Published:Updated:

வருமான வரி உச்சவரம்பு உயர்வு: பட்ஜெட் கணக்கா... தேர்தல் கணக்கா?!

இதுபோன்று, மக்களைக் கவரும் பொருளாதாரச் சலுகைத் திட்டங்களை நான்கரை ஆண்டுகால ஆட்சியின்போது அறிவிக்காமல், பதவிக்காலம் முடியும் நிலையில் அறிவிப்பதன்மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துவிட முடியும்?

வருமான வரி உச்சவரம்பு உயர்வு: பட்ஜெட் கணக்கா... தேர்தல் கணக்கா?!
வருமான வரி உச்சவரம்பு உயர்வு: பட்ஜெட் கணக்கா... தேர்தல் கணக்கா?!

ந்தியாவில், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு, கூட்டணிகள் குறித்த பேச்சுகள் அரசியல் களத்தில் ஆரம்பமாகிவிட்டன. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் போன்ற சில தலைவர்கள், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மாநிலங்களில் மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெருவாரியான கட்சிகள், பி.ஜே.பி-க்கு எதிரான புதிய அணியைக் கட்டமைப்பதில் கவனம்செலுத்திவருகின்றன.

பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே  பி.ஜே.பி-யின் ஒரே ஆயுதமாக இருப்பது, இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர் மட்டுமே. இந்த அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், இடைக்கால பட்ஜெட்டை பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல்செய்யும். அப்படி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, நாட்டு மக்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களைக் கொண்டுவந்து, அதன்மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பி.ஜே.பி முயற்சி மேற்கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும், பொருளாதார வளர்ச்சிகுறித்த புதிய திட்டங்களையும் முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது. இதனால், அந்தத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் போன்ற பல திட்டங்களை விமர்சனம்செய்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்திவருகின்றன.

2018-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய அரசு தாக்கல்செய்த பட்ஜெட்டே பி.ஜே.பி அரசின் இந்த ஆட்சிக் காலத்திற்கான முழுமையான பட்ஜெட் ஆகும். அதில், அதிரடியான சிறப்புச் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவிலான எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் இடம்பெறாமல்போனது. நாடு முழுவதும் 8 கோடியே 20 லட்சம் பேர் வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். இவர்களில், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வழங்கப்படுகின்றது. 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% வருமான வரியும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய்வரை சம்பாதிப்பவர்களுக்கு 20% வருமான வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30% வருமான வரியும் வசூலிக்கப்படுகிறது. 

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தாக்கல்செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம்வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 10% வருமான வரியைக் குறைத்து 5% ஆக அறிவித்தது மத்திய அரசு. வருமான வரியைக் குறைத்து அறிவித்ததன்மூலம் அதிகப்படியானோர் வரி செலுத்தும் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பி.ஜே.பி, தங்களின் ஆட்சிக்காலத்தில் தாக்கல்செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், பொதுமக்கள் பயன்பெறக்கூடிய பல சலுகைத் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கப்பட்ட வருமான உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட புதிய அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிகிறது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான ஆண்டு உச்சவரம்பை தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 124-வது அரசியலமைப்புச் சட்டப்பிரிவை திருத்தியமைத்ததன் மூலம், அதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், அந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதில், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியோர் என்பதற்கான அளவுகோலாக, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஆண்டு வருமான வரி உச்சவரம்புத்தொகையை இந்த அளவுக்கு உயர்த்துவற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று, மக்களைக் கவரும் பொருளாதாரச் சலுகைத் திட்டங்களை நான்கரை ஆண்டுகால ஆட்சியின்போது அறிவிக்காமல், பதவிக்காலம் முடியும் நிலையில் அறிவிப்பதன்மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துவிட முடியும். எனவே, இதுபோன்ற அறிவிப்புகள் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே வெளியிடப்படும் அறிவிப்புகள் என்பதால், அவை 'பட்ஜெட் கணக்கா? தேர்தல் கணக்கா?' என்ற கேள்விகள் பொதுமக்களிடத்தில் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.