Published:Updated:

`கான்வென்டிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்!’ - கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதிய கன்னியாஸ்திரீகள்

`கான்வென்டிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்!’ - கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதிய கன்னியாஸ்திரீகள்
`கான்வென்டிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்!’ - கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதிய கன்னியாஸ்திரீகள்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல்லுக்கு (Jalandhar bishop Franco Mulakkal) எதிராக போர்க்கொடி தூக்கிய நான்கு கன்னியாஸ்திரீகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டத்தை ரத்துசெய்யக் கோரி, அந்த நான்கு பேரும் கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். 

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். அப்போது, அங்கிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28 -ம் தேதி புகார் தெரிவித்திருந்தார்.இந்தப் புகாரையடுத்து, கடந்தஆண்டு செப்டம்பர் 18 -ம் தேதி, ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைது செய்யப்பட்டார். பிராங்கோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலபி ,ஜோசப்பின், அனிசிட்டா, அனுப்பமா ஆகிய நான்கு கன்னியாஸ்திரிகள் போராடினர். இதையடுத்து, அவர்மீது பாலியல் வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர், கடந்த அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். அந்தச் சூழலில், பிஷப்புக்கு எதிராக  நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பாதிரியார், மர்மமான முறையில் இறந்தார்.

இந்தச் சம்பவம் முடிந்து  சில மாதங்கள் ஆன நிலையில், பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகப் போராடிய 4 கன்னியாஸ்திரீகள் குருவிலங்காடு கான்வென்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு  இடமாற்றம் செய்துள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் அந்த கன்னியாஸ்திரிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை தனிமைப்படுத்தும் முயற்சி இது என்று குற்றம் சாட்டிவந்தனர். இதனால், பணியிட மாற்றத்தை எதிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் அவர்கள் சேராமல், தொடர்ந்து அந்த கான்வென்டிலேயே தங்கியிருக்கின்றனர். 

இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை ரத்துசெய்து, தற்போது வசிக்கும் கான்வென்டிலேயே தங்க அனுமதிக்கக் கோரி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி உள்ளிட்ட 5 பேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை தனிமைப்படுத்தும் முயற்சியாக இதைப் பார்ப்பதாகக் கூறியிருக்கும் அவர்கள், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், பிஷப் பிராங்கோ தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.