Published:Updated:

"ரோஹித் வெமுலாக்கள் இன்னமும் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!" #RememberingRohithVemula

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"ரோஹித் வெமுலாக்கள் இன்னமும் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!" #RememberingRohithVemula
"ரோஹித் வெமுலாக்கள் இன்னமும் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!" #RememberingRohithVemula

வெமுலா மரணத்துக்குப் பிறகு உயர் கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் தலித் மாணவர்களின் மீதான தீண்டாமைகள் பெரிய அளவில் கவனம் பெற ஆரம்பித்தன. ஆனால், தற்கொலை நிகழ்வுகள் மட்டும் குறைந்து விடவில்லை.

``சிலருக்கு வாழ்க்கை சாப வடிவிலானதாகக் கிட்டுகின்றது. என்னுடைய பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு” என்பது ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வாசகங்கள். பிறப்பின் அடிப்படையில் சாதி வரையறுக்கப்படக் கூடியதாக உள்ளது. ரோஹித்தின் பிறப்பும், அவர் கடிதத்தில் தாங்கி நின்ற வார்த்தைகளைப் போல பெரும் விபத்தாகவே அமைந்தது. இந்தியா முழுக்க சாதியத் தீண்டாமைகள், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

மலா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரும் கனவுகளோடு முனைவர் பட்டம் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா. படிக்கும் காலத்தில் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அம்பேத்காரிய இயக்கங்கள் போன்ற அரசியல் அமைப்புகளோடு இணைந்து மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் அவர் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஆவணப்படத்தைத் திரையிட அனுமதி மறுக்கப்பட்டத்தைக் கண்டித்தும், யாகூப் மேனனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் வெமுலா முன்னிலையில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக, பல்கலைக்கழக நிர்வாகம் வெமுலாவுக்கு வழங்கி வந்த 25,000 ரூபாய் மாத உதவித் தொகையை நிறுத்தி வைத்தது. அதேபோல் பல்கலைக்கழக விடுதியில் வெமுலா, தங்குவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றியது. பின்னர் தன்னுடைய நண்பரின் அறையில் தங்கியிருந்தார் அவர்.

ரோஹித் வெமுலா முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தால் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த பி.ஜே.பி-யின்  மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்தவர்களுக்கும், வெமுலா தரப்பினருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. அதன் பின்னர் வெமுலா மீது சாதி ரீதியான தீண்டாமைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தத் தொடர் நிகழ்வுகளின் விளைவால் கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, தான் தங்கியிருந்த நண்பரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் வெமுலா. அவருடைய தற்கொலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ஜெ.என்.யூ பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்  கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் விதமாக `வெமுலா தலித் இல்லை; அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்'  என்ற கருத்துகளும் பரப்பப்பட்டன. அந்தக் கருத்தை வெமுலாவின் சகோதரர், ``நாங்கள் மலா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என மறுத்தார். அவர் இறப்புக்குப் பிறகு அவருடைய குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெமுலாவின் தாயாரிடம் அரசு வழங்கியது.

வெமுலா மரணத்துக்குப் பிறகு உயர் கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் தலித் மாணவர்களின் மீதான தீண்டாமைகள் பெரிய அளவில் கவனம் பெற ஆரம்பித்தன. ஆனால், தற்கொலை நிகழ்வுகள் மட்டும் குறைந்து விடவில்லை. மாணவர்களின் தற்கொலைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர், குஜராத்தில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு அறுவை சிகிச்சை வகுப்புகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததாக ஏற்கெனவே புகார் அளித்திருந்தவர், அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அதேபோல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற தலித் மாணவர், தான் பல்கலைக்கழகத்தால் பாரபட்சமாக நடத்தப்படுவதாகத் தன்னுடைய முகநூலில் பதிவிட்டதுடன், தற்கொலையும் செய்து கொண்டார். உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் இத்தகைய தீண்டாமைகளுக்கு எதிராக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

``கடந்த கால வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே என் பிம்பம் மிஞ்சுகின்றது” என தன்னுடைய இறப்புக்கு முன்னர் பதிவு செய்திருந்த ரோகித் வெமுலாவின் வாழ்வு, அவரின் இறப்புக்குப் பிறகு அவருடைய போராட்டமும் வாழ்வும் பெரிதும் கவனிக்கக் கூடியதாக மாறிப்போய் உள்ளது. கல்வி நிலையம் மாற்றங்களை விளைவிக்கும் இடம், அங்கிருந்துதான் முதலில் சாதியமும், அதை அடிப்படையாக வைத்து நடக்கும் தீண்டாமைகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை, அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு