
தினேஷ் தற்கொலை ஏன்? - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்!
கொடநாடு தொடர்பான மர்ம மரணங்களில் ஒன்று அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷின் தற்கொலை. கொடநாடு கொலை சம்பவத்துக்குப் பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான மர்மங்களுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. ‘மரணமடைவதற்கு முன்பு மொபைல் போனில் நீண்ட நேரம் ஒருவருடன் தினேஷ் பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார்’ என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், கோத்தகிரி அருகே உள்ள கெங்கரைதான் கிராமத்தில் இருக்கும் தினேஷின் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.

மிகுந்த தயக்கத்துடன் நம்மிடம் பேசினார் தினேஷின் தந்தை போஜன். “தினேஷ், எஸ்டேட்டில் ஏழாண்டுகள் வேலை பார்த்தான். காலை 7 மணிக்குச் சென்றால், இரவு 8 மணிக்குதான் வீட்டுக்கு வருவான். அவனுக்குக் கண் பார்வையில் லேசாகக் கோளாறு இருந்தது. அதற்கான சிகிச்சைக்காக கோவைக்குச் சென்றிருந்தபோதுதான் எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தன. நாங்கள் பயந்துபோய் அவனிடம் மொபைலில் பேசினோம். ‘உனக்கும் ஏதாவது பிரச்னை இருக்காப்பா?’ என்று கேட்டோம். அதற்கு அவன், ‘எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை’ என்றான். அதன் பிறகு எப்போதும்போலதான் இருந்தான். மூன்று மாதங்களுக்குப்பின் திடீரென்று தற்கொலை செய்துகொண்டான். குடும்பப் பிரச்னையோ, தனிப்பட்ட பிரச்னைகளோ எதுவும் அவனுக்கு இல்லை. அவன் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டான் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நாங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று உடைந்துபோன குரலில் பேசினார்.
தினேஷின் தாய் கண்ணகி, “வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பான். சம்பளம் முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குத் தேவைப்படும்போது பணம் கேட்பான். அதிர்ந்துகூடப் பேசமாட்டான். எஸ்டேட்டில் கொள்ளை நடந்த பிறகு சில மாதங்கள் வேலைக்குப் போனான். அவன் தற்கொலை செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, சனிக்கிழமை வேலைக்குச் சென்று வந்தான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. திங்கள் கிழமை எஸ்டேட்டுக்கு போன் செய்து, ‘நாளை வருகிறேன்’ என்று கூறினான். காலையில் கோயிலுக்குச் சென்றுவந்தான். சாமி வேஷ்டி அணிந்திருந்தான். வீட்டில் விளக்கு ஏற்றினான். ‘டிபன் செஞ்சிட்டு எழுப்புங்கம்மா’ என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான். அடுத்த ஐந்து நிமிடத்தில் தூக்குமாட்டிக்கொண்டான். என்ன காரணம் என்று தெரியவில்லை” என்றார் கண்ணீருடன்.

‘‘வீடு கட்டிவிட்டுத் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அவனது கனவு. அதனால், லீவு எடுக்காமல் பண்டிகைக் காலத்தில்கூட வேலைக்குச் சென்றான். அவன் நினைத்திருந்தால் இந்த வேலையை வைத்துப் பல விஷயங்களைச் சாதித்திருக்கலாம். ஆனால், எனக்கு வேலைக்காக உதவிக் கேட்கச் சொன்னபோதுகூட அவன் கேட்கவில்லை. ‘நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்’ என்று சொல்வான். அவன் இறந்ததாக நாங்கள் நினைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை அண்ணன் எங்களுடன் இருக்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாம்” என்று கூறிய தினேஷின் தங்கை ராதிகா, உடைந்து அழ ஆரம்பித்தார்.
தினேஷின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, “கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்ததிலிருந்தே, தினேஷ் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. ஆனால், தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், அந்த நபர் கொடுத்த அழுத்தத்தில் தற்கொலை செய்திருக்கிறார்” என்றார்கள். தினேஷ் யாரிடம் பேசினார், அவருக்கு யாராவது அழுத்தம் கொடுத்தார்களா என்பதையெல்லாம் தெளிவுபடுத்தாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது படிந்துள்ள கொலைப்பழிக் கறை அழியாது.
- இரா.குருபிரசாத், படங்கள்: கே.அருண்