
“வேலூரின் இரு அமைச்சர்களும் கண்டுகொள்வதில்லை!”ஓவியம்: கார்த்திகேயன் மேடி
#EnnaSeitharMP
#MyMPsScore
வேலூரில் வழக்கறிஞராக மட்டுமே அறியப்பட்டவர் செங்குட்டுவன். ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரான சேகர் ரெட்டி ஆதரவுடன் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதன்பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர், அரசு வழக்கறிஞர் என அடுத்தடுத்து பதவிகளில் அமர்த்தப்பட்ட செங்குட்டுவன், 2014-ல் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். பி.ஜே.பி கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி எம்.பி ஆனார் செங்குட்டுவன். பின்னர், தினகரன் ஆதரவாளராக மாறினார். அதனாலே இவரது தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் சரிவர நடக்கவில்லை என்கிறார்கள். தொகுதிக்குள் வலம் வந்தோம்.
பாலாறு பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவரான வெங்கடேசன், ‘‘செங்குட்டுவன் இந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்தார். அதில் 50 சதவிகிதம் அளவுக்கு கமிஷன் பணம் தனிநபர் பாக்கெட்களுக்குத்தான் போனது. வாணியம்பாடி தாலுகா மருத்துவமனைக்கு விபத்து அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடம் அமைக்க வேண்டும். வாணியம்பாடியில் அரசுக் கல்லூரி கொண்டுவர வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு மலைப் பகுதிகளைச் சுற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல நான்கு மணி நேரம் ஆகிறது. ஆனால், வனப்பகுதி வழியே குறுகிய சாலை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அகலப்படுத்தி நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். இவையெல்லாம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. ஒன்றைக்கூட செங்குட்டுவன் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் எம்.பி ஒருமுறைகூட கலந்துகொண்டதில்லை. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உதவிகளைப் பெற்றுத்தரவில்லை.
தோல் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரைப் பாலாற்றில் அப்படியே விடுகின்றனர். மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில் பாலாற்றில் உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு அபாயகரமான கழிவுகள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி-யிடம் பலமுறை முறையிட்டோம். எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. தொழிலாளர்களுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவரவில்லை. 20 சதவிகிதத் தொழிற்சாலைகளில்தான் தொழிலாளர்களுக்கு பி.எஃப் பிடித்தம் செய்கின்றனர். மீதம் இருக்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்கள். இதையெல்லாம் எம்.பி-க்கு பட்டியல் போட்டுத் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான கார்த்திகேயன், ‘‘வேலூர் கோட்டை மைதானத்தில் நேரு காலத்திலிருந்து அரசு, தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. மைதானத்தை இப்போது, மத்தியத் தொல்லியல் துறை, பூங்காவாக மாற்றியுள்ளது. அரசு பொருட்காட்சி நடத்தக்கூட இடமில்லை. வேலூர் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவில்லை’’ எனக் குற்றம்சாட்டுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முல்லை, ‘‘மாநகரின் வெளியே சுற்றுச்சாலை, மாநகருக்குள் ‘ரிங் ரோடு’ மற்றும் சுரங்கப்பாதைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திருக்கலாம். சத்துவாச்சாரியிலிருந்து புதிய பஸ் நிலையம் வழியாக காட்பாடி ரயில் நிலையம்வரை பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ராணுவத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். இவர்களின் குழந்தைகள் படிப்புக்காக ராணுவப் பள்ளி மற்றும் ராணுவ மருத்துவமனையை அமைத்திருக்கலாம். எதையுமே எம்.பி செய்யவில்லை. ‘குட்டி சிவகாசி’ என்றழைக்கப்படும் குடியாத்தத்தில் ஜி.எஸ்.டி வரியால் தீப்பெட்டித் தொழில், கைத்தறி லுங்கி உற்பத்தி நலிவடைந்துவிட்டது. இந்தத் தொழில்களைப் பாதுகாக்க எம்.பி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. வாணியம்பாடி நியூ டவுனில் ரயில்வே மேம்பாலம் கட்டவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. அதுவும் நிறைவேறவில்லை. கரும்புக்கான ஆதார விலையை அறிவிக்கும் மத்திய அரசிடம், மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு நிதி ஒதுக்க எம்.பி வலியுறுத்தவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல.சந்திரகுமார், “இந்த மாவட்டத்தின் பிரதானத் தொழில்களான விவசாயம், பீடி சுற்றுதல் நலிவடைந்ததால் மக்கள் பிழைப்புத் தேடி பெங்களூரூக்கு செல்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுவந்திருக்கலாம். பேரணாம்பட்டுப் பகுதியை ஒட்டியிருக்கும் மலைக் கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் இல்லை. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக பேரணாம்பட்டு பஸ் நிலையத்தை, நகரிலிருந்து கிராமப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் எம்.பி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்’’ என்றார்.
‘‘ஆங்கிலேயர் காலத்தில், வேலூர் அப்துல்லாபுரத்தில் செயல்பட்டுவந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, மறுபடியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி மையம், சரக்கு முனையம் உட்பட பல்வேறு கட்டடங்களைக் கட்ட திட்டமிட்டார்கள். இதற்காக முதற்கட்டமாக 18 பயணிகள் அமர்ந்து செல்லும் சிறிய ரக விமானங்களை சென்னை - வேலூர் - பெங்களூரு இடையே இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை. வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் செங்குட்டுவன் எடுக்கவில்லை’’ என்றார்கள் தொகுதி மக்கள்.
