Published:Updated:

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’
`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

நாடாளுமன்றத் தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது; மாற்றத்தை ஏற்படுத்துமா மம்தா பானர்ஜியின் மகா பேரணி என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது. தேர்தலுக்கான `அணி சேர்த்தல்’ படலங்கள் இறுதி அத்தியாயத்தை நெருங்கிவிட்டன. இந்தமுறை, நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி தவிர்த்து மாநிலத் தலைவர்கள் சிலரும் பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் இருப்பதால், எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது.

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

``பி.ஜே.பி-க்கும் காங்கிரஸுக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கு சாத்தியங்கள் குறைவுதான். அதனால், மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெரியளவில் பெறும் கட்சிக்கே பிரதமர் அரியணை வாய்க்கும். காலம் கனிந்தால், மாநிலக் கட்சித் தலைவர்களில் ஒருவருக்கு அரியணையில் அமரும் அதிர்ஷ்டமும் அடிக்கலாம்” என்று, அழுத்திச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்படியொரு வாய்ப்பைக் குறிவைத்து காய்நகர்த்தி வருகிறார்கள், சில மாநிலக் கட்சிகளின் தலைவர்கள். தெலங்கானா தேவுடு சந்திரசேகர் ராவ், ஆந்திராவின் அண்ணன் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்கத்தின் தீதி மம்தா, உத்தரப்பிரதேசத்தின் பெகன்ஜி மாயாவதி ஆகியோர், அந்தப்பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். 

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

நான்கு தலைவர்களில், நாயுடு காங்கிரஸ் அணிக்குள் ஏற்கெனவே வந்துவிட்டார். அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு சட்டமன்றத்தேர்தலையும் சந்தித்துவிட்டார். ஆனால், ’ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்’ என்ற வார்த்தை, அவரின் வாயிலிருந்து வரவில்லை. அறிவாலயத்தில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ’பிரதமர் வேட்பாளர்’ பிரகடனத்தைச் செய்தபோது, அதை அறியாதவர் போல அமர்ந்திருந்தார் அவர். 'அதெல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்' என்பதே, அவரின் முடிவாக இருக்கிறது. 

சந்திரசேகர் ராவ், ‘பி.ஜே.பி-யும் வேண்டாம்; காங்கிரசும் வேண்டாம்’ என்ற செயல்திட்டத்தை முன்வைத்து களமாடி வருகிறார். ”சந்திரசேகர் ராவுக்கு பிரதமர் ஆவதற்கான தகுதிகள் இருக்கிறது” என்று, அவரது கூட்டாளிகளும் துதி பாடி வருகிறார்கள். மாயாவதி, ”நான்தான் பிரதமர் வேட்பாளர். ஏற்பவர்கள் என்னுடன் வாருங்கள்” என்று அறிவித்தே விட்டார். அகிலேஷ் யாதவ் அவரை முன்மொழிந்திருப்பது முக்கிய நகர்வு. அந்த வரிசையில், மம்தாவின் ஆட்டம் இப்போது தொடங்குகிறது. கொல்கத்தாவில் ‘மகா பேரணி’க்கு ஏற்பாடு செய்து, தன்னுடைய பிரதமர் கனவுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார், அவர். அங்கே அணிவகுக்கும் போஸ்டர் மற்றும் பேனர்களில், “வருங்கால பிரதமர் மம்தா’ என்பன போன்ற வாசகங்கள், அதிகளவில் தென்படுகின்றன. 

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

’மகா பேரணி’ மம்தாவின் மாஸ்டர் மூவ். எந்த மாநிலத்துக்கும் சென்று எந்தத் தலைவரையும் சந்திக்காமல், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் அஸெம்பிள் செய்கிறார். காஷ்மீரின் உமர் அப்துல்லா முதல் தமிழகத்தின் ஸ்டாலின் வரை, அவரது அழைப்பை ஏற்று பேரணியில் பங்கேற்க இருக்கிறார்கள். பேரணிக்கு, ‘ஒன்றிணையும் இந்தியா (United India)’ என்று பெயர் சூட்டி இருக்கிறார். ”1977-ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், 1989-ல் ஜோதிபாசுவும் நடத்திய பேரணியைவிட மிகப்பெரிய பேரணி இது” என்கிறார்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்.

