Published:Updated:

ரோஹித் வெமுலா... ஒரு நிஜ பரியேறும் பெருமாளின் கதை! #VikatanInfographics

ஒரு கையில் தன் உடைமைகளுடனும், மறு கையில் அம்பேத்கர் படத்துடனும் ரோஹித் வெமுலா தன் நண்பருடன் நடந்து வரும் படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

ரோஹித் வெமுலா... ஒரு நிஜ பரியேறும் பெருமாளின் கதை! #VikatanInfographics
ரோஹித் வெமுலா... ஒரு நிஜ பரியேறும் பெருமாளின் கதை! #VikatanInfographics

"நானும் மற்றவர்களைப் போல அமைதியாகவே இருக்க விரும்பினேன். ஆனால், என் வரலாறு என்னை அமைதியாக இருக்கவிடவில்லை" - ரோஹித் வெமுலா. 

ரோஹித் வெமுலா என்ற 26 வயது இளைஞன் மரணமடைந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவரைப் போல உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ரோஹித்துக்கு முன், பின் எனப் பலர் சாதிக்கு எதிராகப் போராடி உயிரிழந்துள்ளனர். எனினும், வெமுலாவின் மரணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.

'ஒரு மனிதனின் மதிப்பு என்பது அவனது உடனடி அடையாளமாகவும், அந்த அடையாளத்தின் நெருங்கிய சாத்தியக்கூறாகவும் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு மனிதனின் மதிப்பு ஒரு வாக்காக, ஒரு எண்ணாக, ஒரு பொருளாகக் கருதப்பட்டுவிட்டது. எப்போதும் ஒரு மனிதன் தனியொரு மனதினைக் கொண்டவனாக மதிக்கப்படுவதில்லை' என்று தன் இறுதிக் கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், மாணவர்களையும் உலுக்கியது அந்தக் கடிதம். 

இவர், ஆந்திர மாநிலம் குண்டூரில் 'மாலா' என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். தாய் ராதிகா வெமுலாவைத் தனியே தவிக்கவிட்டு தந்தை ஓடிப்போக, ராதிகாவின் தையல் உழைப்பால் வளர்ந்தனர், அவரும் அவரின் சகோதரர் ராஜா வெமுலாவும். 

இந்தியா முழுவதும் தலித் மாணவர்களுக்குப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நிகழும் கொடுமைகளுக்கு, வெமுலாவும் விதிவிலக்கல்ல. தன் மீதான ஒடுக்குமுறைகளைக் கடந்து, கல்வியில் சிறந்து விளங்கினார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அவர் படித்த பிஹெச்.டி ஆய்வுப் படிப்பு, மெரிட்டில் கிடைத்தது. எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. 

இந்தியாவின் சமூக அரசியல் மீதான விமர்சனங்கள் அவரைத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் இடதுசாரி இயக்கங்களுடன் இணைத்தன. அந்த இயக்கங்களில் சாதி ஒழிப்பிற்கான நீண்ட காலத் திட்டமிடல்கள் போதாமல் இருந்ததை உணர்ந்த ரோஹித், தன்னை அம்பேத்கர் மாணவர் அமைப்பில் இணைத்துக்கொண்டு, பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார். 

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, அவரின்  தலைமையிலான அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், பி.ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி இதை எதிர்க்க, வாக்குவாதம் முற்றியது. 'அப்பென்டிக்ஸ்' பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.பி.வி.பி அமைப்பின் தலைவர் சுஷில் குமார், தன்னை ரோஹித்தும் அவரது நண்பர்களும் தாக்கியதாகப் புகார் அளித்தார்.

மத்தியில் பி.ஜே.பி ஆளுங்கட்சியாக இருப்பதால், ஏ.பி.வி.பி மாணவர்கள் இந்தப் பிரச்னையைத் தங்களுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினரும், அப்போதைய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவிடம் எடுத்துச் சென்றனர். அவர் அதை அன்றைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் எடுத்துச்சென்றார். மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் அழுத்தத்தால்,  நண்பர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார் வெமுலா. 

அதே ஆண்டின் டிசம்பர் மாதம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்பாராவ் பொடில் நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் மாறியும், இடைநீக்கம் மாற்றப்படவில்லை. ஐந்து தலித் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, மற்றவர்கள் மத்தியில் எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு மாதமும் தனக்குக் கிடைக்கும் 28 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையில், 8 ஆயிரம் ரூபாயைத் தன் செலவுக்கும், 20 ஆயிரம் ரூபாயைத் தன் தாய் ராதிகாவுக்கும் அனுப்பிவந்தவருக்கு இது மிகப்பெரிய இடியாகத் தாக்கியது.

