Published:Updated:

`ஸ்டாலின் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை!'  - எடப்பாடியோடு நெருங்குகிறாரா ராமதாஸ்?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாததால் இரண்டு தரப்புமே பலவீனமாகத்தான் இருக்கின்றன. பா.ம.க-வைத் தவிர்த்துவிட்டு யாராலும் வலுவான கூட்டணியை அமைத்துவிட முடியாது. 

`ஸ்டாலின் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை!'  - எடப்பாடியோடு நெருங்குகிறாரா ராமதாஸ்?
`ஸ்டாலின் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை!'  - எடப்பாடியோடு நெருங்குகிறாரா ராமதாஸ்?

கொடநாடு விவகாரம் தொடர்பாக பா.ம.க தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளிவராததை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். `இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கூட்டணி உறுதியாகிவிடும். அதுவரையில் எதுவும் பேச வேண்டாம் என்ற மனநிலையில் தலைமை இருக்கிறது' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜ.க-வுடன் அணி சேருவதற்கு அ.தி.மு.க உட்பட சில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதை அறிந்து தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய மோடி, `வாஜ்பாய் பாணியைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என்றார். `பழைய நண்பர்கள்' என மோடி பேசுவது தி.மு.க-வை குறிவைத்துத்தான் எனத் தகவல் கிளம்பியது. இதுதொடர்பாக, பா.ஜ.க, தி.மு.க-வுக்கு இடையில் வார்த்தைப் போர் நடந்து ஓய்ந்தது. 

தி.மு.க அணி உறுதியாகிவிட்ட நிலையில், அ.தி.மு.க தலைமையில் தனியாக அணி ஒன்றை அமைப்பதற்குப் போராடி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பா.ம.க, தே.மு.தி.க, அ.ம.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. `கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்தரை சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.க. அப்படிப்பட்ட ஒரு கட்சி, தன்னை ஆதரித்தால் தேர்தல் களத்தை வலுவாகச் சந்திக்கலாம் எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக, பா.ம.க நிர்வாகிகளுடன் அ.தி.மு.க தரப்பிலிருந்து பேசி வருகிறார்கள். ஏறக்குறைய கூட்டணி முடிவாகிவிடும் என்றே தோன்றுகிறது. `நான்கு மாநிலக் கட்சிகளுடன் தினகரன் பேசி வருகிறார்' என்ற தகவல் வெளிவந்ததை அடுத்து, பா.ம.க-வுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தது அ.தி.மு.க. 

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், வன்னியர் நல வாரியம், படையாட்சியாருக்கு மணிமண்டபம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர் பா.ம.க தரப்பில். இதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், `நீங்கள் விரும்புகிற தொகுதிகளை எல்லாம் தருவது சிரமம். உங்களுக்கு முதல் தொகுதியை ஒதுக்கினால், அடுத்த வடமாவட்டத் தொகுதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம். சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற தொகுதிகளைக் கேட்க வேண்டாம். தருமபுரி தருகிறோம். சிதம்பரத்தில் எங்களுக்குச் சிக்கல் இருக்கிறது. எங்களுக்குச் செல்வாக்கில்லை என ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால், சி.வி.சண்முகம், அன்பழகன், வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டங்களை ஸ்ட்ராங்காக வைத்துள்ளனர். இந்தக் கூட்டணி நல்லபடியாகச் செல்லும் வகையில் அரசுக்கு உங்கள் ஆதரவு வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருப்பதால்தான், கொடநாடு உட்பட தமிழக அரசை விமர்சிக்கும் எந்த அறிக்கைகளும் ராமதாஸிடமிருந்து வரவில்லை. ஆளுநர் உரையையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் ராமதாஸ். அதேசமயம், `கூட்டணிக்குள் பா.ஜ.க வேண்டாம்' என்பதில் இரண்டு கட்சிகளுமே உறுதியாக உள்ளன" என்றார் விரிவாக. 

`அ.தி.மு.க-வுடன் கூட்டணியா?' எனப் பா.ம.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.``கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முடிவாகிவிட்டது என்பது தவறான தகவல். இதுதொடர்பாக எங்களிடம் பேசிய மருத்துவர் அன்புமணி, `யாரும் எதையும் பேச வேண்டாம். நமக்கு இன்னும் 15 நாள்கள் அவகாசம் இருக்கின்றன' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு இடையில் பா.ம.க இருக்கிறது. தி.மு.க-வுக்கு நெருக்கமாக பா.ம.க இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், தி.மு.க-வின் பேச்சுகளைத் தொடர்ந்து கவனிக்கும்போது, அவர்கள் பா.ம.க-வை விட்டு விலகுவதாகத்தான் பார்க்க முடிகிறது. இன்றுள்ள நிலையில் கருணாநிதி இருந்திருந்தால் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என உறுதியாகச் சொல்ல முடியும். அவர் ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தியிருப்பார். கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தலைமைப் பண்புள்ளவராக எங்களால் ஸ்டாலினைப் பார்க்க முடியவில்லை. அவர் தனித்தன்மையோடு இல்லை என்பதுதான் களநிலவரம். எந்தவித கூட்டணி நெருக்கடியும் இல்லாமல் அ.தி.மு.க இயல்பாக இருக்கிறது. இதற்குக் காரணம், தி.மு.க-வின் செயல்பாடுகள்தான். இதை அவர்களுடைய கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். 

கருணாநிதி சமாதி விவகாரத்தில் நாங்கள் போட்ட வழக்குகளை வாபஸ் பெற்றோம். அதனால்தான் அவருக்கு மெரினாவில் சமாதி கிடைத்தது. இதையெல்லாம் ஸ்டாலின் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களை ஏதோ எதிரிக்கட்சியாக நினைக்கிறார். `பா.ம.க உடன் கடைசி வரையில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். இறுதியாகத் தனித்து விட்டுவிட வேண்டும்' என்பதுதான் தி.மு.க தலைமையின் நிலைப்பாடாக இருந்தது. `இந்தத் தேர்தலில் பா.ம.க-வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திருமாவளவனைச் சேர்க்கக் கூடாது' என அந்தக் கட்சியின் நிர்வாகிகளே பேசினர். இந்தக் கருத்துக்கு விரோதமாக ஸ்டாலின் செயல்படுகிறார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாததால் இரண்டு தரப்புமே பலவீனமாகத்தான் இருக்கின்றன. பா.ம.க-வைத் தவிர்த்துவிட்டு யாராலும் வலுவான கூட்டணியை அமைத்துவிட முடியாது. 

யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக இன்னும் சில நாள்களில் முடிவு தெரிந்துவிடும். கொடநாடு விவகாரம் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிடவில்லை என்பது உண்மைதான். `கூட்டணி என்பது வேறு, அறிக்கை என்பது வேறு. அய்யா ஏன் அமைதியாக இருக்கிறார்?' என்று சிலர் கேட்கிறார்கள். இதை நாங்கள் வேறுவிதமாகப் பார்க்கிறோம். அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டார் மருத்துவர். இந்தக் கடுமையைக் குறைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறோம். இது பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் வேலைதான். தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறது பா.ஜ.க. தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்துவிட்டது. இதையெல்லாம் கணக்குப் போட்டு பார்த்து சரியான முடிவை அறிவிப்பார் மருத்துவர் ராமதாஸ்" என்றார் விரிவாக.