Published:Updated:

"எத்தனைப் பேருக்கு வேலை கொடுத்திங்க?" - மௌனம் சாதித்த மத்திய அரசு

இந்திய ஜனநாயக வரலாற்றில் ஆளும் கட்சி அறிக்கையுடன் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தே அதிருப்திக் கடிதமும் சேர்ந்தே இடம்பெறுவது இதுவே முதன்முறை.

"எத்தனைப் பேருக்கு வேலை கொடுத்திங்க?" - மௌனம் சாதித்த மத்திய அரசு
"எத்தனைப் பேருக்கு வேலை கொடுத்திங்க?" - மௌனம் சாதித்த மத்திய அரசு

பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்கிற புதிய அறிவிப்பை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது. ’பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வேலையிழந்தவர்களுக்கும் பொருளாதாரம் சரிந்தவர்களுக்கும் ஏற்பட்ட சிக்கல்களைச் சரிக்கட்டவே இந்த அறிவிப்பு’ என்று பல பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்தார்கள். மோடி அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இது வேண்டுமென்றே அரசின் செயல்பாடுகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்றும் ஆளும் பி.ஜே.பி. தெரிவித்து வந்தது. 

எந்த டேட்டாவும் இல்லை!

இந்த நிலையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து கடந்த ஆறு மாதங்களாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற ஆய்வுக் குழு ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதில், '2014 தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன?' என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆய்வறிக்கையை முரளி மனோகர் ஜோஷி மக்களவையில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் அந்தக் குழுவில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களின் அதிருப்தி கடிதமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஆளும் கட்சி அறிக்கையுடன் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தே அதிருப்திக் கடிதமும் சேர்ந்தே இடம்பெறுவது இதுவே முதன்முறை. 

காரணம் இதுதான்! 

அரசு அறிமுகப்படுத்திய முத்ரா கடன் திட்டமும் வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் புதிதாகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் வைத்து நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி, கணிசமாக உயர்ந்துள்ளதாக மூத்த அமைச்சர்கள் உட்பட பலர் தெரிவித்து வந்தார்கள். இதை வைத்தே  நாட்டின் வளர்ச்சியும் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான எவ்வித அதிகாரபூர்வ தரவும் அரசுத் தரப்பில் இல்லை. நாடாளுமன்றக் கமிட்டிகள் பொதுவாக தேசியக் கருத்துக் கணிப்பு ஆணையத்திடமிருந்துதான் தனக்கான தரவுகளைப் பெறும். ஆனால், கருத்துக் கணிப்பு ஆணையமும் 2012-ம் வருடத்துக்குப் பிறகு எவ்வித தரவும் சேகரிக்கவில்லை. வேலைவாய்ப்பு குறித்து கடைசியாகக் கிடைக்கும் அறிக்கை, 2016-2017-ம் ஆண்டுக்கான அனைத்திந்திய ஊழியர்கள் சம்மேளனத்தின் வருடாந்திர தரவறிக்கை மட்டுமே. ஆனால், அதுவும் அரசு சொல்லும் எண்ணிக்கைக்கு எதிராக இருக்கும் நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோஷி தலைமையிலான குழுவிடம் தரவறிக்கை இல்லாத விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள கமிட்டியின் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதூரி ஆகிய மூன்று பேரும், 'நிஜத்துக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் எவ்வித பொருத்தமும் இல்லை' என்று கூறியுள்ளனர். 2019-ம் ஆண்டு அதாவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே அரசு, கள நிலவரத்துடன் முரண்பாடான தகவல்களை வெளியிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 'வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கெல்லாம் வேலைக் கிடைப்பது சாத்தியமில்லை. அதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண்களைக்  கொண்டு எல்லாம் வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கணக்கிட முடியாது' என்று முரளி மனோகர் ஜோஷியும் அரசின் இந்த யோசனையை மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய அறிக்கையுடன் மற்ற உறுப்பினர்களின் அதிருப்திக் கடிதத்தையும் இணைத்தே நாடாளுமன்றத்தில் அவர் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை என்னவென்பது அறிக்கையில் தெரியவரும்.