சமூகம்
Published:Updated:

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

‘மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா...’ என்ற பீதியில் இரண்டரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாமல் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு எதுவுமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகள் இழந்ததோ, ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி 2018, பிப்ரவரி 28-ம் தேதி டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து ரூ.1,390 கோடி நிதி ஒதுக்குமாறு கோரினார். 2018, ஜூன் 20-ம் தேதி, மத்திய பஞ்சாயத்துராஜ் இணை அமைச்சர் புருஷோத்தம் ரூப்லாவைச் சந்தித்த வேலுமணி, நிதி ஒதுக்குமாறு அவரிடம் கோரினார். 2018 செப்டம்பர் 27-ம் தேதி மீண்டும் அருண் ஜேட்லியைச் சந்தித்து ரூ.1,600 கோடி ஒதுக்கும்படி வேலுமணி கேட்டார். இறுதியாக, 2018 டிசம்பர் 26-ம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, ரூ.3,776.20 கோடி ஒதுக்குமாறு வேலுமணி கோரினார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடைபெறாமல் சல்லிக்காசு கூடக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு கறார் காட்டிவிவிட்டது. இதனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன.

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி
ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

இது தொடர்பாக, தன்னாட்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் நந்தக்குமாரிடம் பேசினோம். “தமிழகத்தில் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுப் பிரதிநிதிகள் தேர்வாகியிருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள்தொகைக்கு ஏற்பவும் உள்ளாட்சிப் பதவிகளில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுகூட எஸ்.சி., எஸ்.டி-க்கு ஒதுக்கப்படவில்லை. மேலும் தேர்தல் அறிவிப்பாணைக்கும், அட்டவணைக்கும் போதிய இடைவெளி இல்லை. இவற்றை எதிர்த்துத்தான் உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. தேர்தல் நடத்தத் தடையில்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால், வார்டு வரையறைப் பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் இயற்றி, தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டிருப்பது அ.தி.மு.க அரசுதான். இதனால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு ஏதும் இல்லை. ஆனால், மத்திய அரசின் ரூ.3,000 கோடியை, தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இழந்துள்ளன. ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு உள்ளாட்சி அமைப்புப் பலிகடா ஆகிவிட்டது.

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதில் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இறந்துவிட்டால் ஈமக்கரியைச் செய்ய ரூ.2,500 அளிப்பது வரை, உள்ளாட்சித் தலைவர்கள் இருந்தால் உடனுக்குடன் வேலைகள் நடக்கும். இப்போது, ஃபைல் போட்டு, பில் பாஸ் செய்து, இறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே பணம் வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் அதிகரித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்களைப் பெயருக்கு நடத்துகிறார்கள். பஞ்சாயத்துக்குள் ஒரு நிறுவனம் அமைய வேண்டுமென்றால், அதற்கான உரிமத்தைப் பஞ்சாயத்திடம் பெற்று, ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். இன்று, எந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது, ஏன் நமது கிராமத்துக்குள் அவர்கள் வருகிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. எல்லாவற்றையும் பி.டி.ஓ அலுவலகத்திலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். இது ஒரு ஜனநாயகப் படுகொலை” என்றார் காட்டமாக.

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பழனிதுரை, “பேரிடர் காலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. சுனாமி பாதித்தபோது, மீட்புப் பணிகளையும், புனரமைப்புப் பணிகளையும் உள்ளாட்சித் தலைவர்களே கவனித்தார்கள். இன்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், கஜா புயலின்போது அமைச்சர்களை அங்கு அனுப்பினார்கள். அவர்களோ, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்காகக் காத்திருந்தனர். உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் திட்டங்களை உள்ளாட்சிகளின் அனுமதியின்றி அமல்படுத்த முடியாது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மக்களுக்கு நெருக்கமான ஒரு தலைவன் இல்லாமல் போகிறான்” என்றார் வேதனையுடன்.

மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கானைச் சந்தித்தோம்.

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

“தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர், வார்டு வரையறை பணிகளை நடத்தியிருக்க வேண்டும். 1996-க்கு பிறகு, 22 வருடங்கள் கழித்து 2017-ல் தான் வார்டு வரையறை பணிகள் நடைபெற்றுள்ளன. ஏழு பிராந்தியங்களில் கூட்டம் நடத்தி மக்களின் கருத்துகளைக் கேட்டு வார்டு வரையறைப் பணிகளை முடித்துள்ளோம். ‘எங்க ஆளுங்க இருக்குற தெருவை, அவங்களோட ஏன் இணைக்கிறீங்க? இதை ஏன் பெண்கள் வார்டா அறிவிக்கிறீங்க?’ என எதிர்ப்புகள் கிளம்பின. அனைத்துக் கருத்துகளையும் ஏற்று மாநகராட்சிகள் முதல் கிராம பஞ்சாயத்துகள் வரை 1,19,270 வார்டுகளில், வார்டு வரையறை பணிகளை முடித்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் இடஒதுக்கீடு பணிகள் முடிவடையும். பின்னர், தேசியத் தகவல் மையத்துடன் இணைந்து, வார்டு வாரியாக வாக்காளர்களை இணைக்கும் பணிகள் நடைபெறும். இதற்கு 95 நாள்கள் அவகாசம் வேண்டுமென தேசியத் தகவல் மையம் கேட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மே இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். ஜூன், ஜூலையில் தேர்தல் நடத்தி முடிவுகளையும் வெளியிட்டுவிடுவோம்” என்றார் உறுதியுடன்.

சென்னபடி செய்தால் சரி.

- ந.பொன்குமரகுருபரன்