Published:Updated:

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4

- கே.கே.மகேஷ்

படங்கள்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா. காளிமுத்து 


குவாரி விஷயத்தில் பி.ஆர்.பி. தரப்பினர் நடத்திய கொள்ளை ஒருபுறம் இருக்க, அதிகாரிகள் நடத்திய வசூல் சாம்ராஜ்யம் மலைக்க வைக்கிறது. ஒரு தாசில்தார் ரசீது கொடுத்து லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்பது இப்போது வெளியாகி இருக்கும் அதிர்ச்சி தகவல்.

லஞ்சத்திற்கு ரசீது

கிரானைட் முறைகேடு தொடர்பாக கள ஆய்வுப்பணி நடைபெறுவதைப் போலவே, ஆவணங்களை கைப்பற்றுவதற்காக ஒரு குழு பம்பரமாய் சுற்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இப்படி கலெக்டர் அமைத்த குழுவினர் பல்வேறு ஆவணங்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் ஒரு ஆவணம் லஞ்ச ரசீது. அதாவது, தனக்குத் தருவதாகச் சொன்ன பணத்தை கிரானைட் அதிபர் கொடுக்காமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக தாசில்தார் வெங்கடசுப்பு பெற்ற ரசீதுதான் அது.

"மதுரை மாநகராட்சி அனுப்பானடி அய்யனார்கோவில் தெரு டோர் நிர் 15பி யில் வசிக்கும் கே.சின்னச்சாமி நாயுடு குமாரர் சி.வெங்கடசுப்பு அவர்களுக்கு, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருச்சுனை கிராமம் நல்லமுத்தன் செட்டியார் குமாரர் கே.என்.சோலைராஜன் ஆகிய நான் எழுதிக் கொடுத்த ரசீது.

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4

மதுரை மவட்டம் மேலூர் வட்டம் திருச்சுனை மற்றும் கீழவளவு கிராமங்களில் உள்ள 3 குவாரிகளில் இருந்து கிரானைட் வெட்டியெடுக்க அரசாணை பெறும் பொருட்டு பல வழக்குகளிலும், அரசு செலவினங்களையும் என்னால் செய்ய இயலாத நிலையில் ஆரம்பம் முதல் தாங்கள் எனக்காக அனைத்து செலவுகளையும், நடவடிக்கைகளையும் செய்து வந்துள்ளீர்கள். இதற்காகவும், என் குடும்ப செலவினத்திற்காகவும் தங்களிடம் இருந்து ரொக்கமாகவும், காசோலைகள் மூலமாகவும், தாங்கள் கிரானைட் அதிபர்களிடம் இருந்து பெற்ற டெபாசிட் தொகை மூலமாகவும் நான் பெற்றுக் கொண்ட ரூ.51,000,00 (ரூபாய் ஐம்பத்தி ஒன்று லட்சம் மட்டும்) பெற்றுக் கொண்டதற்கு இதுவே ரசீது. - கையொப்பம்.

இப்படி தன் கைப்பட எழுதி அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார் சோலைராஜன். பின்னர் இந்த ரசீதைக் காட்டி மிரட்டியே, அந்த தொகையை தாசில்தார் வசூலித்துவிட்டார் என்பது தனிக்கதை. ஒரு தாசில்தார், சாதாரண சிறு கிரானைட் அதிபரிடம் வாங்கிய 'அன்புக் கடனே' 51 லட்சம் என்றால், பி.ஆர்.பி. நிறுவனத்திடம் கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வாங்கிய அன்பளிப்பு எவ்வளவு? இருக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாரபட்ச நடவடிக்கை

ஆனால் இதுவரையில் கிரானைட் முறைகேட்டிற்காக கைது செய்யப்பட்டது யார் தெரியுமா? சில வி.ஏ.ஓ.க்கள் மட்டுமே. ஒரு தாசில்தார் கூட தண்டிக்கப்படவில்லை. ஒரு குற்றத்தை இரண்டு பேர் செய்கிறார்கள். ஆனால் இருவருக்குமே வெவ்வேறு அளவுகோலைக் கொண்டு குற்றம் மதிப்பிடப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய அநியாயம்? உதாரணமாக, பி.ஆர்.பி. நிறுவனத்தில் முறைகேடு நடந்தால் நேரடியாக ஓனரையே கைது செய்தார்கள் போலீஸார். ஆனால், அதுவே அரசு தரப்பு என்று வருகிறபோது, முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த கலெக்டர், துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை விட்டுவிட்டு, வி.ஏ.ஓ., தலையாரியை மட்டும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இவ்வளவு நடந்த பிறகும், மதுரையின் முன்னாள் கலெக்டர்கள் மதிவாணனும்,

##~~##
காமராஜூம் இப்போதும் நிம்மதியாக இருக்கிறார்கள்.
தன் கைகளை வைத்தே தன் கண்களைக் குத்திக் கொள்வது போல, டாமின் அதிகாரிகள் அரசு இயந்திரங்களை வைத்தே அரசு குவாரியில் கற்களை வெட்ட அனுமதித்தது மட்டுமின்றி, அதை பி.ஆர்.பி.யின் பட்டா இடத்திற்குக் கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஜீரோ. நொங்கு தின்றவன் தப்பிவிட்டான், நோண்டித் தின்றவனான கடைநிலை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள் மேலூர் மக்கள்.
கலெக்டர் சொன்ன பதில்
இதுபற்றி கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டோம். "சாதாரண ஊழியர், உயர் அதிகாரி என்ற பாகுபாடு எல்லாம் காட்டப்படவில்லை. எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். கிரானைட் முதலாளிகளுக்கு உடந்தையாக இருந்த ருக்மணி என்ற தாசில்தாரை பதவி இறக்கம் செய்திருக்கிறோம். முன்னாள் கலெக்டர்கள் இருவர் மீதும், கனிம வளத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம்- 4

அவர்களது வீடுகளில் போலீஸ் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ.க்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தவறு செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்ட வி.ஏ.ஓ.க்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை நிறுத்தி வைத்திருக்கிறோம்" என்கிறார்.

இது ஒருபுறம் இருக்கட்டும். பி.ஆர்.பி. குவாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கற்களை அளவிடும், மதிப்பிடும் பணி முடிந்துவிட்டதா? மொத்தம் எவ்வளவு கற்கள் அளக்கப்பட்டுள்ளன? அதை எப்போது ஏலம் விடப் போகிறார்கள்? தவறு நடக்காமல் இருக்க அதில் என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்கப் போகிறார்கள்? நாளை பார்க்கலாம்...

அடுத்த கட்டுரைக்கு