
“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி!
கொடநாடு விவகாரம் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்த விவகாரத்தை இப்போது

பற்றவைத்திருக்கும் ‘தெஹல்கா’வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‘தமிழக முதல்வர் எடப்பாடிதான் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்’ என்கிற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஷயான், மனோஜ் இருவர் கைதுசெய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் மேத்யூ சாமுவேல், தமிழக போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில், மேத்யூவைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
“உங்களை சில அரசியல் கட்சிகள் இயக்குவதாகவும், அவர்களுக்காகத்தான் இந்த ஆவணப்படத்தை நீங்கள் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறதே?”
“அப்படி எதுவுமே இல்லை. இது என் வேலை. எனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. என் பின்புலத்தை விசாரித்தாலே, எனக்கும் கட்சிகளுக்கும் தொடர்பு இருக்காது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.”
“டிரைவர் கனகராஜ் உயிருடன் இல்லாத நிலையில், எடப்பாடி பற்றி அவர் கூறியதையெல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது?”
“கனகராஜ்தான் இந்தக் கொள்ளைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்தான் ஷயானைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். கனகராஜ் சொல்லித்தான் இங்கு எல்லாமே நடந்தன. கனகராஜுக்கு உயர்மட்டத்திலிருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், அவரும் துணிந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். இவை எல்லாமே ஷயானின் வீடியோ ஆதாரத்தில் பதிவாகியிருக்கிறது. சரி, கனகராஜ் சொல்ல வில்லையென்றால் வேறு யார் சொல்லியிருப்பார்கள்? நீங்களே யூகியுங்கள்.”

“அப்படியென்றால் அதற்கான ஆதாரம் இருக்கிறதா?”
“இருக்கிறது. அதனால்தான் இந்த ஆவணப் படத்தையே எடுத்தோம்.”
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
“நிச்சயமாக தமிழக முதல்வர் பழனிசாமிதான் காரணம். அவர் ஒரு கொலைகாரர். இதை எங்கு வேண்டுமானலும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். கொடநாட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் அவர் கைக்கு வந்ததும், இதில் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி. அரசியலில் இப்போது பழனிசாமி தனித்துவிடப்பட்டிருக்கிறார். ஆனாலும், அவருக்கு ஆதரவாகவே தமிழகத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. அரசியலுக்கு வரவிரும்பும் ரஜினிகூட இத்தனை கொலைகளைப் பற்றி வாய்பேசாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இதுகுறித்து எல்லோரும் பேச வேண்டும். அப்போதுதான் மறைந்துகிடக்கும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.”
“இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு ஐந்து கோடி ரூபாய் விலை பேசப்பட்டது என்கிறார் ஷயான். இதற்கு முன்பணம் ஏதும் தரப்பட்டதா?”
“ஷயானிடம் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க மாகக் கொடுக்கப்பட்டது. அதை வைத்துத்தான் கேரளத்திலிருந்து கொடநாடு செல்ல வாகன வசதி செய்திருக்கிறார்கள். வங்கிப் பணப் பரிவர்த்தனை எதுவும் செய்யவில்லை.”
“கொள்ளை நடந்தபோது ஷயான், மனோஜ் இருவரும் எஸ்டேட்டுக்குள் வீடியோ எதுவும் எடுத்தார்களா?”
“கொள்ளை நடந்தது இரவு நேரத்தில். அப்போது மின்சாரமும் இல்லை. இவர்களும் வீடியோ எடுக்கவில்லை. அப்போது இரவுக் காவலர்கள் இருவர் பணியில் இருந்திருக்கிறார்கள்.”

