சமூகம்
Published:Updated:

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

ர்நாடகத்தில் எம்.எல்.ஏ-க்கள் குதிரைப்பேர விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மூன்று நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா, மீண்டும் முதல்வராகும் கனவில், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயற்சி செய்வதாக எழுந்த பரபரப்பும் ஓய்ந்திருக்கிறது. மும்பைக்கு ‘பேக்’ செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சரிகட்டி, குமாரசாமி ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறது காங்கிரஸ்.

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

கர்நாடகத்தில் காங்கிரஸ் துணையுடன் நடக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் அதிருப்தியில் இருந்தார்கள். அதிருப்தியைச் சரிகட்ட காங்கிரஸ் கட்சியுடன் பேசி, அமைச்சரவையை மாற்றியமைத்தார் முதல்வர் குமாரசாமி. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோளி, சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டன. பெல்லாரி தொகுதி எம்.எல்.ஏ-வான துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் சங்கர், நாகேஷ் இருவரும், ‘காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்கிறோம். பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்று கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்துப் பரபரப்பைக் கிளப்பினர். 

துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கு, இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான நாகேந்திரா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இவருடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் சேர்ந்துகொள்ள கர்நாடக அரசியலில் சூடு கிளம்பியது. இதனால் சுறுசுறுப்பு அடைந்த பி.ஜே.பி தரப்பு ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாய்வரை பேரம் பேசப்படுவதாகப் பரபரப்பு எழுந்தது.

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கர்நாடக அரசியல் பார்வையாளர்கள், “இப்படி ஒரு செய்தி வெளியானதும், காங்கிரஸ் தலைமையிலிருந்து, மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி
எம்.எல்.ஏ-க்களிடம், ‘கட்சித் தாவல் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுத்தால், பதவி பறிபோகும். உடனே ஊர் திரும்புங்கள்’ என்று எச்சரிக்கை விடப்பட்டது. இன்னொருபுறம், முதல்வர் குமாரசாமி தரப்பிலிருந்தும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் ‘உங்கள் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும்’ என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சமாதானம் அடைந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்தே ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இருந்து பி.ஜே.பி பின்வாங்கிவிட்டது” என்றார்கள்.

இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‘‘கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்துவருகிறது. எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்காக நாங்கள் காங்கிரஸ்
எம்.எல்.ஏ-க்களுடன் குதிரைப் பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை” என்று மறுத்துள்ளார். தற்காலிகமாகத் தப்பியிருக்கிறது குமாரசாமியின் ஆட்சி. ஆனால், நீடிக்குமா என்பது கர்நாடக அரசியல் நிலவரத்தைப் பொறுத்தே இருக்கிறது.

- எம்.வடிவேல்