Published:Updated:

`கூட்டணி... 40 தொகுதிகள்... ஜெயலலிதா வழி!' - தினகரன் போடும் கணக்கு

`கூட்டணி... 40 தொகுதிகள்... ஜெயலலிதா வழி!' - தினகரன் போடும் கணக்கு
`கூட்டணி... 40 தொகுதிகள்... ஜெயலலிதா வழி!' - தினகரன் போடும் கணக்கு

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தனித்து நின்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெறும்" என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். அப்போது, "கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. உண்மையிலேயே கஜா புயல் வந்திருக்கும் பட்சத்தில், தேர்தல் ஆணையம் எப்படி இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது என்று எனக்குத் தெரியவில்லை. இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்ட விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளன. தற்போது கூடியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கும்போது, தேர்தல் எப்போது வரும் என்ற ஆர்வத்தில் மக்கள் இருப்பதை உணர முடிகிறது. எப்போது தேர்தல் வந்தாலும், இடைத்தேர்தலை தள்ளிப்போட்டு அவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். திருவாரூர் மக்கள் நல்ல வேட்பாளரை எதிர்பார்த்துள்ளனர். அத்தகைய வேட்பாளரை திருவாரூர் தொகுதிக்கு அறிவித்துள்ளோம்.

திருவாரூர் உட்பட 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமின்றி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது, மறைந்த ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்ததுபோல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் அமைச்சர் காமராஜ் தூண்டுதலின்பேரில், குடவாசல் பகுதி அ.ம.மு.க நிர்வாகி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் தி.மு.க ஆட்சியின்போது போடப்பட்ட பொய் வழக்குகள், நீதிமன்றத்தின் மூலம் அவை பொய்யான வழக்குகள் என நிரூபிக்கபட்டன. அதுபோல, பொய் வழக்கு போடும் போலீஸார்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வோம்" என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், "அ.தி.மு.க ஆட்சி தொடர, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என ஜெயக்குமார் கூறியது உண்மைதான். அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டணி போட்டுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றால், இதைப்பற்றி முதலமைச்சர் கவலைப்படத் தேவையில்லை. தேவையில்லாத நிலையால் நடவடிக்கை எடுத்து, இருவரையும் கைதுசெய்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர்களை விடுதலைசெய்துவிட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏற்படுத்திய ஒரு தனிக் குழுவைப்போன்று, கோடநாடு விவகாரத்திலும் தனிக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.

நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிகுறித்துப் பல்வேறு கட்சிகளுடன் பேசிவருகிறோம். முடிவு எட்டப்படவில்லை. முடிவு எட்டப்பட்ட வுடன், கூட்டணிகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு வெளியிடும். இருந்தபோதிலும், கூட்டணி ஏற்படவில்லை என்றாலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். பிரதமர் வேட்பாளரைத் தேர்வுசெய்யும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கும்.

தேசியக் கட்சிகளை ஆதரிப்பதால், எந்தப் பயனும் தமிழகத்துக்கு ஏற்படப்போவதில்லை. கடந்த ஆட்சியில் தேசியக் கட்சிகளை ஆதரித்து காவிரி, பாலாறு, போன்ற பிரச்னைகளில் தீர்வு எட்டப்படவில்லை. தமிழக நலன் காக்கப்படவில்லை. எனவே, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். அப்போதுதான் தமிழக நலன் காக்கப்படும்" என்று கூறினார்.