மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)

என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)

நான் என்ன செய்தேன்னு எனக்கே தெரியாது...

#EnnaSeitharMP
#MyMPsScore

திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்தவர் சண்முகம். தி.மு.க அனுதாபியாக இருந்தவர், அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது, அதில் இணைந்து, செங்கம் ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்தார். அ.தி.மு.க-வில் தனக்குள்ள உள்ளூர் செல்வாக்கை வைத்துத் தன் மனைவி வனரோஜாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கிக்கொடுத்தார்.

பின்னர் சந்தனமரக் கடத்தல் வழக்கில் சிக்கியதால், அ.தி.மு.க-விலிருந்து அவரை ஜெயலலிதா நீக்கினார். இதனால், தன் மனைவியை அ.தி.மு.க-வில் சேர்த்தவர், பின்னணியில் இருந்து அவரை இயக்கினார். அவர்தான் இன்றைய திருவண்ணாமலை எம்.பி வனரோஜா.

2014 நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. திருவண்ணாமலை தொகுதிக்கு முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சீட் கேட்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக அரசியல் செய்த அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தார் சண்முகம். அக்ரியின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ராமசந்திரனுக்கு சீட் கிடைக்கவில்லை. பதிலாக, வனரோஜாவுக்கு அவர் சிபாரிசு செய்தார். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற வனரோஜா, எம்.பி-யாகவும் வெற்றி பெற்றுவிட்டார். கணவரின் வழிகாட்டலில் எம்.பி பதவி வரை உயர்ந்த வனரோஜா, திருவண்ணாமலை தொகுதி மக்களுக்காக என்ன செய்தார்? 

என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)

‘‘எட்டுவழிச் சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில், வனரோஜாவின் சொந்த ஊரான நீப்பத்துறையில் நிலங்களை அதிகாரிகள் அளவெடுத்தனர். அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்மீது கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். அதைத் தாங்க முடியாமல் விவசாயிகள் கிணற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இவ்வளவு நடந்தும் எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வனரோஜா வரவில்லை’’ என்று கொதிக்கிறார்கள் விவசாயிகள்.

“நீப்பத்துறையில் வசித்த வனரோஜா, எம்.பி-யாக வெற்றி பெற்றபிறகு செங்கம் நகரத்தில் குடியேறினார். மக்களிடம் இருந்தும் விலக ஆரம்பித்தார். அரசியல் அனுபவமே இல்லாமல், கட்சியில் சேர்ந்தவுடனே எம்.பி ஆகிவிட்டார். இதனால், அவரின் கணவர் சண்முகம்தான் நிழல் எம்.பி-யாக வலம்வருகிறார். தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் சாலை, தெருவிளக்குப் பணிகள் என அத்தனையும், சண்முகம் கண்ணசைவு இல்லாமல் நடக்காது. கணவர் மட்டுமல்ல, அவரின் மருமகனின் ஆதிக்கமும் தொகுதிக்குள் அதிகரித்திருக்கிறது. மருமகன் நடத்திவரும் சுபம் பிரின்டர்ஸ் நிறுவனத்தில்தான் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகப் பணிகளுக்கான அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எம்.பி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மருமகனுக்குச் சாதகம் செய்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என இரு பதவிகளைக் கையில் வைத்திருக்கும் வனரோஜா, கட்சிக் கூட்டத்துக்கு யாரையும் அழைத்துவரமாட்டார்’’ என்று சொந்தக் கட்சிக்காரர்களே புலம்புகின்றனர். 

ம.தி.மு.க மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாபு, “திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கிறது. இந்தச் சாலைதான் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் இணைக்கிறது. 50 சதவிகிதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், பாதியிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டது தனியார் ஒப்பந்த நிறுவனம். இதனால், இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. தவிர, திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்காக மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்துவிட்ட நிலையிலும், பத்து வருடங்களாக அந்தத் திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வனரோஜா எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றார்.

“திருவண்ணாமலையில் தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய் வித்துகள் வளர்ப்போர் கூட்டமைப்பு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாகப் பிரச்னையில் மூடப்பட்டது. இதனால் மணிலாவுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மீண்டும் இந்த ஆலையைத் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று எம்.பி சொன்னார். ஆனால், செய்யவில்லை. நெல் விவசாயிகள் பலன் பெரும் வகையில் குப்பநத்தம், மேல்சோழங்குப்பம் ஆகிய இடங்களில் அணைகள் கட்டி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அணைகள் தூர்வாரப் படவில்லை. கொழுந்தம்பட்டு பன்னாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது. அதை வாங்கித் தரும்படி எம்.பி-யிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திருவண்ணாமலை அடுத்த ஆனந்தல் கிராமத்தின் குறுக்கே ரயில் பாதையில் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனுக் கொடுத்தும் பலன் இல்லை. இதனால் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருள்களைச் சந்தைக்குக் கொண்டுவரப் போக்குவரத்து வாடகை அதிகமாகிறது” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பலராமன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம், “மேல்செங்கத்தில் சுமார் 11,500 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில விதைப் பண்ணை செயல்பட்டுவந்தது. 1972 முதல் செயல்பட்டு வந்த அந்தப் பண்ணை, ஆசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இங்கு புதிய ரக விதைகளை உற்பத்திசெய்து, விவசாயிகளுக்குக் கொடுத்தனர். விதைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, 2002-ம் ஆண்டு அதை மூடிவிட்டார்கள். அங்கே இருந்த கட்டடங்களும், விவசாயக் கிணறுகளும் பாழடைந்து விட்டன. 

