Published:Updated:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி? -பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி? -பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி? -பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்!

நரேந்திர மோடி அரசாங்கத்தின்மீது எதிர்க்கட்சிகள் வைத்துவரும் முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல்களில் வெல்கிறார்கள்” என்பது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்தே, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால், 2014 -ம் ஆண்டுக்குப் பின்னர், அந்த இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை அதிக அளவில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. 

உத்தரப்பிரதேசம், கர்நாடகம், குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்தன. ”மற்ற கட்சிகளின் சின்னங்களை அழுத்தினால், தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாகிறது” போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தேர்தல் ஆணையம், “அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானது” என்று சொன்னது. 

இந்த நிலையில், ”2014-ம் ஆண்டு தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பி.ஜே.பி-யினரால் ஹேக் செய்யப்பட்டது. அதன் மூலமாகவே, மோடி பிரதமர் பதவியைப் பிடித்தார்” என்று, அமெரிக்காவில் வசிக்கும் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர் சையத் சுஜா, அதிரவைத்திருக்கிறார். 2014 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்புக் குழுவில் அவர் அங்கம் வகித்ததாகச் சொல்லப்படுகிறது. 

லண்டனில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சையத் சுஜா ஸ்கைப் மூலம் உரையாடினார். அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படியெல்லாம் ஹேக் செய்ய முடியும் என்பதுகுறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார் சையத். தொடர்ந்து அதிரவைக்கும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

* 2014 -ம் ஆண்டு தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்தே பிரதமரானார் மோடி

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் பி.ஜே.பி-க்கு உதவியது  

* இந்த மோசடியால் கிட்டத்தட்ட 201 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தது காங்கிரஸ்

* இந்த விவகாரத்தை அறிந்தவராக இருந்ததால், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே கொலைசெய்யப்பட்டார்

* இதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்து எழுத முன்வந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷும் கொலையானார்

இத்தனை குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருப்பவர், அதுகுறித்த எந்த ஆதாரத்தையும் அந்தக் கூட்டத்தில் வெளியிடவில்லை. ஆதாரங்களை விரைவில் அளிப்பதாக, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பா.ஜ.க மட்டுமல்லாது, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்யும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார். 

லண்டன் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) மற்றும் ஈ.சி.ஐ.எல் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) நிறுவனங்களில், மிகுந்த பாதுகாப்புடனும் தீவிர கண்காணிப்புடனும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஹேக் செய்வது என்பது நடக்க முடியாத ஒன்று” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு, ”லண்டனில் நடந்த அந்தக் கூட்டம், எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது.

பி.ஜே.பி தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “வாக்குப்பதிவு இயந்திரங்களை எவராலும் ஹேக் செய்ய முடியாது. தேர்தலில் தோற்றுப்போனால் என்ன காரணம் சொல்வது என்ற பயம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். அந்தக் கட்சியில், தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். “லண்டனில் நடந்த கூட்டத்துக்கு கபில் சிபல் சென்றது எதேச்சையானது தானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “ரஃபேல் போல இதுவும் பொய்யான குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம்குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “ஜனநாயகத்தைக் காக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இந்த விவகாரத்தை, அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கொண்டுசெல்வோம்” என்று அறிவித்திருக்கிறார்.