Published:Updated:

சயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார்? - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு

சயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார்?  - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு
சயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார்? - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு

``கொடநாடு விவகாரத்தில், வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சதிவலை பின்னப்படுகிறது. இதற்கெல்லாம் பின்புலம் தி.மு.க., அதற்கு ஸ்டாலின் குரல்கொடுக்கிறார்."  சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில், ஜனவரி 18-ம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள்தான் இவை.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயனுக்கும், வாளையாறு மனோஜுக்கும் கடந்த ஜனவரி 18-ம் தேதி ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கான பிணைப் பாதுகாப்பில் கையெழுத்திட்ட நான்கு பேரில் மூவர், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள், ஒருவர் த.மா.கா-வைச் சேர்ந்தவர் என்பது அ.தி.மு.க-வின் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ராஜ் சத்யனின் குற்றச்சாட்டு. மேத்யூ சாமுவேலின் ஆவணப்பட பின்னணியில் தி.மு.க இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருக்கும் தி.மு.க-வினர் ஜாமீன் கையெழுத்திட்டு உள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சாமியாடியுள்ளார்.

உண்மையிலேயே சயன், மனோஜ் இருவருக்கும் பிணைப் பாதுகாப்பு வழங்கியவர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களா, அவர்கள் எதற்காக தனிநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கேள்விகளோடு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தோம்.

சயனுக்காக ஜாமீன் கையெழுத்திட்டுள்ள சுந்தரராஜன், மோகன் குமார் இருவருமே கிண்டி லேபர் காலனியைச் சேர்ந்தவர்கள். போட்டோகிராஃபராக இருக்கும் சுந்தரராஜன், தி.மு.க சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனோடு ஒன்றாக இருக்கும் படங்கள் நேற்று வைரல் ஆனது. 

போட்டோகிராஃபர் சுந்தரராஜனிடம் பேசினோம். "எனது போட்டோகிராஃப் தொழில்ரீதியாக கேரளாவுக்குப் பலமுறை சென்றுள்ளேன். அப்படிச் செல்லும்போது, சயனின் சகோதரர் சத்யன் பழக்கமானார். நேற்று சயனுக்காக ஜாமீனில் கையெழுத்திட ஆள் தேவைப்பட்ட நேரத்தில், சத்யன் என்னைத் தொடர்புகொண்டு உதவி கோரினார்.  அதனடிப்படையில் எனது நண்பரான தி.மு.க வட்டச் செயலாளர் மோகன்குமார் மூலமாக மேலும் சிலரை ஏற்பாடுசெய்து, ஜாமீனில் கையெழுத்திட்டோம். மற்றபடி, இதில் அரசியல் ஏதுமில்லை. ஒரு உதவியாகத்தான் இதைச் செய்தோம்" என்றவரிடம், "மா.சுப்பிரமணியனின் ஆஸ்தான போட்டோகிராஃபர் நீங்கள்தான் என கூறப்படுகிறதே?" என்றோம்.

"இது தவறு. அவரும் நானும் ஒரே ஏரியாக்காரர்கள். இந்தப் பகுதியில் எந்தக் கட்சியினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் என்னை அழைப்பார்கள். அப்படித்தான் அவரும் எனக்கு பழக்கம். ஒரு வி.ஐ.பி என்கிற வகையில், அவரோடு விருப்பப்பட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மற்றபடி, நான் ஒரு சாதாரண போட்டோகிராஃபர் தான்!" என்றார்.

சயனுக்கு ஜாமீன் கையெழுத்திட்ட 170 ஏ வட்டச் செயலாளர் மோகன்குமார் கூறுகையில், "சுந்தரராஜன் கேட்டுக்கொண்டதால், ஜாமீன் பாதுகாப்புக்கு மேலும் இருவரை ஏற்பாடு செய்துகொடுத்தேன். யார் சொல்லியும் நாங்கள் கையெழுத்திடவில்லை. இதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எங்கள் கட்சித் தலைமை கூறித்தான் ஜாமீனில் கையெழுத்திட வேண்டுமென்றால், எனது வட்டத்திலேயே 13 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதிலிருந்து 4 பேரை ஏற்பாடுசெய்து கையெழுத்து போட்டிருக்க முடியாதா. நானே எதற்காக வம்படியாகக் கையெழுத்துப்போட்டு மாட்ட வேண்டும்? இது முழுக்க முழுக்க நட்பின் அடிப்படையில் செய்யப்பட்டது!" என்றார்.

வாளையாறு மனோஜுக்காகக் கையெழுத்திட்ட கதிர்வேல், 170 ஏ வட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ஈக்காட்டுத்தாங்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவரான இவர், ரியல் எஸ்டேட் தொழில்புரிகிறார். மு.க.ஸ்டாலினுடன் கதிர்வேல் இருக்கும் படங்கள் நேற்று அ.தி.மு.க ஐ.டி விங்க்கால் வைரல் ஆக்கப்பட்டன. இதுகுறித்து கதிர்வேல் பேசுகையில், "இதுல கட்சிக்கு வேலையே இல்லைங்க. ஒரு உதவியாகத்தான் செஞ்சோம். எங்களுக்கு மட்டுமில்ல, போட்டோகிராஃபர் சுந்தரராஜனுக்கும் இந்த வழக்குல இவ்வளவு சிக்கல் இருப்பது தெரியாது. நாங்க யாரும் ஜாமீனுக்கான பணத்தைக் கட்டல. சயன், மனோஜ் தரப்பே ஏற்பாடு பண்ணிட்டாங்க" என்றார். மனோஜுக்கு கையெழுத்திட்ட மற்றொருவரான அரும்பாக்கம் ராஜா, மோகன் குமாரின் துணி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். தமிழ் மாநிலக் கட்சியிலிருந்து பல மாதங்களுக்கு முன்னரே அவர் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் ஜாமீனில் கையெழுத்திட வட்டச் செயலாளர் மோகன் குமார் தான் ஏற்பாடு செய்துள்ளார். 

ஜனவரி 18-ம் தேதி, நீதிமன்றத்திற்கு வந்திருந்த சயன், தன் குடும்பத்தில், அம்மாவைத் தவிர வேறு யாரும் இல்லையென நம்மிடையே கூறினார். இப்போது, சத்யன் என்கிற புது சகோதரர் எங்கேயிருந்து வந்தார் என்பது தெரியவில்லை. சயன், மனோஜ் இருவருக்கும் தி.மு.க பிரமுகர்கள் ஜாமீனில் கையெழுத்திட்டதைவைத்தே, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இழுக்கப்பட்டதன் பின்னணியில் தி.மு.க இருப்பதாக அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டத் துவங்கிவிட்டனர். இதுகுறித்து தெளிவான விளக்கம் இதுவரையில் தி.மு.க தரப்பில் இருந்து வரவில்லை.

இந்நிலையில், சயன் மற்றும் மனோஜ் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யக் கோரி, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது. 

கொடநாடு வழக்கின் மர்மம் போதாது என்று, இப்போது ஜாமீன் வழங்கியவர்களின் பின்னணியும் மர்மமாக மாறியுள்ளது.