சமூகம்
Published:Updated:

சூடாகும் சூடான்!

சூடாகும் சூடான்!
பிரீமியம் ஸ்டோரி
News
சூடாகும் சூடான்!

சூடாகும் சூடான்!

ரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது சூடான். நாடு முழுவதும் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. மக்களின் போராட்டம், ஆட்சியைக் கவிழ்க்கும் கிளர்ச்சியாக மாறியதால், முப்பது ஆண்டுகளாகக் கோலோச்சிவந்த சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரின் ஆட்சி எந்நேரமும் கவிழலாம் என்கிறார்கள், சூழலை உன்னிப்பாகக் கவனித்துவரும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

சூடானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியால், அத்தியாவசியப் பொருள்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு சூடான் பவுண்டுக்கு விற்ற ரொட்டி, மூன்று பவுண்டுகளுக்கு விற்கிறது. எரிபொருள் விலை மக்களின் வாங்கும் திறனைத் தாண்டிவிட்டது. விலைவாசி உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு, மூன்றில் இரு பங்கு குறைக்கப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

சூடாகும் சூடான்!

கடந்த முப்பது ஆண்டுகளாக, மூன்றாம் நாடுகளில் தீவிரமடைந்துவரும் பொருளாதார, உரிமை, இனப் பிரச்னைகள் போராட்டங்களாக மாறிவருவதும், அதைக் கட்டுப்படுத்த ஆளும் அரசுகள் ஒடுக்குமுறை, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போது சூடானிலும் அது தொடர்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடாக இருந்த சூடான், எண்ணெய் வளத்தைக் குறிவைத்த வல்லரசுகளின் தூண்டுதலால், 2011-ல் இரண்டாகப் பிரிந்தது. தெற்கு சூடான் தனி நாடாக உருவானது. இந்தப் பிரிவால், சூடான் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் வளத்தை இழந்து, நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், சூடானை மேலும் பலவீனமாக்கியது. பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்க, மக்களுக்கான உணவு மானியம் உள்பட பல்வேறு சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன. அரசின் நாணய மதிப்புக் குறைப்பு நடவடிக்கை, நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால், கடந்த ஐந்து வாரங்களாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர். பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், போராட்டத்தை ஒடுக்க, அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளது அரசு.

இதுகுறித்துப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், “1989-ல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சாதிக் அல்-மாடியின் அரசைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றியவர் ஒமர் அல் பஷீர். இவர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, வன்முறையைத் தூண்டி எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவருகிறார். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, இவருக்கு எதிராக இரண்டு சர்வதேச கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், எண்ணெய் அரசியல் மற்றும் எல்லை தாண்டும் அகதிகள் விவகாரங்களை முன்வைத்து சில மேற்கு நாடுகளும் அரபு நாடுகளும் இவருக்கு ஆதரவு அளித்துவருகின்றன.

சூடாகும் சூடான்!

ஒரு காலத்தில் போர் குற்றவாளியாக பஷீரைப் பார்த்த அரபு நாடுகள், உளவுத் தகவல்களைப் பெறவும், தங்கள் எல்லைப் பிரச்னைகளைச் சமாளிக்கவும் அவரை ஓர் ஆதாரமாகப் பார்க்கத் தொடங்கின. மத்திய தரைக்கடலைக் கடந்து வரும் ஆப்பிரிக்க குடியேறிகளைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சூடானின் உதவி தேவைப்படுகிறது. அதனால் அதிபரின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களை அந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதனால் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்த பஷீருக்கு, இந்தப் போராட்டம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கடந்த வாரம் 22 அரசியல் கட்சிகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இறங்கியதால், கிளர்ச்சி வலுவடைந்துள்ளது. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல இஸ்லாம் அமைப்புகளும் அதிபருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. பல கட்சிகள், ஆளும் கூட்டணியிலிருந்து விலகியதும், பஷீரைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. பஷீரால் பதவி இழந்து, நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் சாதிக் அல்-மாடி, கடந்த டிசம்பர் மாதம் நாடு திரும்பியதால் போராட்டக்காரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவமும், சிறப்புப் படையும் முடுக்கிவிடப் பட்டுள்ளது. இதுவரை 40 பேர் உயிரை இழந்துள்ளனர். இதனால் எந்த நேரமும் பஷீரின் ஆட்சி கலையலாம்” என்றார்கள்.

சூடாகும் சூடான்!

அடக்குமுறைக்கு சூடான் மக்கள் ஒருபோதும் அஞ்சியது இல்லை. மக்களுக்கு எதிரான ஆட்சியைத் தூக்கியெறியவும் அவர்கள் தயங்கியது இல்லை. கிளர்ச்சிகளின் மூலம் இரு முறை ஆட்சியைத் தூக்கிவீசியவர்கள் சூடான் மக்கள். ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும் ராணுவம்கூட மக்களின் பக்கமே நின்றுள்ளது. பஷீரும் இந்த கடந்த கால வரலாற்றை அறிந்தே இருப்பார். எனவே, மக்களின் உரிமைக் குரலை பஷீர் கேட்க வேண்டிய நேரம் இது!

- கே.ராஜு