக விரைவில் பரிணாமம்கொண்டார். இப்படித்தான் அந்தக் கட்சிக்கு ஒப்பற்ற மக்கள் தலைவர் ஒருவர் கிடைத்தார். அவருடைய பேச்சும் எழுத்தும் நிறைய இளைஞர்களைப் பொதுவுடைமைச் சிந்தனைகளின்பால் ஈர்த்தது. `ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்றபடி, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் போட்ட தடை எனும் தாழ்ப்பாள் அவர்களுக்கே வினையாக ஆனது. புதிது புதிதாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தலைவர்கள் கிடைத்தார்கள். 1930-40களில்தான் காங்கிரஸுக்கு உள்ளும் வெளியேயும் அந்தக் கட்சி ஒரு மாற்றுச் சக்தியாக விறுவிறுவென்று வளர்ந்தது.

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

ரசின் தடையை கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, திராவிட இயக்கமும் சந்தித்தது. அதனால், அதுவும் ஒருவிதத்தில் பலனே அடைந்தது. ஆட்சியாளர்களின் நோக்கம் அவர்களிடமும் பலிக்கவில்லை. என்ன வித்தியாசம் என்றால், அது அந்நியர் ஆட்சி என்றால், இது இந்தியர் ஆட்சி! எதிர் இயக்கங்களை, எதிர்க் கருத்துகளை முடக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. வெள்ளையர் ஆட்சியிடம் தாங்கள் அனுபவித்த அடக்குமுறையை எல்லாம் அதற்குள் மறந்துபோனார்கள் காங்கிரஸ் தலைவர்கள்!

1943-ல் வெளிவந்தது அண்ணா எழுதிய `ஆரிய மாயை.’ அபே துபோய் எனும் பிரெஞ்சுக்காரர், இந்தியா பற்றி 19-ம் நூற்றாண்டில் எழுதிய ஒரு நூலின் அடிப்படையில் பிராமணியத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைத் தொகுப்பு அது. தி.க-விலிருந்த காலத்தில், அண்ணா எழுதிய அந்தச் சிறு நூலை, அவர் அதிலிருந்து விலகி 1949-ல் தி.மு.க-வைத் தொடங்கிய காலத்தில் தடைசெய்தது காங்கிரஸ் அரசு. இடையில் அது பல பதிப்புகளைக் கண்டு பல்லாயிரம் பிரதிகள் விற்றிருந்தது.

இப்போது அதைத் தடைசெய்தது, குதிரை ஓடிப்போன பிறகு லாயத்தைப் பூட்டிய கூத்துதான். இப்போது தடைசெய்த நூலை அப்போது எழுதியதற்காக அண்ணாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை தரப்பட்டது. அந்த நாள் 18, செப்டம்பர் 1950. இதே நாளில் இன்னொருவருக்கும் இதேபோன்ற தண்டனை தரப்பட்டது. அது யார் என்றால், சாட்சாத் பெரியார்!

அவர் எழுதிய `பொன் மொழிகள்’ எனும் நூலையும் அரசு தடைசெய்தது. தடைசெய்த நூலை எழுதியதற்காக அவருக்கும் சிறைத்தண்டனை. இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், பத்து நாள்கள் கழித்து இருவரையும் ஒரே நாளில் விடுதலை செய்தது அரசு.

ஏன்? கருத்துரிமை மீது காங்கிரஸ் அரசு தொடுத்த இந்த அடக்குமுறை, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. நாடு சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. அதற்குள் சுதந்திரத்திற்கு மீண்டும் ஆபத்தா எனும் ஆவேசம் எங்கும் நிறைந்திருந்தது. அதன் விளைவாக அண்ணா, பெரியாரின் படைப்புகள் மேலும் பிரபலமாகவே செய்தன; அவர்களது அரசியல்-சித்தாந்த செல்வாக்கு வளரவே செய்தது. முடிவில் 1967-ல் காங்கிரஸ் அரசு வீழ்த்தப்பட்டு, அதே அண்ணா தலைமையில் அரசு அமைந்தது; அதைப் பெரியாருக்கு அவர் காணிக்கையாக்கிய அதிசயம் நிகழ்ந்தது. அதுமட்டுமல்ல, பெரியார் நூற்றாண்டை ஒட்டி, எம்.ஜி.ஆர் ஆட்சி இந்த இரு நூல்கள் மீதான தடையை நீக்கியது. இன்று இந்த இருவரின் படைப்புகளும் வரலாற்று ஆவணங்களாகிப் போயின, ‘இன்றும்-என்றும்’ என்று தொகுப்புகளாக வந்தவண்ணம் உள்ளன.

