Published:Updated:

தமிழக அரசு பழிவாங்குகிறது: விடுதலையான அன்புமணி பேட்டி

தமிழக அரசு பழிவாங்குகிறது: விடுதலையான அன்புமணி பேட்டி
தமிழக அரசு பழிவாங்குகிறது: விடுதலையான அன்புமணி பேட்டி
தமிழக அரசு பழிவாங்குகிறது: விடுதலையான அன்புமணி பேட்டி

சென்னை: பா.ம.க.வினர் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமனி கூறினார்.

மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா நடந்தது. இந்த விழாவின் போது, மரக்காணம் அருகே உள்ள தலித் வீடுகள் தீ வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்களில் பா.ம.க.வினர் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, வட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வன்முறை சம்பவங்களில் இரு சமூகத்துக்கும் தொடர்பில்லாத 3 பேர் பலியானார்கள். டாஸ்மாக் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. ராமதாஸ் மீது 6 வழக்குகளும், அன்புமணி மீது 3 வழக்குகளும் பதிவு செய்யபட்டன.

இந்தநிலையில், அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் அன்புமணிக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை புழல் சிறையில் இருந்து அன்புமணி வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தியாகராயர் நகர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு கையெழுத்து போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மரக்காணம் வன்முறைக்கும், பா.ம.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வன்னியர்களை கலவரக்காரர்கள் போல அரசும், விடுதலை சிறுத்தைகளும் முயற்சி செய்தது. அதன் விளைவாக பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

##~~##
விடுதலை சிறுத்தைகள் தாக்கியதால்தான் 2 பா.ம.க வினர் உயிரிழந்தனர். அதை போலீஸ் முதலில் ஏற்கவில்லை. ஆனால், அதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதி விசாரணை கேட்டு அறவழி போராட்டம் நடத்திய ராமதாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் உடல் நிலை மோசமாகியுள்ளது.
போலீசாரின் அராஜகத்தை கண்டித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். குண்டர் சட்டத்தில் பா.ம.க.வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி ஆளுநரிடம் முறையிடுவோம். போலீஸ் அத்துமீறல் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் புகார் தெரிவிப்போம். பழிவாங்கும் வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.வினரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.