“என்னென்ன எடுக்க வேண்டும் என்று கொள்ளையர்களிடம் முன்னரே தெரிவிக்கப்பட்டதா?”
“ஆம். எல்லாமே முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்கிறது. எப்படிச் செல்ல வேண்டும், எந்தெந்த அறைகள் எந்தெந்த இடங்களில் உள்ளன, அங்கு செல்வதற்கான வழிகள் என்ன, சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யாது என எல்லாவற்றையும் கனகராஜ் தெளிவாகக் கூறியிருக்கிறார். அதன் பின்பே உள்ளே சென்று முக்கியமான ஆவணங்களைக் கொள்ளையடித் திருக்கிறார்கள்.”
“ஆனால் சில கைக்கடிகாரங்கள், பேப்பர் வெயிட் ஆகியவற்றை மட்டுமே போலீஸ் மீட்டுள்ளதே?”
“கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களே, சில ஆவணங்களை எடுத்த தாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், சில ஆயிரம் கூடப் பெறாத பொருள்களைத்தான் மீட்டதாகக் காவல்துறை சொல்லியிருக்கிறது. இதிலிருந்தே எடப்பாடி பழனிசாமி தனது கைப்பாவையாகக் காவல் துறையை மாற்றியிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.”
“இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இருக்கிறதா?”
“அப்படிச் சொல்ல முடியாது. ஓ.பி.எஸ் குறித்த ஆவணங்களும் அதில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்தான், அவர் அமைதி காக்கிறார்.”
“உங்களுக்குள் யார் முதலில் தொடர்புகொண்டீர்கள். ஷயானா, நீங்களா?”
“ஷயான்தான்.”
“ஷயான் உங்களைத் தொடர்புகொள்ளக் காரணம் என்ன, உங்களிடம் தெரிவித்த விவரங்களையெல்லாம் போலீஸில் அவர் தெரிவிக்கவில்லையா?”
“போலீஸிடம் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கின் நான்காவது குற்றவாளியான ஜெம்ஷீத் இதைப் போலீஸில் மீண்டும் மீண்டும் தெரியப் படுத்தியதாலேயே அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்குத் தொடரப்பட்டது. அதனால் அவர் சிறைக்கும் சென்றார். இதைப் பார்த்த மற்றவர்கள், பயத்தில் போலீஸிடம் செல்லவில்லை. மேலதிகத் தகவல்களையும் போலீஸிடம் சொல்லவில்லை. இந்தக் கொள்ளை வழக்கில் ஷயான் ஜாமீன் பெற்று வந்ததிலிருந்து, கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். ஷயான் தன் குடும்பத்தின ருடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அவரின் மனைவி வினுப்ரியா, மகள் நீத்து உயிரிழந்தனர். ஷயான் உயிர் பிழைத்தார். இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின் ஏதோ சதி இருப்பதாக நினைத்த ஷயான், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்ய இருந்தார். இதற்காக ஒரு வழக்கறிஞரை அவர் நாடிச் சென்றபோது, அந்த வழக்கறிஞர்தான் என்னிடம் பேசச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் நாங்கள் சந்தித்தோம். மீண்டும் போலீ ஸிடம் சென்றால், வேறு ஏதேனும் பிரச்னை வரும் என்றுதான் ஊடகத்தையும் மக்களையும் நம்பி வெளியே வந்தார்கள். தமிழகத்தில் உள்ள சில போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் இதுதான் சரி என்று சொன்னார்கள். அதன் பிறகுதான் இரண்டு மாதங்களில் இந்த ஆவணப்படத்தை எடுத்தோம்.”
“ஷயான், மனோஜ் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா?”

“கண்டிப்பாக. இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள், இவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்வார்கள். அதனால்தான், அவர்கள் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், தமிழகக் காவல்துறை இவர்களைப் பேசவிடாமல் செய்யவே இருவரையும் டெல்லிக்கு வந்து வாரன்ட் இல்லாமல் கடத்திச்சென்றிருக்கிறது. அது தவறு, சட்டவிரோதம் என்பதால்தான் இரவோடு இரவாக நீதிமன்றம் அவர்களை விடுவித்திருக்கிறது. அதன் பின்பும் போலீஸார் இந்த விவகாரத்தில் சட்டவிரோதமான செயல்களைச் செய்ய திட்டமிட்டுவருகிறார்கள்.”
“கொடநாடு விவகாரத்தை ஆவணப்படமாக வெளியிட்டதைத் தொடர்ந்து ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?”
“ஆமாம், என் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏராளமான மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொலைபேசியில் யாரும் மிரட்டவில்லை. நம்மை போன்ற ஊடகத்துறையினருக்கு இதெல்லாம் வழக்கமான ஒன்றுதானே!”
“உங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே?”
“சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறேன். எதையும் தைரியமாக எதிர் கொள்வேன்.”
“ஷயான் மற்றும் மனோஜ் குடும்பத்துக்கு கேரள அரசு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறதா?”
“கேரள முதல்வருக்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதினேன். திருச்சூரில் உள்ள அவர்கள் இருவரின் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்புக் கொடுப்பதாக கேரள அரசு பதில் தெரிவித்திருக்கிறது.”
- இ.லோகேஷ்வரி
படம்: எம்.விஜயகுமார்