கட்சியை மட்டுமல்ல நூல்களைத் தடைசெய்தும் பயனில்லை என்பதைத்தான் இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன. ஓர் இயக்கத்தை இன்னோர் இயக்கத்தால்தான் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்தை இன்னொரு கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். தடை எனும் குறுக்கு வழியில் அவற்றை எதிர்கொள்ள முயன்றால், நேர்எதிரான விளைவுதான் கிடைக்கும் என்பதே படிப்பினை. ஆனால், அந்தப் பாடத்தை அன்று காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கற்கவில்லை. அவர்கள் எம்.ஆர்.ராதா நாடகங்களுக்கு வரிசையாகப் போட்ட முட்டுக்கட்டைகள் நமது கலை வரலாற்றில் ஒரு பெரும் களங்கம். அதை நிரந்தரமாக்குவதற்கு என்றே ஒரு சட்டமும் போட்டார்கள்!

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில், 1940-ல் எம்.ஆர்.ராதா போட்ட நாடகம் ‘போர்வாள்’. அதை காங்கிரஸ் ஆட்சியாகிய பிரகாசம் அரசு தடைசெய்தது. 1947-ல் கலைஞர் எழுதியது ‘தூக்குமேடை’ நாடகம். அதை ராதா நடத்தினார். அதன்மீது தனது கொள்ளிக்கண்ணை வைத்திருந்தது அரசு. 1954-ல் ‘ராமாயணம்’ நாடகம் போட்டார். அதைத் தடை செய்தது மாகாண அரசு. பிறகு பெரியார் தலைமையிலேயே நாடகம் நடைபெற்றது. தனது நாடகத்திற்கான ஆதாரம் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதை அரங்க வாசலில் எழுதிவைத்தார்.

ராமனைப் புனிதனாகச் சித்திரித்து எத்தனையோ நாடகங்கள் போட்டார்கள் சனாதனிகள். வால்மீகியின் அசல் ராமாயணத்தின் அடிப்படையில், அதிலும் சூத்திரன் சம்பூகனின் தலையை அறுத்த, கர்ப்பிணி சீதையைக் காட்டுக்கு அனுப்பிய உத்தரகாண்டத்தின் அடிப்படையில் ஒரு நாடகம் போட்டால், அதைத் தாங்க முடியவில்லை அவர்களால். மாகாணத்தில் இருந்த காமராஜர் அரசைத் தூண்டிவிட்டு, ராதாவின் நாடகங்களைத் தடுப்பதற்கு என்றே தனிச் சட்டம்போட வைத்தார்கள். அதன் பெயர் ‘மெட்ராஸ் நாடக நிகழ்வு சட்டம் - 1954’ என்பதாகும். இந்தச் சட்டத்தின்படி, நாடகம் போடுவதற்கு முன்பாக, அதன் எழுத்து வடிவை போலீஸிடம் கொடுத்து அதன் ஒப்புதலை வாங்க வேண்டும். ஒரு படைப்பாளியின் ஆக்கத்தை ஒரு போலீஸ்காரர் படித்து, ‘சரியாகத்தான் இருக்கிறது’ என்று சான்றிதழ் தர வேண்டிய அநியாய நிலை! இப்படியொரு சட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதன் அடிப்படையில் ராதாவின் ‘ராமாயணம்’ நாடகத்தைத் தடைசெய்தது அரசு.

தடைபோட்டவுடன் அதை மீறும் விதவிதமான வழிகளில் இறங்கினார் ராதா. ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் என்று அறிவித்திருப்பார். அந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே ராதா, ராமர் வேடத்தில் வந்து ராமாயணக் காட்சிகள் சிலவற்றை நடித்துவிட்டுப் போவார். ராமாயணம் நாடகத்தை நேரடியாகப் பார்ப்பதைவிட இப்படி அதைப் பார்த்தது, மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்தது.

“இது ராமாயணம் அல்ல, `கீமாயணம்’!” என்று பிராமணியவாதிகளால் புலம்பத்தான் முடிந்தது. அதுமட்டுமல்ல, அவர்களையும் ஆட்சியாளர்களையும் மேலும் தவிக்கவிடும் வகையில், திருவாரூர் தங்கராசு எழுதிய ‘தசாவதாரம்’ நாடகம் போட்டார். ஒரு ராம அவதாரத்தை மறுவாசிப்பு செய்யக் கூடாது என்று தடுத்தால், பத்து அவதாரங்களையும் மறுவாசிப்பு செய்யும் நாடகம் வந்துசேர்ந்தது.
1959-ல் எம்.ஆர்.ராதா மீது வழக்கு. என்னவென்றால், ‘காதல் பலி’ நாடகம் போடுவதாக போலீஸிடம் அனுமதி வாங்கிவிட்டு, அரசால் தடைசெய்யப்பட்டிருந்த ‘தூக்குமேடை’ நாடகத்தைப் போட்டதாக. இரண்டும் வெவ்வேறு நாடகங்கள் என்று ராதா தரப்பு வாதிட, அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான் என்று போலீஸ் தரப்பு வாதிட, நீதிமன்றம் தலையைப் பிய்த்துக்கொண்டது.

கலை உலகில் தடைகள் போடுவது எளிதல்ல, நியாயமல்ல என்பதை அவற்றை உடைக்கும் வழிகளைக் கலைஞர்களுக்குச் சொல்லித் தந்து, ஒரு கருத்துரிமைப் போராளியாக உயர்ந்து நின்றார் ராதா. காலக்கொடுமை என்னவென்றால், திராவிட இயக்கக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட, கலை உரிமைமீது தொங்கவிடப்பட்டிருந்த இந்தக் கொடுவாள், இந்த நாடகச் சட்டம் ரத்து செய்யப்படவில்லை. நாடககர்த்தா ‘பரீக்‌ஷா’ ஞாநி அவர்கள், இதை எதிர்த்துத் தொடுத்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து  செய்தது. அடக்குமுறையாளர்கள் இங்கும் கண்டது முடிவில் தோல்வியே.

வையெல்லாம் நான் பிறப்பதற்கு முன்பு அல்லது சிறுவனாக இருந்தபோது நடந்தவை. என் காலத்தில் கண்டது அவசரநிலை ஆட்சி. அந்த 1975-76-ல் அரசியல் சாசனம் மக்களுக்குத் தந்திருந்த அடிப்படை உரிமைகள் சர்வசாதாரணமாக முடக்கப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை என எதுவும் இல்லை. ஒரு சுடுகாட்டு அமைதி நிலவியது. அதையே ஒரு `சாதனை’யாகவும் சொல்லிக்கொண்டார்கள்!

தமிழகத்திலிருந்த ஆட்சி, 1976 ஜனவரி 31 அன்று பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்தக் கொடுமையைத் தமிழகமும் பூரணமாக அனுபவித்தது. ‘எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வம்’ என்றான் பாரதி. அந்த தெய்வங்கள் பத்திரிகை தணிக்கை அதிகாரி முன்பு தலைகுனிந்து நின்றன. தெய்வங்களுக் கெல்லாம் தெய்வமாகிய அந்த அதிகாரி தீர்மானித்ததுதான் எழுத்தானது!

