Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் இப்படித்தான் இருக்கும்! - கே.பாலகிருஷ்ணன் கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் இப்படித்தான் இருக்கும்! - கே.பாலகிருஷ்ணன் கணிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் இப்படித்தான் இருக்கும்! - கே.பாலகிருஷ்ணன் கணிப்பு

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்தல் கூட்டணி அமையப்போவதில்லை என்றும், மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி வேறுபடும் என்றும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனுடன் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சி.பி.எம். அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, வரும் 22-ல் திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 23-ம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மதிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வேதனையானது. எந்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்து பதவி எடுத்துக் கொண்டாரோ அதற்கு எதிராக அவர் பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்" என்றார்.

கொடநாடு விவகாரம் பற்றிக் குறிப்பிட்ட கே.பாலகிருஷ்ணன், ``கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியாகும் தகவல்கள் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கொடநாடு விவகாரம் தொடர்பாக நேரடியாகப் பதிலளிக்காமல் சயன் மற்றும் மனோஜை கைது செய்திருப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க் கருத்தைக் சொல்பவர்களை, சட்டத்துக்குப் புறம்பாகக் கைதுசெய்வது நியாயமற்றது. தன் மீது குற்றச்சாட்டு இல்லையென்றால், இந்தப் பிரச்னையை சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்படுத்த வேண்டும். மேலும், முதல்வர் மீது இதுபோன்றதொரு குற்றச்சாட்டு வந்துள்ளதால், அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்று, பதவி விலகி அதுகுறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ``நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தி இருக்கும். மத்தியில் மதச்சார்பற்ற ஒரு அரசை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்றார்.