"தலித் மாணவர்கள்மீது சாதிய வன்முறையை ஏவிய ஏ.பி.வி.பி மாணவர்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் நீங்கள், பாதிப்பிற்குள்ளான தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்வதற்குப் பதிலாக, எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்" என்று துணைவேந்தர் அப்பாராவுக்குக் கடிதம் எழுதினார் ரோஹித். 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, துணைவேந்தர் அப்பாராவ் இடைநீக்கத்தைக் குறைத்து, வேறு தண்டனைகளை அளித்தார். "அவை தண்டனைகள் அல்ல; சமூகப் புறக்கணிப்பு" என்றார். "ஐந்து மாணவர்களும் படிப்பைத் தொடரலாம்; விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும்; நூலகத்தைப் பயன்படுத்தக் கூடாது; மாணவர் தேர்தல்களில் பங்கேற்கக் கூடாது" என்ற கட்டளைமூலம் புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

ஒரு கையில் தன் உடைமைகளுடனும், மறுகையில் அம்பேத்கர் படத்துடனும் நண்பருடன் அவர் நடந்து வரும் படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர் தன் விடுதியை விட்டு வெளியேறியபோது அந்தப் படம் எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில், 'வெளிவாடா' என்ற பெயரில், தனியாகக் கூடாரம் அமைத்துத் தன் நண்பர்களுடன் தங்கினார். 'வெளிவாடா' என்பதற்கு 'சேரி' என்று பொருள்; 'சாதி' என்ற சமூகப் புறக்கணிப்பால் வெளியேற்றப்பட்டவர்களின் புகலிடம்தான் 'வெளிவாடா'.

ஆளுங்கட்சி ஆதரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பலம் முதலியவற்றின் முன் ரோஹித் வெமுலாவின் போராட்டம் யார் காதுக்கும் எட்டாத ஒன்றாக மாறத் தொடங்கியது. இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன், மாணவர்களைத் திரட்டி, சாதி வேற்றுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் ரோஹித் வெமுலா. பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவினால் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது. ரோஹித்தின் நண்பர்கள் மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் திட்டமிட்டனர். 

எனினும் ஜனவரி 17, 2016 அன்று, ரோஹித்தின் உயிரற்ற உடல் அவருடைய நண்பரின் அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பேத்கர், புத்தர், சாவித்ரிபாய் பூலே, பெரியார் முதலானோர் படங்களுடன் இருந்த அந்த அறையில், ரோஹித் வெமுலா இறுதியாக எழுதிய கடிதமும் கிடைத்தது. "நான் இறந்ததற்கு யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம்; எனக்கு உயிருடன் இருப்பதை விட, மரணமடைவதே மகிழ்ச்சி அளிக்கும்" என்றன அவரது இறுதி வார்த்தைகள். 

ரோஹித் வெமுலாவின் மரணம், இந்தியா முழுவதும் பல இயக்கங்களை ஒருங்கிணைத்தது. பல்கலைக்கழக வளாகங்களில் சாதி ஒழிப்பைப் பேசும், அம்பேத்கர் கருத்துகளைப் பரப்பும் பல மாணவர் அமைப்புகள், தங்கள்மீது பல்கலைக்கழக நிர்வாகத்தால், அரசு அழுத்தத்தினால் செலுத்தப்படும் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசினர். 'மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; மாணவர்களுக்கு அரசியல் கூடாது' என்ற 'அரசியலற்ற' கருத்துகளுக்குப் பின் இருக்கும் அரசியலையும் ரோஹித் வெமுலாவின் மரணம் வெளிக்காட்டியது. 

பல முனைகளில் வெளிப்பட்ட எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நீதிபதி ஏ.கே.ரூபன்வால் தலைமையில் ஆணையம் அமைத்தது. ஏ.கே.ரூபன்வால், ஆணையத்தின் முடிவுகளில் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கான காரணத்தைப் பற்றி பேசவில்லை; 'ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கும் பி.ஜே.பி-க்கும் தொடர்பு இல்லை' என்ற முன் முடிவோடு, 'ரோஹித் வெமுலா தலித் அல்ல' என்று கூறியது அந்த அறிக்கை. 2017-ம் ஆண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில், உயர்கல்வித் துறையில் சிறந்து விளங்கியதற்காக, ஹைதராபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவ் பொடிலுக்கு பிரதமர் மோடி விருது அளித்தார்.

மகனின் இறப்புக்கு நீதி கேட்டு வந்த ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, சகோதரர் ராஜா வெமுலா ஆகியோர், தற்போது சாதி ஒழிப்புகுறித்த பிரசாரங்களில் இந்திய அளவில் முன்னணியில் நிற்கின்றனர். ரோஹித் வெமுலாவின் நினைவாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட 'வெளிவாடா',  துணைவேந்தர் அப்பாராவ் பொடிலின் உத்தரவின் பெயரில் கடந்த வாரம் உடைத்து எறியப்பட்டது. எனினும், மாணவர்கள் மீண்டும் அதை எழுப்பி, ரோஹித் வெமுலாவின் நினைவையும் சாதி ஒழிப்புக் கொள்கைகளையும் பரப்பிவருகின்றனர்.

"அரசு ஆணையங்கள் அமைத்து, ரோஹித் வெமுலாவின் அடையாளத்தை மாற்ற முயற்சிசெய்யலாம்; புறக்கணிக்கப்பட்ட சின்னமான 'வெளிவாடா'வைத் தகர்க்கலாம். ஆனால், ரோஹித் வெமுலா பற்றவைத்த நெருப்பையும், 'வெளிவாடா'கள் மீண்டெழுந்து வருவதையும் தடுக்க முடியாது. ரோஹித் வெமுலா மரணிக்கவில்லை!" என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.