Published:Updated:

பிரமாண்ட பெருமாள் சிலைக்கு இடையூறான ஊத்தங்கரை ரவுண்டானா - ஜே.சி.பி மூலம் அகற்றம்!

பிரமாண்ட பெருமாள் சிலைக்கு இடையூறான ஊத்தங்கரை ரவுண்டானா - ஜே.சி.பி மூலம் அகற்றம்!
பிரமாண்ட பெருமாள் சிலைக்கு இடையூறான ஊத்தங்கரை ரவுண்டானா - ஜே.சி.பி மூலம் அகற்றம்!

ரே கல்லால் ஆன 420 டன் எடை கொண்ட பிரமாண்ட  பெருமாள் சிலையைக் கொண்டு செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியிலுள்ள ரவுண்டான அகற்றப்பட்டது. 

பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக,  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியகொரக்கோட்டை கிராமத்தில் 64 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட வடிவில் 420 டன் எடை கொண்ட பெருமாள் சிலை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.  

இந்தக் கல்லில் ஒரு முகம், இரு கரம், ஒரு சங்கு மற்றும் ஒரு சக்கரம் ஆகியவை மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளை அங்கு கொண்டு சென்று செய்ய முடிவெடுக்கப்பட்டது.  அதன்படி இந்தச் சிலையை 160 டயர்கள் கொண்ட கார்கோ  லாரியில் ஏற்றப்பட்டது. கல்லின் பாரம் தாங்காமல் 30 டயர்கள் வெடித்துச் சிதறியதால் மீண்டும் 240 டயர்கள் சேர்க்கப்பட்டது. இதை இழுத்துச் செல்ல லாரியின் முன்புறம் இரண்டு வால்வோ லாரிகளும், பின்புறம் தள்ளுவதற்கு ஒரு லாரியும் சேர்க்கப்பட்டுக் கடந்த டிசம்பர் மாதம் பயணம் தொடங்கியது. 

பயணம் தொடங்கியதிலிருந்து ஒரு கி.மீ செல்வதற்கே 20 நாள்கள் ஆகின. ஆற்றுப்பாலங்கள், குறுகிய பாதைகள் போன்றவை பெரும் தடையாக அமைந்துள்ளன. மேலும், பல்வேறு ஊர்களில் சிலையைக் கொண்டு செல்லும்போது சிலை மோதி ஆங்காங்கே மின்கம்பங்கள், வீடுகள், 14 கடைகளும் இடிந்து விழுந்துள்ளன. பாதிக்கப்பட்டர்களுக்குச் சரியான இழப்பீடு வழங்கவில்லை என்ற புகார்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஊரிலும் லாரிகள்  நிறுத்தப்பட்டு, சிலையைக் கொண்டு செல்லச் சாலையை விரிவாக்கம் செய்த பின்பே பயணம் தொடர்கிறது. தற்போது கடந்த 4 நாள்களாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள பாம்பாறு அணைப்பகுதியில் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை ரவுண்டானாவைக் கடந்து செல்லும் வழி மிகவும் குறுகலாக இருக்கும் காரணத்தினால், இந்த ரவுண்டானா ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. 

சாலை விரிவாக்கத்துக்காக பல்வேறு மரங்கள், வீடுகள் சாலைகள் என்று அழிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.