Published:Updated:

தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தல; அது வந்து... அமைச்சர் ஜெயக்குமாரின் கலகல பதில்

தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தல; அது வந்து... அமைச்சர் ஜெயக்குமாரின் கலகல பதில்
தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தல; அது வந்து... அமைச்சர் ஜெயக்குமாரின் கலகல பதில்

``தலைமைச் செயலகத்தில் ஊதுவத்தி கொளுத்துவதைக்கூட சிபிஐ விசாரணை கேட்பார் ஸ்டாலின்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலுடன் பதிலளித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் கடுமையான நிதிப்பற்றாக்குறை இருக்கின்ற நிலையில் அதை அரசு வெற்றிகரமாகச் சமாளித்து இன்றுவரை ஜெயலலிதா என்ன நோக்கத்துக்காகத் திட்டங்கள் கொண்டுவந்தாரோ அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பணம் தேவை. சம்பளம் கொடுக்க பணம் தேவை. பென்சன் கொடுக்க பணம் தேவை. இப்படி எல்லோருக்கும் எல்லாம் செய்துகொண்டிருக்கிறோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். சாலைகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். பணம் வானத்திலிருந்து வராது. அதனால் நிதிநிலை சீராகும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதல்வர், துணை முதல்வர் தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலம் கனியும்போது அவர்களது கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்" என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தி.மு.க சார்பில் துரைமுருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்த தி.மு.க தயாராகிவிட்டது. அ.தி.மு.க எப்போது தயாராகும்?

எங்களை பொறுத்தவரை கூட்டணிக்குப் பல கட்சிகள் முன்வந்துகொண்டிருக்கின்றன. யார் யார் வருகிறார்கள், அவர்களிடம் பேசுவதற்கு கட்சி சார்பில் குழு மற்றும் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்படும். அந்தந்த நேரத்தில் நிச்சயமாகக் கூட்டணி அமைக்கப்படும். 
 

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடந்திய கூட்டம் 3வது அணியை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து?

பொதுவாகச் சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது தி.மு.கவுக்கும் ஸ்டாலினுக்கும்தான் பொருந்தும். ஏனென்றால் அது கடந்த கால வரலாறுகள். தமிழக மக்கள் உற்றுநோக்கினால், 17 வருடங்கள் மத்தியில் இருந்துகொண்டு இரட்டை வேடம் அவர்கள் போட்டதினால் தமிழ்நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை. இந்த மாதிரி நிலையில், அவர்களது சந்தர்ப்பவாதம் என்பது காலப்போக்கில் வெளுத்துவிடும். சென்னையில் ராகுல் காந்தியை முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் முன்மொழிய வேண்டியதுதானே. அங்கே ஏன் பம்மினார் ஸ்டாலின். அதுதான் அவருடைய இரட்டை வேடம். பிறகு சென்னையில் தேர்தலுக்குப் பிறகு நாம பேசலாம் என்று கூறுகிறார். இது எப்படிப்பட்ட நிலைபாடு பாருங்கள். இப்படிப்பட்ட ஒருநிலைப்பாட்டை மக்கள் உணர்வார்கள்.
 

ஓபிஎஸ், ஈபிஎஸ் இவருக்கும் இடையே ஒற்றுமையே இல்லை என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். அண்மையில் ஓபிஎஸ் அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக தகவல் வந்திருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து?

யாகம் நடத்தினால் ஒருவர் முதல்வராக முடியுமா. அப்படியென்றால் நீங்கள் (செய்தியாளர்களைப் பார்த்து) யாகம் நடத்துங்கள். நீங்களும் முதல்வராகிவிடலாம். எந்த அளவுக்கு அவர் கருத்துக் குருடராக இருக்கிறார். இதைச் சிறுபிள்ளைத்தனமாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு அலுவலகம் செப்பனிடப்பட்டு ஊதுவத்தி கொளுத்தி புகை வந்தால்கூட யாகம் வளர்ப்பதுன்னு அர்த்தமா அல்லது கற்பூரம் கொளுத்தி புகை வந்தால்கூட யாகம் நடத்தினார் என்பதா. எது பண்ணினாலும் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே சிண்டு மூட்டி விடுகிறார். எப்படி சிண்டு மூட்டினாலும் ஒற்றுமை உணர்வோடு அதிமுக என்ற இயக்கம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்  தாெண்டர்கள் வரை வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது ஒரு மாபெரும் அ.தி.மு.க.

உட்கார்ந்ததால் சிபிஐ, நடந்தால் சிபிஐ, படுத்தா சிபிஐ என்று எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஊதுவத்தி கொளுத்துவதைக்கூட சிபிஐ விசாரணை கேட்பார். தற்போது அவருடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது".