Published:Updated:

வாழப்பாடி அருகே கல்வீச்சில் பயணி ஒருவர் பலி

வாழப்பாடி அருகே கல்வீச்சில் பயணி ஒருவர் பலி
வாழப்பாடி அருகே கல்வீச்சில் பயணி ஒருவர் பலி

சேலம்: நேற்று இரவு 12.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து சேலம் நோக்கி வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி அருகே வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மீது யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதில் பேருந்தில் பயணம் செய்த செல்வம் என்பவர் நெற்றியில் கல் பட்டு உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருந்தார். அவரை அதே பேருந்தில் அம்மாப்பேட்டையில் உள்ள பழனியாண்டி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை பலனின்றி விடியற்காலை 5 மணிக்கு இறந்திருக்கிறார்.

வாழப்பாடி அருகே கல்வீச்சில் பயணி ஒருவர் பலி

பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே அழுதுக் கொண்டிருந்த செல்வத்தின் மாமனார் குப்பனிடம் பேசிய போது, என்னுடைய கடைசி பொண்ணு ஜோதியை தான் செல்வத்திற்கு கொடுத்திருக்கேன். நாங்க எல்லோரும் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். செல்வம் சித்த மருத்துவரிடம் வேலைக்கு போயிட்டு இருந்தார்.

புவனகிரி பக்கத்தில் யாரோ மருத்துக் கேட்டாங்கன்னு சொல்லி கொடுத்துட்டு வர போயிருக்கார். இரவு ஊருக்கு திரும்பி வரும்போது யாரோ பாவிங்க பஸ் மீது கல்லை வீசி இருக்காங்க. அது செல்வத்தின் மீது பட்டு செத்து போயிட்டார். செல்வத்திற்கு ஒரே ஒரு சின்ன பையன் தான். இந்த சம்பவத்தை கேட்டதில் இருந்து என் பொண்ணு பைத்தியம் பிடிச்சா மாதிரி உளறிட்டே இருக்கா.

நாங்க என்ன பாவம் செய்தோம், வயிற்று பொழப்புக்கு போன இடத்துல இப்படி அடித்து கொன்னுட்டாங்களே. என் பேரன் ஜோதி பிரசாந்த் அப்பா இல்லைன்னா சோறு கூட சாப்பிட மாட்டானே... அவனை என்னத்தை சொல்லி தேத்துறது என்று அழ ஆரம்பித்தார்.

பித்து பிடித்த மாதிரி உக்கார்ந்திருந்த செல்வத்தின் மனைவி ஜோதியிடம் பேசிய போது, நேத்து நைட் 8 மணிக்கு போன் பண்ணினாரு. பையன் சாப்பிட்டானான்னு கேட்டுட்டு, பஸ் ஏறிட்டேன் ராத்திரி 2 மணிக்குள்ல வீட்டுக்கு வந்திடுவேன்னு சொன்னாறே...

##~~##
மணி 3 ஆகியும் வரலையேன்னதும் பயமாயிடுத்து தூக்கமே வரல. விடியற் காலை 4 மணிக்கு யாரோ ஒரு நர்ஸ் தான் போன் பண்ணி உன் புருஷனுக்கு சீரியஸா இருக்குன்னு சொன்னாங்க. இங்கு வந்து பார்த்தா செத்து போயிட்டதா சொல்லறாங்களே என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

பிரேதத்தை சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் புஞ்சை புளிமபட்டிக்கு கொண்டு சென்றதும் அங்கே ஊர்க்காரர்களும், உறவினர்களும் பிரேதத்தை எரிக்காமல், எந்த தவறும் செய்யாத செல்வத்தை கொன்றவர்களை சும்மா விடக் கூடாது.

உடனே அவர்களை கைது செய்து வன்கொடுமை சட்டத்தில் தண்டிக்க வேண்டும். பத்து, பதினைந்து நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்னை நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பொதுமக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி பிரேதத்தை நம்பியூர்&புளியம்பட்டி ரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண உதவி

இதனிடையே, பேருந்து மீது கல் எறிந்து தாக்கியதில், உயிரிழந்த செல்வன்  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வீ.கே.ரமேஷ்

படங்கள்:
க.தனசேகரன்