Published:Updated:

`தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி வைகோ' - முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் புகழாரம்

`தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி வைகோ'  - முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் புகழாரம்
`தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி வைகோ' - முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் புகழாரம்

தமிழகத்தில், வாக்கு வங்கிக்காக அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், மக்களுக்காகச் செயல்படும் சிறந்த அரசியல்வாதி வைகோ' என முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

தமிழகத்தில், தற்போது பரபரப்பு அரசியல் தொற்றிக்கொண்டிருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்கலில் சிக்கித்தவிக்கிறார். சிபிஐ நடத்திவரும் விசாரணை உள்ளிட்ட விவகாரங்களால் தமிழக அமைச்சர்கள் தூக்கத்தைத் தொலைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதனிடையே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, அதற்கான கூட்டணி அமைப்பது, எந்தக் கூட்டணிக்குச் சென்றால் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும், எந்தக் கூட்டணியில் இடம் பெற்றால் அதிக தொகுதிகளில் வெற்றியைக் கைப்பற்ற முடியும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புள்ளிவிவரக் கணக்குகளுடன் குழம்பித் தவித்துவருகிறார்கள். 

ஆனால், இந்த விவகாரங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அவரது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில், கடந்த 45 வருடங்களாக பொங்கல் விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், கலை விழாக்கள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

இந்த ஆண்டும், வழக்கம் போலவே கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல் என கிராமத்து மக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 3 நாள்கள் நடந்த இந்த விழாவின் ஒரு பகுதியாக, அவரால் மருத்துவம், பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். வைகோ தலைவராக இருக்கும் திருவள்ளுவர் கழகத்தின் சார்பாகப் பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

ஒவ்வொரு வருடமும் சிறப்பு விருந்தினர்களை அழைத்துவந்து பேசவைக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான விழாவில் முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், குட்டி என்கிற சண்முகசிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். விழாவில் பேசிய வைகோ, ’’முன்னாள் முதல்வரான மறைந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் அலெக்ஸாண்டர். அவர் மூலமாகவே விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர் பல்வேறு உதவிகளைச் செய்தார்.  நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்ட அவர், இந்த விழாவுக்கு வந்தது நமக்கெல்லாம் பெருமை’’ என்றார். 

 முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர், ‘’நான் கிராமத்தில் பிறந்திருந்தாலும் பணி காரணமாக நகரத்திலேயே தங்கிவிட்டதால், கிராமத்து மக்கள் பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். இங்கே வந்த பிறகே, கிராமத்து மக்களின் உண்மையான அன்பையும் பாசத்தையும் பார்க்க முடிந்தது. வைகோவைப் பற்றியும் அவரது கட்டுப்பாடுகள், நேர்மை பற்றியும் பேச வேண்டுமானால் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். பல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் வாக்குவங்கி பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக மட்டுமே சிந்திக்கக்கூடிய அரசியல்வாதியாக வைகோ மட்டுமே இருக்கிறார். அவர், மக்களின் நலனுக்காக மட்டுமே சிந்தித்துச் செயல்படும் சிறந்த அரசியல்வாதி’’ எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.  

இந்த விழா பற்றி ம.தி.மு.க நெல்லைப் புறநகர் மாவட்டச் செயலாளரான தி.மு.ராஜேந்திரன் கூறுகையில், ’’ஒவ்வொரு வருடமும் கலிங்கப்பட்டியில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில் 15,000 பேர் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் தலைவர் வைகோ விருந்து உபசரிப்பு செய்து, விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளித்து கௌரவித்தார். 

கிராமத்தின்மீது தலைவர் வைகோ மிகுந்த பற்றுக்கொண்டவர். அவரைப் பார்த்தே எனக்கும்கூட கிராமங்கள்மீது ஈடுபாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு விழாவின்போது, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். கிராமத்து மக்கள்மீது காட்டும் பாசம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஈடுபாடு, தமிழ் மீதும் தமிழர் மீதும் காட்டும் அக்கறை போன்றவையே அவர்மீதான மரியாதையை எங்களுக்கு அதிகப்படுத்துகிறது’’ என்றார்.