
மனுவுக்கு உடனுக்குடன் நடவடிக்கை... நல்லது செய்திருக்கிறார் எம்.பி!
#EnnaSeitharMP
#MyMPsScore
அதிர்ஷ்டம் இருந்தால் அ.தி.மு.க-வில் அடித்தட்டு நிலையில் இருக்கும் தொண்டனும் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதற்கு, திருநெல்வேலி எம்.பி-யான கே.ஆர்.பி.பிரபாகரன் ஓர் உதாரணம். இவர், கடந்த தேர்தலின்போது, எம்.பி சீட் கேட்டு கட்சித் தலைமையிடம் விருப்ப மனுத் தாக்கல் செய்யாதவர். போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தவர்களுக்குப் போதிய தகுதிகள் இல்லாததால், தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்துவந்த பிரபாகரனுக்கு யோகம் அடித்தது. இப்படித்தான், சாதாரணத் தொண்டனாக இருந்த பிரபாகரனுக்கு, எம்.பி வாய்ப்புக் கிடைத்தது.
தமிழகத்தில் இருந்து வென்ற எம்.பி-களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வயதுடைய எம்.பி என்ற பெருமையும் பிரபாகரனுக்கு உண்டு. அதெல்லாம் இருக்கட்டும், வாக்களித்த தொகுதி மக்களுக்கு பிரபாகரன் எப்படி நன்றி செலுத்தியிருக்கிறார்?
“சொல்லும்படியான திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை’’ என்று தொகுதி மக்கள் புலம்புகிறார்கள்.
“தி.மு.க ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சிக்காக நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்கு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருப்படியான நிறுவனங்கள் இல்லை. கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்காவிலும் இதே நிலைதான். அங்கே எந்த நிறுவனமும் வரவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஸிண்டெல் நிறுவனம் 25 ஏக்கரில் கம்பெனியைத் தொடங்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக அலுவலகம் கட்டியது. ஆனால், அனுமதி வழங்குவதில் திட்டமிட்டே சிலர் தாமதம் செய்தனர். பணிகளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டது. அந்த நிறுவனத்திடம் பேசி, அவர்களை அழைத்து வர எம்.பி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா ஆகிய இரண்டையும் உயிர்ப்புடன் செயல்பட வைத்திருந்தாலே ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்” என்று குமுறுகிறார்கள், தொழில் துறையினர்.

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி-யான ராமசுப்புவிடம் பேசினோம், “எம்.பி-யாகத் தேர்வாகி நாடாளுமன்றம் செல்வது சாதாரணமானது அல்ல. நாடாளுமன்றத்தில் நாம் வைத்த கோரிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அப்படிப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நான் எம்.பி-யாக இருந்தபோது, இந்தியாவிலேயே அதிகமான கேள்விகளைக் கேட்ட எம்.பி என்ற பெயரைப் பெற்றேன். ஆனால், இப்போதுள்ள எம்.பி நாடாளுமன்றத்தில் பேசுகிறாரா என்றே தெரியவில்லை. முக்கியத் தொழிற்சாலைகள், புதிய ரயில் பாதைத் திட்டங்கள், புதிய ரயில்கள் அறிமுகம் செய்வது என எம்.பி எந்த அக்கறையும் காட்டவில்லை’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், “மாவட்டத்தில் மூன்று லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இது பத்து சதவிகிதத்துக்கும் அதிகம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளே இல்லை. மத்திய அரசு அறிவித்த இன்டஸ்ட்ரியல் காரிடார் ஒன்றை, திருநெல்வேலிக்குக் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். அதற்கும் எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், திருநெல்வேலி ரயில் நிலையம், மதுரை கோட்டத்தில் வருகிறது. அருகிலுள்ள மேலப்பாளையம் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது. இப்படியான சிக்கல்களைத் தீர்க்க, தனி ரயில்வே கோட்டம் வரவேண்டும்.
ஜி.எஸ்.டி வரியால் பீடித் தொழில் அழியும் நிலைக்கு வந்துவிட்டது. தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில்தான் அதிகமாக ஏழு லட்சம் பீடித் தொழிலாளிகள் உள்ளார்கள். ஜி.எஸ்.டி பாதிப்பால் பீடி நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கும் ஆட்களைக் குறைத்து வருகின்றனர். இதனால், இரண்டு லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். பீடித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் நலனுக்காக நெல்லையில் 13 மருத்துவமனைகள் உள்ளன. இதற்கு மத்திய அரசு மூலமாக 18 கோடி ரூபாய் நிதி வரும். அந்த நிதி குறைக்கப்பட்டுவிட்டது. பல்நோக்கு மருத்துவமனை வருவதாகச் சொன்னார்கள். அது எப்போது வரும் எனத் தெரியவில்லை. இதுபற்றியெல்லாம் எம்.பி வலியுறுத்த வேண்டும். ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை. சிறுதொழில் செய்வோருக்கும் விவசாயிகளுக்கும் வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதால்தான், திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமை அதிகரித்துள்ளது. அனைத்து வங்கி உயர் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கடன் கொடுக்க ஏற்பாடு செய்யவில்லை. கூடங்குளம் அணுமின்நிலையக் கட்டுமானப் பணியில் 3,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்காமல் கமிஷன் அடிக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க வேண்டும். காய்கறிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்க எம்.பி. எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்றார்.