ஆனால், படைப்பாளிகளின் ஆவேசம் இதனால் அதிகரித்ததே தவிர அடங்கவில்லை.  “இருண்ட காலத்தில் பாடல் ஒலிக்குமா?/ ஒலிக்கும், இருண்ட காலத்தைப் பற்றி!” என்று பிரெக்ட் கூறியதை அவர்கள் தங்கள் நெஞ்சில் எழுதிக்கொண்டார்கள். “கணவனைப் பறித்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்/ துணியினைப் பறித்ததாலே துரோபதை சபதம் நியாயம்/ மனைவியை இழந்ததாலே ராமனின் யுத்தம் நியாயம்/ அனைத்தையும் இழந்த நமது ஆவேசம் நியாயம் நியாயம்/ உழுநிலம் பறிக்கப்பட்டால் உரிமைப் போர் முழுவதும் நியாயம்/ அறுபது கோடி மக்கள் அனைத்துமே பறிக்கப்பட்டு/ அழுகையில் சிரித்தாயே, அடி ஆத்தா! இது என்ன நியாயம்?” என்று தணிகைச் செல்வன் அன்று முழங்கியது கருத்துப் போராளிகளின் இதயத்திலும் உதட்டிலும் ஆக்ரோஷமாய் எதிரொலித்தது.

தடைக்கல்லும் படிக்கல்லான தருணங்கள்

எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளும் குறிப்பாகக் கட்சிகள் நடத்திய `தீக்கதிர்’, `முரசொலி’ போன்ற பத்திரிகைகளும் தணிக்கைகளைத் தாண்டி எதிர்க்கருத்துகளை மக்களிடம் கொண்டுசென்றன. அதிகாரிகள் பாய்க்குள் நுழைந்தால், பத்திரிகைகள் கோலத்திற்குள் நுழைந்தன. ரகசியப் பத்திரிகைகளும் சுற்றுக்கு வந்தன. சட்டப்பூர்வ பத்திரிகைகளைவிட அவற்றுக்கே பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் விநியோகத்திற்கு என்று தனி ஏற்பாடு. அது எப்போது வரும், எப்படி வரும் என்று ஒரு பரபரப்பு வாசகர்களிடம் இருந்தது.

ஆனால், அவசரநிலை ஆட்சி தளர்த்தப்பட்டு மக்களவைக்கு நடந்த தேர்தலில், தமிழகத்தில் அதைக் கொண்டுவந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கே, அவர்களோடு தொகுதி உடன்பாடு கண்டிருந்த அதிமுக-விற்கே வெற்றி கிடைத்தது. மனம் சோர்ந்து நின்ற நிலையில், வட மாநிலங்களில் இந்திரா காந்தி கட்சிக்குப் படுதோல்வி கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது, அந்த மக்கள் நம்மைவிடப் பெரும் அவதியை அனுபவித்தி ருக்கிறார்கள் என்பது.

அவசரநிலை ஆட்சியின் மூலம் ஜனநாயகத்தைப் பலி கொடுத்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட இந்திரா, தேர்தலின் மூலம் அதை நிரந்தரப்படுத்திக் கொள்ளலாம் என்று போட்டிருந்த கணக்கை மக்கள் தவிடுபொடியாக்கினார்கள். வரலாற்றில் முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத ஓர் ஆட்சி, ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைந்தது. அது விரைவில் கலைந்துபோயிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் அல்லாத ஆட்சியை மத்தியிலும் அமைக்க முடியும் என்று அது காட்டிய சைகைதான் அடுத்தடுத்து அத்தகைய ஆட்சிகள் அமைந்ததற்கான அடித்தளம்.

அந்த ஆட்சிகளின் தன்மை, தரம் பற்றி விவாதம் இருக்கிறது. ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம், அடிப்படை உரிமைகளைத் தடைசெய்து சர்வாதிகார வழி செய்யப்படும் ஒரு தீர்வு, எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும் என்பது. இதை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் எனச் சகலமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இன்றைக்குத் தேவை ஜனநாயகத்தை மேலும் விரிவுபடுத்துவதுதானே தவிர, அதை வெட்டிச் சுருக்குவது அல்ல. சுருக்கினால் அவர்களின் எதிர்காலம்தான் சுருங்கிப்போகும்.