மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)

“எம்.பி முகம் மறந்து போச்சு...”

#EnnaSeitharMP
#MyMPsScore

தீவிர அ.தி.மு.க விசுவாசியான நாகராஜன் ஒரு வழக்கறிஞர். தளவாய் சுந்தரம் மூலம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். சசிகலா தரப்புடன் நெருக்கமானார். சொத்துக் குவிப்பு வழக்கின் வழக்கறிஞர் குழுவில் இடம்பிடித்து ஜெயலலிதாவின் அறிமுகத்தையும் பெற்றார். இந்த அறிமுகமே அவரை கோவை எம்.பி-யாக ஆக்கியது. தர்மயுத்தத்தினால் அ.தி.மு.க பிளவுபட்டபோது, டிடி.வி தினகரன் பக்கம் நின்றார். சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தபோது, சசிகலாவின் பரோலுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் யாரும் ஜாமீன் கடிதம் கொடுக்க முன்வராத நிலையில், தாமாக முன்வந்து கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டினார் நாகராஜன். எல்லாம் சரி, தனக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு விசுவாசம் காட்டினாரா நாகராஜன்?

‘‘எம்.பி நாகராஜனா? அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? ஓட்டுக் கேட்டு வந்தாரே... அவரா? அப்போ பார்த்ததுதான், அவர் முகமே எங்களுக்கு மறந்துபோச்சு. தொகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்து நாங்க கேட்டதே இல்ல..” என்று தொகுதி முழுக்கக் குமுறல்கள் கேட்கின்றன.

ம.தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “கோவை - சென்னை இடையே விரைவு ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இது எம்.பி-க்கு தெரியுமா என்பதே சந்தேகம்தான். கோவையில் ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாததுப் பெரும் குறை. கோவையில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்தார்கள். அதைச் செயல்படுத்த எம்.பி எதுவும் செய்யவில்லை. தொழில் நகரமான கோவைக்கு மத்திய அரசின் பெரிய தொழிற்சாலைகள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் கண்டுகொள்ளவில்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பல தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது இல்லை. அதுகுறித்து எம்.பி கவலைப்படவே இல்லை” என்றார் வருத்தத்துடன்.

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)

தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கந்தசாமி, “மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் தொந்தரவால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாகராஜன் கண்டுகொள்ளவே இல்லை. ‘கெயில்’ பிரச்னையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோதும், மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. இதுபற்றி எம்.பி வாய் திறக்கவே இல்லை.

விளைநிலங்களில், உயர் மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள். இதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. கோவை விமான நிலைய விரிவாக்கத்தில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளில் அந்தந்த மாவட்டத்துக்கு ஏற்றார்போல், மாற்றத்தைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டிய எம்.பி., அதைச் செய்யவில்லை. ஆழியாறு –புன்னம்புழா திட்டம் செயல்படுத்தப்பட்டால் கோவையின் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும். ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எம்.பி தவறிவிட்டார். இதுதொடர்பாக எம்.பி-யைச் சந்திக்க முயற்சி செய்தோம். அதற்கு அவர் அனுமதி தரவில்லை” என்றார் கோபமாக.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸிடம் பேசினோம். “தமிழகத்தில் வேலை வாய்ப்புகளைப் பெருக்கியதில் கோவையின் சிறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எம்.பி எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்துவிட்டனர். இவற்றுக்கெல்லாம் எம்.பி என்கிற முறையில் நாகராஜன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கோவை விமான நிலைய விரிவாக்கத்தை வேகமாகச் செய்திருந்தால், கோவையின் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியைப் பெற்றிருக்கும். அதிலும் எம்.பி ஈடுபாடு காட்டவில்லை. கோவையில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டோம். தற்போதுதான் அதற்கான ஆய்வு மையம் அமைப்பதற்குப் பணிகள் நடந்துவருகின்றன. அதுவும் இவரது முயற்சி கிடையாது” என்றார்.

சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக், “கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்காக நிலம் கொடுத்த பல குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ‘அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்த நாகராஜன், அதை மறந்தே விட்டார். ‘நகரின் பிரதானச் சாலைகளில் பாதசாரிகளின் சிரமத்தைப் போக்குவதற்காகச் சுரங்கப் பாதைகள் அமைத்துத் தருவேன்’ என்றார். அதையும் செய்யவில்லை. இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான சாலை பீளமேடு காந்தி நகரிலிருந்து சத்தி ரோடு வரை இருக்கிறது. இந்திய உணவுக் கழகத்திடம் பேசித் தடையில்லாச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருந்தால், மாநகராட்சியே அந்தச் சாலையைப் புதுப்பித்துக் கொடுத்திருக்கும். அதைச் செய்யவில்லை. கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டி கோவை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து எம்.பி நாடாளுமன்றத்தில் பேசவே இல்லை. சிங்காநல்லூர் - எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஆவாரம்பாளையம் - கணபதி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஹோப் காலேஜ் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் ஆகிய பணிகள் எட்டு ஆண்டுகளாகியும் முடிக்கப்படவில்லை. ‘பொள்ளாச்சி-போத்தனூர் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவேன்’ என்றார் எம்.பி. அது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற பல ரயில்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதையும் நாகராஜன் கண்டுகொள்ளவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகள் கோவையின் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கியமானது. உள்நாட்டு வெளிநாட்டு விமானச் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீதும் அவர் அக்கறை காட்டவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

அக்ரஹார சாமக்குளம், பாலமலை ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறார் நாகராஜன். அங்கு சென்றோம். எம்.பி-யின் சொந்த ஊரான சர்கார் சாமக்குளத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில்தான் இருக்கிறது அக்ரஹார சாமக்குளம். அந்த ஊர் மக்களிடம் பேசினோம். “எலெக்‌ஷன்ல ஜெயிச்சதுக்குப் பிறகு நன்றி சொல்லக்கூட அவர் இங்க வரலை. தத்தெடுக்கும் விழா நடந்தபோது, நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். ஒரு ஹைமாஸ் லைட் போட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யலை. அந்த லைட்டும் எரியலை. இந்த ஊரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இருக்கு. பொதுக் கழிப்பிட வசதி கிடையாது. காடுகரையில்தான் ஒதுங்க வேண்டியிருக்கிறது. குடிதண்ணீர் கடும் பற்றாக்குறையாக இருக்கு’’ என்றார்கள் விரக்தியுடன். பாலமலை மக்களோ, “எம்.பி-யை நாங்க பார்த்ததுகூட இல்லை. எங்க கிராமத்தை எம்.பி தத்தெடுத்திருக்கிறார் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்” என்றார்கள் அதிர்ச்சியுடன். கழிவறை, சாலை வசதி என அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது பாலமலை.

எம்.பி நாகராஜனிடம் இதுகுறித்து எல்லாம் கேட்டோம். ‘‘நான் வல்லவன் என்று  சொல்ல மாட்டேன். நல்லவனாக இருக்கிறேன். ஒரு சாதாரண எம்.பி-யாக என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ… அதைச் செய்திருக்கிறேன். ‘கமிஷன் வாங்கினேன், டொனேஷன் கேட்டேன்’ என்று யாரும் என் மேல் புகார் சொல்ல முடியாத அளவுக்கு  நேர்மையாக இருக்கிறேன். முதன்முறையாக எம்.பி ஆன எனக்கு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்வதற்கே ஒரு வருடம் பிடித்தது. 

மாநில உரிமைகளை விட்டுத் தராமல் அனைத்து எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். மேக்கேதாட்டூ பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கியிருக்கிறோம். இதை நான் பெருமையாக நினைக்கிறேன். இதைத் தாண்டி ஒரு எம்.பி என்ன செய்ய முடியும்? மத்திய அரசு ஆதரவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அதையும் மீறிப் போராடிச் செய்துள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் நடக்காத ஊர் எதுவுமில்லை. தொகுதிக்குள் என் பாதம் படாத இடமும் இல்லை” என்றார் தீர்க்கமாக.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எம்.புண்ணியமூர்த்தி,
இரா.குருபிரசாத்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)
என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)
என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

கோ
வையில் எம்.பி-க்கு ஆபீஸ் இல்லை. கோரிக்கை மனுக்கொடுக்க வேண்டுமென்றால் சர்கார் சாமக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்குத்தான் போகவேண்டும். அங்கும் அலுவலகப் பணிக்கென தனியாக ஆட்கள் இல்லை. கோவையின் மத்தியப் பகுதியான கரும்புக்கடை, அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அங்கு மேல்நிலைப் பள்ளி, வங்கிச் சேவை, ஆரம்பச் சுகாதார நிலையம் என எந்த வசதிகளும் இல்லை. இது குறித்து ‘ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்’ அமைப்பின் ஊடகச் செயலாளர் அனீஸ், எம்.பி நாகரஜனுக்கு தபால் மூலம் மனு அனுப்பினார். அது எம்.பி கைக்குப் போயும் எந்தப் பதிலும் இல்லை. தொலைபேசி மூலமாகக் கேட்டபோது, ‘பரிசீலிக்கிறோம்’ என்றார்கள். அவ்வளவுதான்.

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)
என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)