Published:Updated:

மோடி, அமித் ஷா முன் உள்ள சவால்கள் என்னென்ன?

உத்தரப்பிரதேசத்திலும், நாடு தழுவிய அளவிலும் பி.ஜே.பி-க்கு ஏற்கெனவே ஆதரவு அளித்த சில கட்சிகள் தற்போது விலகிக் கொண்டுள்ளதால், அந்தக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணியின் உத்தி என்ன?

மோடி, அமித் ஷா முன் உள்ள சவால்கள் என்னென்ன?
மோடி, அமித் ஷா முன் உள்ள சவால்கள் என்னென்ன?

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் மோடிக்கும், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவுக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்பது இப்போதே தெரியவரத் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஒன்றுக்கொன்று எதிரும், புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் இரு கட்சிகளும், மக்களவை இடைத்தேர்தலில் கைகோத்தது போன்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைக் கைகழுவி விட்டு, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருப்பது, மத்தியில் ஆளும் பி.ஜே.பி.-க்குத்தான் மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியைப் பொறுத்தவரை, ஜாட் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதுடன், பூர்வாஞ்சல் பகுதியிலும் கணிசமான வாக்குகளைக் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2017 சட்டசபைத் தேர்தலிலும் பி.ஜே.பி. பெற்றுள்ளது.

ஆனால், அந்தச் சமயத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதற்கிடையே பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்தை பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நடைமுறைப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் உள்ள குறிப்பிட்ட பிரிவினரைக் குறிவைத்து இந்த நடவடிக்கையை பி.ஜே.பி. அரசு எடுத்துள்ளது. இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. 

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டத்தை மத்தி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஓரளவு ஆதரவு நீடித்தாலும், மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தி நிலவுவதாகப் பெயர் கூற விரும்பாத சிலர் குறிப்பிட்டனர். கோயில்கள், பிரசாரம், பசுக்கள் பாதுகாப்பு என்று முதல்வர் சென்றுகொண்டிருப்பதால், மோடிக்கு எதிரான மனோநிலை மக்களிடையே உருவாகிக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரை, உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றே பி.ஜே.பி. வெற்றிபெற்று இருப்பதாகவும், முதியோர் ஓய்வூதியப் பிரச்னை மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதாகவும் வேறு சிலர் குறிப்பிட்டனர். மொத்தத்தில் பி.ஜே.பி-க்கு எதிரான நிலையே உத்தரப்பிரதேசத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜூம் இணைந்து போட்டியிடுவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பினருடன், மாநிலத்தில் குறிப்பிடத்தக்க சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு கிடைக்கும் என்பதால் பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய நெருக்கடியாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு மாநிலத்தில் பதிவாகும் வாக்குகளில் 40 சதவிகிதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பி.ஜே.பி-க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவையே ஏற்படுத்தும். 

உத்தரப்பிரதேசத்திலும், நாடு தழுவிய அளவிலும் பி.ஜே.பி-க்கு ஏற்கெனவே ஆதரவு அளித்த சில கட்சிகள் தற்போது விலகிக் கொண்டுள்ளதால், அந்தக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணியின் உத்தி என்ன? மீண்டும் வெற்றிபெற பி.ஜே.பி என்ன செய்யப்போகிறது. காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மாநிலக் கட்சிகள் நடத்திய பேரணி எதை நோக்கிப் போகும்? 

எப்படி இருப்பினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடிக்கும், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் மிகப்பெரிய சவாலாகவே விளங்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.