ஆம்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலசுப்ரமணி, ‘‘அகரம்சேரியில் புதிதாகத் திறக்கப்பட்ட அரசுக் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்காக, அங்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுக்கிறார்கள். அகரம்சேரி - குடியாத்தம் இடையே பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. மாதனூரில் போலீஸ் நிலையம் கேட்டிருந்தோம். எம்.பி-யால் கொண்டுவரக்கூடிய அனைத்து திட்டப் பணிகளையும், அரசே தடுக்கிறது’’ என்றார்.
அகரம்சேரி, ஒதியத்தூர் மற்றும் நாயக்கனேரி ஆகிய மூன்று கிராமங்களை செங்குட்டுவன் தத்தெடுத்திருக்கிறார். ‘‘அவர் தத்தெடுத்த கிராமங்களுக்கு ஒருமுறை மட்டுமே எம்.பி வந்து போனார். அதன்பிறகு அவர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை’’ என்று அந்த கிராமத்தினர் பொங்குகிறார்கள். அகரம்சேரி கிராமத்துக்குச் சென்றோம். அங்கிருந்தவர்கள், ‘‘அகரம்சேரியில் ஒரு வங்கியை மட்டுமே எம்.பி கொண்டு வந்துள்ளார். ஆங்காங்கே ஹைமாஸ் லைட்கள் போட்டுக்கொடுத்துள்ளார். தார்சாலை, குடிநீர், அடிப்படைச் சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை’’ என்றார்கள்.
எம்.பி செங்குட்டுவனிடம் பேசினோம். ‘‘முக்கியமானப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் கண்காணிக்கும் குழுவின் சேர்மன் நான். கடந்த நான்கரை வருடங்களில் இரண்டு முறைதான் அந்தக் குழு கூடியிருக்கிறது. தொகுதிக்குள் எந்தப் பிரச்னை என் கவனத்துக்கு வந்தாலும், உடனே அரசின் துறைகளுக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்துகிறேன். ஆனால், மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் கிடைக்கவில்லை. மத்திய அரசு, தமிழக தலைமைச் செயலாளர் என்று பலரிடமும் கேட்டுப் பார்த்தும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. என்ன சொல்வது... இதுதான் என் நிலைமை’’ என ஆரம்பத்திலேயே ஆதங்கத்தைக் கொட்டியவரிடம், ‘‘மாநிலத்தை உங்கள் கட்சிதானே ஆட்சி செய்கிறது. சொல்லி நிறைவேற்றவேண்டியதுதானே?’’ என்றோம்.
‘‘எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்குடைகளை அமைக்க முயன்றேன். மாவட்ட அளவில் அதிகாரிகள் எவ்வளவு முட்டுக்கட்டைகள் போட்டார்கள் தெரியுமா? போராட்டம் நடத்திய பிறகுதான் நிழற்குடை அமைக்கப்பட்டது. சத்துவாச்சாரியில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றேன். டெக்னிக்கலாக பல பிரச்னைகளைக் கிளப்பினார்கள். கடைசியில் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். வேலூரில் தோல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவ நாடாளுமன்றத்திலும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் பேசினேன். அதுவும் நடக்கவில்லை. வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க அதிகாரிகள் குழு, ஆய்வு செய்துவிட்டுச் சென்றது. இங்குள்ள அதிகாரிகள் நிலம் ஒதுக்கும் விவகாரத்தில் ஒத்துழைக்காததால் பள்ளி அமைக்கப்படவில்லை.
தென் பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.253 கோடிதான் தேவைப்படும். எட்டுவழிச் சாலை அமைப்பதற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கும் மாநில அரசு, இந்தத் திட்டத்துக்கு சிறு தொகையைக்கூட ஒதுக்கவில்லை. பாலாற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் மற்றும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணைகள் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ‘தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலில் நஷ்டஈடு தந்துவிட்டு, பிறகு படிப்படியாகத் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்’ என நாடாளுமன்றத்தில் பேசினேன். இதுதொடர்பான புகாரை மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமும் தெரிவித்தேன். வேலூர் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை” என்றார் விரக்தியுடன்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- ஆர்.பி., கோ.லோகேஸ்வரன்



எம்.பி. ஆபீஸ் எப்படி இருக்கு?
எம்.பி-க்கு தொகுதியில் அலுவலகம் இல்லை. காட்பாடி திருநகர் சுந்தரர் தெருவில்தான் எம்.பி-யின் வீடு இருக்கிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், எம்.பி-யிடம் நேரடியாக முறையிடுவது அவ்வளவு சுலபமல்ல. அவரின் வீட்டு கேட்டில் உள்ள தபால் பெட்டியில் கோரிக்கை மனுக்களைப் போட வேண்டும். ‘‘மலட்டாற்றின் குறுக்கே பேரணாம்பட்டு பத்தலப்பல்லி அணை திட்டப் பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’ என்ற கோரிக்கை மனுவை விவசாயி லோகநாதன் என்பவர் எம்.பி வீட்டுக்குப் போய் தபால் பெட்டியில் போட்டிருந்தார். அந்த மனு மீதான நடவடிக்கைக்கு இதுவரை பதில் இல்லை.

