Published:Updated:

ஆணையிட்டு வேலையை ஆரம்பித்தது தேர்தல் ஆணையம்!

மாற்றப்படும் அதிகாரிகள் பட்டியலை, பிப்ரவரி 28-க்குள் இறுதி செய்து, மார்ச் முதல் வாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறான தகவலை அனுப்பினால், உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறது ஆணையத்தின் இந்தக் கடிதம்.

ஆணையிட்டு வேலையை ஆரம்பித்தது தேர்தல் ஆணையம்!
ஆணையிட்டு வேலையை ஆரம்பித்தது தேர்தல் ஆணையம்!

புத்தாண்டு பிறந்தபோதே, நாடு முழுவதும் தேர்தல் குறித்த ஒரு விதமான பரபரப்புத் தொற்றிக் கொண்டது. தேசத்தின் அடுத்த ஐந்தாண்டு தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல், இந்த ஆண்டில் நடக்கப் போகிறது என்பதற்கான பரபரப்பு அது. வழக்கமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலுக்கு, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும். இந்த ஆண்டிலும் அப்படி நடக்கவே வாய்ப்புகள் அதிகம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தயாராகியுள்ளது. அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே, அதற்கான ஆயத்தமாக, சில வேலைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அதில், முதல் பணியாகச் செய்வது, தேர்தல் பணியில் நேரடித் தொடர்புள்ள அனைத்து அதிகாரிகளையும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு அறிவுறுத்துவதாகும். இந்த அறிவுறுத்தலை, கடந்த 16-ம் தேதியன்று, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

ஆணையத்தின் முதன்மைச் செயலர் நரேந்திர பட்டோலியா அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், மே 31-ம் தேதியை காலவரம்பாக நிர்ணயித்து, அதிகாரிகளை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, அந்தத் தேதியில் அதே மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் அல்லது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரையும் வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று, சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் மாற்ற வேண்டுமென்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் போன்ற பணிகளை மேற்கொள்ளும் ஆட்சியர், துணை ஆட்சியர், இணை ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் போன்றோர், இதன்படி மாற்றப்பட வேண்டும். அதேபோன்று, தொகுதிக்கான தேர்தல் அலுவலராகப் பணியாற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தலில் நேரடித் தொடர்புடைய அனைத்து அலுவலரையும் மாற்றுவதற்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதேபோன்று, சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி.,க்கள், ஆயுதப்படை கமாண்டண்ட்கள், சிறப்பு எஸ்.பி., மாவட்ட எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் போன்றோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக மாற்றிவிட்டு, தேர்தலின்போது மீண்டும் தங்களது மாவட்டத்துக்குக் கொண்டு வந்து, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பணியாற்ற வைக்கும் வித்தையையும் அரசியல்வாதிகள் பலர் செய்வதுண்டு. ஆணையத்தின் உத்தரவு, இதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த 2017 மே 31-க்கு முன்பாக நடந்த தேர்தல்களின்போது, அதிகாரிகள் பணியாற்றிய இடங்களுக்கும் அவர்களை மாற்றக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது ஆணையம். மாற்றப்படும் அதிகாரிகள் பட்டியலை, பிப்ரவரி 28-க்குள் இறுதி செய்து, மார்ச் முதல் வாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறான தகவலை அனுப்பினால், உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறது ஆணையத்தின் இந்தக் கடிதம்.

இதனால், அடுத்த மாதத்தில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான அல்லது தெரிந்த அரசியல்வாதிகள் இருக்கும் மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, அதற்காகக் காய் நகர்த்தும் வேலைகளும் இப்போதே ஆரம்பித்து விடுவர். ஆக மொத்தம், விரைவில் தேசம் முழுவதும் தொற்றிக் கொள்ளப் போகிறது தேர்தல் ஜூரம்.