எம்.பி தத்தெடுத்த பெத்தநாடார்பட்டிக்குச் சென்றோம். அங்கே எந்த மாற்றமும் தெரியவில்லை. மிகவும் பின்தங்கிய கிராமமாகவே காட்சியளித்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிர்ராஜ், “5,000 பேர் வாழும் இந்த ஊரில் பல ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை. சாலை, குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பஸ் வசதி இல்லை. வேலைக்குச் செல்கிறவர்களும், மாணவர்களும் பெரும் சிரமப்படுகிறார்கள். அவசரத்துக்கு மருத்துவமனைக்குப் போவதாக இருந்தால், பாவூர் சத்திரத்துக்குத்தான் போகணும். எம்.பி., எம்.எல்.ஏ., அதிகாரிகள் என எல்லோருக்கும் மனுக் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. எங்கள் ஊரை, மாதிரி கிராமமாக எம்.பி. தேர்வு செய்துள்ளதாகச் சொல்லி அதிகாரிகள் வந்து பார்த்தனர். ‘ஊரே மாறப்போகுது. அனைத்து வசதிகளும் கிடைக்கப் போகுது’ன்னு சொன்னாங்க. அதுக்கு ஒரு விழாவும் நடத்தினாங்க. பிறகு ஒரேயொரு மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டினாங்க. அதோட சரி.. எம்.பி-க்கும், கலெக்டருக்கும் மனுக்கள் அனுப்பியும் ஒரு பதிலும் இல்லை’’ என்றார்.
எம்.பி பிரபாகரனிடம் பேசினோம். “ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த என் முயற்சியில் முதல்வர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலங்குளம் - நெட்டூர் இடையே குறுகிய சாலையை அகலப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பின்தங்கிய மக்கள் வசிக்கும் கோடகநல்லூர் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1.33 கோடி ரூபாய் கடனுதவியை மானியத்துடன் பெற்றுக் கொடுத்துள்ளேன். தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் பலமுறை நேரில் வலியுறுத்தினேன். அதனால், அந்தப் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. என் முயற்சியால்தான் நெல்லையிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வழியாக தாம்பரத்துக்குப் புதிய ரயில் இயக்கப்படுகிறது. சென்னை - நெல்லை இடையே பகல் நேரத்தில் கூடுதல் ரயில் விடும்படி ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
பல இடங்களில் எனது சொந்த நிதியில் உதவிகளைச் செய்திருக்கிறேன். கீழப்பாவூர் பகுதியில் மேல்கூரை இல்லாத பல கோயில் களுக்குக் கூரை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ஏராளமான பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறேன். தொகுதி முழுவதும் சாலைகள், சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையங்கள் அமைத்திருக்கிறேன். தத்தெடுத்த பெத்தநாடார்பட்டி கிராமத்தில் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துள்ளேன். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அந்தக் கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி நடக்கிறது. என்னால் முடிந்தவரைப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- பி.ஆண்டனிராஜ். செ.சல்மான்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி


எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் எம்.பி அலுவலகம் உள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்கள், கணினியில் பதிவுசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட கரும்பனூர் பாக்கியலட்சுமிபுரம் கிராமத்தினர், ரேஷன் பொருள்கள் வாங்க நீண்டதூரம் செல்ல வேண்டியிருப்பதால், தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊர் மக்கள் சார்பாக மனு அளிக்க ஏற்பாடு செய்தோம். அதை, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு எம்.பி அலுவலகம் பரிந்துரை செய்ததால், பாக்கியலட்சுமிபுரத்தில் தற்போது புதிய ரேஷன் கடை செயல்பட்டுவருகிறது. பணகுடியைச் சேர்ந்த ஷெர்பின் ஜோஸ் என்ற ஆறு வயது சிறுவனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காகப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்யுமாறு சிறுவனின் தந்தை எம்.பி அலுவலகத்தில் மனு அளித்தார். பிரதமர் அலுவலகத்துக்குப் பரிந்துரைத்ததால், ஷெர்பின் ஜோஸின் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஷெர்பின் ஜோஸ்க்கு அறுவை சிகிச்சை நடந்தது. நல்லது செய்திருக்கிறார் எம்.பி.