பேரணி நடக்கும், பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் தயாராகி உள்ளன. ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, சில அதிரடியான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். “வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகின்றன. காங்கிரஸ் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பது தெரியாது. ஆனால், பி.ஜே.பி. ‘125’ தொகுதிகளை மட்டுமே பிடிக்கும். அந்தக் கட்சி பிடிக்கும் இடங்களைவிட , மாநிலக்கட்சிகள் பிடிக்கும் இடங்கள் அதிகமாக இருக்கும்” என்று, அடித்துச்சொல்லி இருக்கிறார். "இந்த பேரணி, பி.ஜே.பி-க்கு நாங்கள் அடிக்கும் சாவுமணி’ என்றும் சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

மொத்தம் 20 கட்சிகளின் முக்கியத்தலைவர்கள், ‘மகா பேரணி’யில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேரணியைத் தவிர்த்துவிட்டார். ஆனாலும், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அபிஷேக் மனு சிங்வியை அனுப்புகிறார். 

மம்தாவுக்கு ராகுல் அனுப்பி இருக்கும் கடிதத்தில், “நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை அழித்து வருகிறது மோடி அரசாங்கம். அதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள், கொல்கத்தாவில் ஒன்று கூடுகிறார்கள். மம்தாவின் மகா பேரணிக்கு காங்கிரசின் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்திருக்கிறார். மாயாவதியும் ‘மகா பேரணி’யை தவிர்த்திருக்கிறார். அவருக்குப் பதிலாக அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர் சதீஷ் மிஷ்ரா கலந்துகொள்கிறார். கம்யூனிஸ்ட்களும் கலந்துகொள்ளவில்லை. “கூட்டணி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதனால், மம்தா பேரணியில் நாங்கள் பங்கேற்கவில்லை” என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள்.

`திரளும் தலைவர்கள்... திணறும் கொல்கத்தா...’ - மாஸ் காட்டுமா மம்தாவின் ‘மகா பேரணி?’

எப்படி இருந்தாலும், இந்தப் பேரணியில் நாட்டின் மிகமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பேரணி முடிந்ததும், அவர்களுடன் தனி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார் மம்தா. இந்தக் கூட்டத்தில், நாடளுமன்றத்தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, மம்தாவின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகலாம். ஏனென்றால், இனிமேலும் அவரால் ஆதரவுக்கட்சிகளுடன் கண்ணாமூச்சி ஆடமுடியாது.

மாயாவதியும் அகிலேஷூம் தனி அணி அமைத்துவிட்ட நிலையில், மம்தாவை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது காங்கிரஸ். ராகுல் காந்தி அனுப்பிய ஆதரவுக்கடிதம் அதைத்தான் உணர்த்துகிறது. ஆனால், ‘மம்தாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றால்தான் காங்கிரசுடன் கூட்டணி. இல்லை என்றால், தனித்தேப் போட்டியிடுவோம்” என்று சொல்லி வருகிறார்கள் திரிணாமூல் தலைவர்கள். மம்தாவின் எண்ணத்தையே அவரின் கட்சித்தலைவர்கள் பிரதிபலிக்கிறார்கள். பேரணியில் பங்கேற்க வந்திருக்கும் பி.ஜே.பி. அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, “பிரதமராவதற்கு மம்தாவுக்கு முழு தகுதியும் இருக்கிறது. அவர் மாநிலத்தலைவர் மட்டுமல்ல, தேசியத்தலைவரும் கூட” என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் மேலிடம் அனைத்தையும் அமைதியாகக் கவனித்து வருகிறது. மம்தாவின் முடிவைப்பொறுத்து, அவர்களின் தேர்தல் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். 

ஆக, ’அக்கா’வின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது ‘அக்பர் சாலை’!