இங்கு வேளாண் ஆராய்ச்சி மையத்துடன் விவசாயக் கல்லூரியையும் ஆரம்பித்தால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும். மக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன் எனச் சொல்லி வெற்றிபெற்ற வனரோஜோ, வாக்குறுதியைச் செயல்படுத்த மறந்துவிட்டார். வேங்கிக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் குடிநீர் இல்லை. சாத்தனூர் அணையிலிருந்து பன்னாரி ஆலைக்குச் செல்லும் தண்ணீரை இங்கே எடுத்து வர முடியும். ஆனால், வழியில் ரயில் பாதை இருப்பதால், மத்திய அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது. அதில், எந்த முயற்சியையும் எம்.பி எடுக்கவில்லை. ‘திருவண்ணாமலையில் மகளிர் கல்லூரி, செங்கத்தில் குளிர்பதனக் கிடங்கு, சென்ட் தொழிற்சாலை ஆகியவற்றை அமைப்பேன்’ என்றும், ‘பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவேன்’ என்றும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், எதையும் அவர் நிறைவேற்றவில்லை” என்றார் வருத்தத்துடன்.

மேல்ராவந்தவாடி கிராமத்தை வனரோஜா தத்தெடுத்துள்ளார். “எம்.பி-யாக அவர் வெற்றி பெற்றதும், ‘உங்க ஊரைத்தான்  தத்தெடுத்திருக்கிறேன். சாலைகள், குடியிருப்புகள், 24 மணி நேரமும் குடிநீர் வசதின்னு முன்மாதிரி கிராமமாக மாற்றுவேன்’னு சொல்லிட்டுப் போனவர்தான்... இதுவரை இந்தப் பக்கமே வரலை. எங்க ஊரில் வாரத்துக்கு இரண்டு முறைதான் தண்ணீர் வருது. மூணு நாளைக்கு ஒரு தடவைதான் நாங்க குளிக்கிறோம். அரசு துணைச் சுகாதார நிலையத்துல, ஒரு நர்ஸ்தான் இருக்காங்க. அதுவும் அவங்க வாரத்துல புதன்கிழமை மட்டும்தான் வருவாங்க. காய்ச்சல், சளின்னு எங்க புள்ளைங்களுக்கு எது வந்தாலும் நர்ஸ் வர்றவரைக்கும் காத்திருப்போம். எங்க ஊர்ல நுழையுற இடத்துல டாஸ்மாக் கடையை வச்சுருக்காங்க. அதை இங்கிருந்து அகற்றணும்னு சொன்னோம். அதுக்கும் எம்.பி ஏற்பாடு பண்ணலை. இங்கிருந்து 5 கி.மீ தள்ளி இருக்கிற 200 இருளர் குடும்பங்களுக்கு மின்சார வசதியே இல்லை. அதேபோல அவங்க மெயின் ரோட்டுக்கு வருவதற்கான சாலை, நடக்க முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமா கிடக்குது” என்று குமுறுகின்றனர் கிராம மக்கள்.

தொகுதி மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு வனரோஜா என்ன சொல்கிறார். “அனைத்துப் பகுதிகளுக்கும் ஹைமாஸ் லைட் அமைத்திருக்கிறேன். பள்ளிகளுக்கு மேசைகள், நாற்காலிகள் வாங்கிக்கொடுத்துள்ளேன். மருமகன் அரசின் பிரின்டிங் வேலைகள் செய்வதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எத்தனையோ பேருக்கு இலவசமா சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதைப் பற்றியெல்லாம் யாரும் சொல்லவில்லை. மேல்ராவந்தவாடி கிராமத்தைத் தத்தெடுத்த பின்னர், கலெக்டரிடம் பேசி சில வசதிகளைச் செய்துகொடுத்தேன். மத்திய அரசு அதற்காக எந்த நிதியையும் ஒதுக்கவில்லை” என்றவரிடம், ‘‘மேல்ராவந்தவாடியில் சாலைகள்கூடச் சரியில்லையே? நீங்கள் செய்த பணிகள் என்ன?’’ என்றோம். “அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லைங்க. அந்த விவரங்கள் எல்லாம் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கும். அங்க போய் நீங்க பார்க்கலாம். மக்கள் என்னிடம் பல உதவிகள் கேட்டு மனுக் கொடுக்கிறார்கள். உடனே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பேன்.  என் தொகுதிக்கு எம்.பி நிதியிலிருந்தே பல வேலைகளைச் செய்துள்ளேன். நான் செய்த வேலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கின்றன’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/  என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஜெ.முருகன், கா.முரளி
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)
என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)
என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தி
ருவண்ணாமலை தொகுதி முழுவதும் வலம் வந்தும், எம்.பி அலுவலகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “எம்.பி-க்கென்று தனியாக ஆபீஸ் இல்லை. செங்கத்தில் இருக்கும் அவருடைய வீடுதான் ஆபீஸ். எம்.பி-யின் கணவர் சண்முகம்தான் எம்.பி-யின் பி.ஏ. அனைத்து டீலிங்கும் அவர்தான் பார்க்கிறார்” என்றார்கள் கட்சியினர். “திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே இருக்கும் நகராட்சிக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” என வழக்கறிஞர் பாசறை பாபு என்பவர் மூலம் எம்.பி-க்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மனுவைப் பதிவு தபாலில் அனுப்பியும் இதுவரை நோ ரெஸ்பான்ஸ்.

என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)
என்ன செய்தார் எம்.பி? - வனரோஜா (திருவண்ணாமலை)