Published:Updated:

'ஒரு வாழ்த்து... ஒரு உத்தரவு!' - கனிமொழிக்கு ஸ்டாலினின் வழிகாட்டல்

தேர்தல் தேதி அறிவிப்புக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கும் வேலையில், தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் கனிமொழி. 

'ஒரு வாழ்த்து... ஒரு உத்தரவு!' - கனிமொழிக்கு ஸ்டாலினின் வழிகாட்டல்
'ஒரு வாழ்த்து... ஒரு உத்தரவு!' - கனிமொழிக்கு ஸ்டாலினின் வழிகாட்டல்

ஸ்டாலினைத் தொடர்ந்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. `தூத்துக்குடி தொகுதியில் பிரசாரத்தின் ஓர் அங்கமாக சபைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் கனிமொழி. தொகுதிவாரியாக தொடர்ந்து பத்து நாள்கள் ஆய்வு செய்ய இருக்கிறார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் பூத் வாரியாக ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றனர் தி.மு.க தொகுதி பொறுப்பாளர்கள். இந்த ஆய்வின் முடிவுகளை தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் அறிக்கையாக அளித்துள்ளனர். இதில் பல மாவட்டங்களில் பூத் கமிட்டிப் பணிகளில் நடந்துள்ள குளறுபடிகளைப் பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளனர். இந்தக் குளறுபடிகளை எல்லாம் சரிசெய்யும் பணியில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் என மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதில், `25 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடலாம்' என்ற பேச்சு வலம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கும் வேலையில், தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் கனிமொழி

`மக்களை நேரடியாக சந்தித்துத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' என்பதுதான் கனிமொழியின் எண்ணமாக இருந்தது. இதற்கு ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். கடந்த சில வாரங்களாகவே தூத்துக்குடி தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டு வருகிறார். நேற்று முதல் ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கிவிட்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் குளத்தூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது.

அப்போது பேசிய கனிமொழி, `இந்த அரசாங்கம் மக்களைப் பற்றி, மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படக்கூடிய அரசாங்கமாக இல்லை. விரைவில் தேர்தல் வரும். நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரும். நமக்கு நல்லவழி கிடைப்பதற்கு அதுதான் சரியாக இருக்கும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்' என்றார் உறுதியாக. அவர் செல்லும் இடங்களில் எல்லாம், `வருங்கால மத்திய அமைச்சர்' என்று தொண்டர்கள் முழக்கமிட்டுள்ளனர். 

தூத்துக்குடிக்குச் செல்வது குறித்து கனிமொழி, ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அப்போது பேசிய ஸ்டாலின், "தொகுதி தொடர்பாக என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தையும் செய்து தருவார்கள். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் உன்னுடைய வெற்றி அமைய வேண்டும். இந்த வெற்றியானது, சட்டசபைத் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெறுவதற்கான ஆதார சுருதியாக இருக்க வேண்டும். அதிலும், திருச்செந்தூரில் மூன்றில் 2 பங்கு வாக்குகளுக்குக் குறைவில்லாமல் எடுக்க வேண்டும். நீ போட்டியிடுவதன் மூலம், தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நம்முடைய வெற்றி உறுதிப்படுத்தப்படும். கலைஞரின் மகளாக வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என நெகிழ்ந்திருக்கிறார். 

``இந்த வார்த்தைகள் கனிமொழிக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் 29-ம் தேதி வரையில் தூத்துக்குடியில் தங்கியிருந்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்த இருக்கிறார். அவருடைய முக்கியத்துவத்தை தலைமை அறிந்து வைத்திருக்கிறது" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.