Published:Updated:

ஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்! - ஜி.ராமகிருஷ்ணன்

தி.ஜெயப்பிரகாஷ்
ஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்! - ஜி.ராமகிருஷ்ணன்
ஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்! - ஜி.ராமகிருஷ்ணன்

``கொடநாடு கொலை கொள்ளை விவகாரங்களை அம்பலப்படுத்தியது எதிர்கட்சிகள் அல்ல என்பதால், உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார்.

நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக நவம்பர் 19 - ம் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொடநாடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் ஹாலிவுட் திரைப்பட த்ரில்லர் காட்சிகளைப்போல இருக்கின்றன. அதுகுறித்து விசாரிக்க தமிழக காவல்துறை விசாரணை போதாது. மத்திய புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். ஒரு முதலமைச்சர் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளபோது, அவர் பொறுப்பில் இருந்தால் விசாரணை சரியாக நடைபெறாது. எனவே முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

சி.பி.ஐ மற்றும் நீதிமன்றங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சித்தாலும், சி.பி.ஐ மூலமாக கொடநாடு விவகாரத்தின் உண்மை நிலையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சம்பவங்களை அம்பலப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, எதிர்கட்சிகளோ அல்ல. எந்தவொரு அரசியல் அமைப்பையும் சாரதா தெஹல்கா என்ற பத்திரிகை நிறுவனம்தான் அம்பலப்படுத்தியிருக்கிறது. எனவே அதனடிப்படையில்தான் உண்மை நிலையைக் கண்டறிய எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடித்து, மதசார்பற்ற ஒரு அரசை உருவாக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் யுக்தி'' என்று தெரிவித்தார்.