Published:Updated:

ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?

ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?

ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?

ங்கதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா. இது இந்திய அரசு கடைபிடித்துவரும் ‘முதலில் அண்டைநாடு’ வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் கிழக்கு எல்லைப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், வங்கக்கடல் நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் இணக்கமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 350 இடங்களில், ஹசீனாவின் அவாமி லீக் கூட்டணி 288 இடங்களைக் கைப்பற்றியது. இதில் அவாமி லீக் மட்டுமே 266 இடங்களை அள்ளியது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகியுள்ளார் ஹசீனா. பிரதான எதிர்க்கட்சியான ஓக்கிய ஜாடியா கூட்டணி, ஆறு இடங்களில் மட்டுமே வென்றது. தேர்தலைப் பார்வையிட்ட சார்க் மனித உரிமை நிறுவனமும் சர்வதேசத் தேர்தல் மேற்பார்வை அமைப்புகளும், இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்தது எனச் சான்றளித்துள்ளன. ஹசீனாவுக்கு எதிராக எழுந்த எந்தக் குற்றச்சாட்டுகளும் இத்தேர்தலில் எடுபடவில்லை. ஆரம்பத்திலிருந்தே பிரதமர் பந்தயத்தில் முன்னணியில் இருந்தார் ஹசீனா.

ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?

அதற்கான காரணங்களும் நிறைய. போர்க்குற்றம் புரிந்தவர்கள்மீது ஹசீனா எடுத்த நடவடிக்கைகள், மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கியதும் ஹசீனாவின் மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. கலீதா ஜியா கட்சி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் என்ற அச்சம், கலிதாவுக்கு எதிராக மக்களை வாக்களிக்க வைத்தது. ஊழல் குற்றச்சாட்டுகளால் செயலிழந்து கிடக்கும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற இயலவில்லை. சரி, ஹசீனாவின் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன நன்மை?

“2001-2006 காலகட்டத்தில் கலீதாவின் ஆட்சியின்போது வங்கதேசத்தின் இறையாண்மைக்குப் பாதகம் ஏற்படும் என்று இந்தியாவுடனான சாலைப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகளும் நல்லுறவைப் பேணும் வெளியுறவுக் கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டன. ஆனால், அதன் பின்பு ஹசீனா பிரதமராகப் பொறுப்பு ஏற்றவுடன் நிலைமை மாறியது. ஹசீனாவின் 2008 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆட்சிக் காலகட்டங்களிலும் கிழக்கு எல்லையில் பதற்றத்தைக் குறைக்கவும், எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. கலிதா மறுத்துவந்த சாலை இணைப்பைச் சாத்தியமாக்கினார் ஹசீனா. உள்ளூர் தொழில் முனைவோர் வடகிழக்கு இந்தியாவிலும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளை அணுகுவதற்கு  வாய்ப்புகளை  ஹசீனா உருவாக்கினார்.

இவை மட்டுமே போதுமா என்றால் இல்லை... வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய வங்கக்கடல் நாடுகளை உள்ளடக்கிய இந்தியாவின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு திட்டத்துக்கு (BIMSTEC) வங்கதேசத்தின் ஆதரவு தேவை. கூடவே, பிராந்திய மேம்பாட்டுக்கும் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் ஹசீனா மனது வைக்க வேண்டும். தவிர, இந்தியாவிலிருந்து சுமார் 10 பில்லியன் டாலர் வங்கதேசத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதே அளவுக்கு வருடாந்திர வர்த்தகமும் இந்தியா செய்துவருகிறது. எரிசக்தி, மின்சாரம், நதிநீர் பங்கீடு என இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும் எதிர்காலத் திட்டங்களும் காத்திருக்கின்றன. அவை  நிறைவேற வங்கதேசத்தின் ஒத்துழைப்புத் தேவை” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹாட்ரிக் ஹசீனா! - இந்தியாவுக்கு நன்மை என்ன?

இன்னொரு பக்கம் ஹசீனாவின் வெற்றியை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதுகுறித்து பேசுபவர்கள், “பிற நாடுகளுக்கான உதவித் திட்டங்களைத் திணிக்காமல், அந்நாடுகளின் தேவையைக் கேட்டறிந்து, அவர்கள் கேட்கும் கட்டமைப்பு உதவிகளைச் செய்து தருவதுதான், இந்தியாவின் ‘முதலில் அண்டைநாடு’ வெளியுறவு கொள்கைத் திட்டம். அதன்படி, இந்தியா வங்கதேசத்தில் செய்த உள்கட்டமைப்புப் பணிகள், பிராந்திய இணைப்புகள், சாலைப் போக்குவரத்து வசதிகள் ஆகியவை வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. இதுவும் ஹசீனாவை மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வைத்து, அவர் வெற்றிபெற காரணமாக அமைந்தது. சொல்லப்போனால், இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி இது. அதேசமயம் வங்கதேசம் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தாலும் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் சர்வதேச அரசியல் காய்நகர்த்தல்களையும் சமாளிக்க வேண்டும். ஏனெனில், இந்த தேர்தலில் ஹசீனாவைத் தோற்கடித்து இந்தியாவுக்கு எதிரான அரசை நிறுவ பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன என்பதையும் இரு நாடுகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய நல்லுறவு தொடர்ந்து நீடிக்க, உள்நாட்டில் தூண்டிவிடப்படும் இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஹசீனா தடுக்க வேண்டும். மதரீதியாகச் செயல்படும் எதிர்க்கட்சிகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என்கிறார்கள்.

ஹசீனா சாதிப்பாரா?

- கே.ராஜு