சமூகம்
Published:Updated:

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!
பிரீமியம் ஸ்டோரி
News
திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

செங்கொடிகள், சிவப்புத் தோரணங்கள் என ஒரே செம்மயமாகக் காட்சியளிக்கிறது நெல்லை ரெட்டியார்பட்டி. அங்கே இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான ‘ஏ.பி இல்லம்’ வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் சிலை.

“உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியிலே உயர்ந்து நிற்கும் லெனின் வடிவம்...

வீழ்வோம் என்று நினைத்தாரோ,

மண்ணில் சாய்வோம் என்று உடைத்தாரோ,

உடைந்து விழுந்த ஒவ்வொரு துண்டும் ஓராயிரம் லெனின்களாய் எழுந்துவரும்...

உடைத்த கரங்கள் அத்தனையும் சரித்திரத்தில் குப்பைகளாகும்...”

- பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் குரல் ஸ்பீக்கரில் ஓங்கி ஒலிக்கிறது!

“திரிபுராவில் வீழ்த்தப்பட்ட லெனின் சிலையை திருநெல்வேலியில் எழுப்பியுள் ளோம், பாருங்கள்...” என்று, 12 அடி உயரத்திலிருக்கும் லெனின் சிலையைக் காண்பித்தார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன். கூடவே, லெனின் சிலை உருவானதற் கானப் பின்னணியையும் அவர் விவரித்தார். “கடந்த ஆண்டு, திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்து, பி.ஜே.பி முன்னணியில் இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் வன்முறையில் ஈடுபட்ட சங் பரிவார் அமைப்பினர், அங்கிருந்த லெனின் சிலையை உடைத்தார்கள். அங்கே, இடது முன்னணி ஆட்சியில் இருந்ததற்கு லெனின் சிந்தனைகளே காரணம் என்பதால், அவரது சிலை உடைக்கப்பட்டது. அதைக் கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில், லெனின் படங்களை உயர்த்திப் பிடித்தபடியே அனைவரும் பங்கேற்றனர். அப்போதே, ‘லெனின் சிலையை இங்கு அமைக்க வேண்டும்’ என்ற விருப்பத்தை எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் வெளிப்படுத்தினர். அதுபற்றி ஓவியர் சந்ருவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உடைக்கப்பட்ட லெனின் சிலையை நாம் எழுப்புவோம். நானே சிலையைச் செய்துகொடுக்கிறேன்’ என்று உற்சாகத்துடன் சொன்னார். இதோ, இன்று அந்தச் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது’’ என்றார் பெருமிதத்துடன்.

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

இந்தச் சிலையை உருவாக்கிய சென்னை அரசுக் கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஓவியர் சந்ருவிடம் பேசினோம். “ஒடுக்கப்பட்ட, உழைப்பாளி மக்களின் பிரதிநிதியாக இயங்கியவர் லெனின். அவரது சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டது, எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. திரிபுராவில் உடைக்கப்பட்ட சிலையை மனதில்கொண்டே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்க வேண்டியதே கலை. அந்த வகையில் லெனின் நமக்கு முன்னோடி. அதை மறுபடியும் மக்களிடம் நினைவுப்படுத்தவே இந்தச் சிலையை வடிவமைத்தேன். இந்தச் சிலையைப் பார்வையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடனடியாக எனக்கு போன் செய்து, ‘லெனின் சிலையைத் தத்ரூபமாக வடிவமைச்சிருக்கீங்க... நல்லது... நல்லது...’ என்று பாராட்டினார்’’ என்றார் நெகிழ்ச்சியுடன். 

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

கண்ணாடி இழையால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை 12 அடி உயரமும் 500 கிலோ எடையும் கொண்டது. முழு உருவச் சிலையான இது, ஐந்து அடி உயரமுள்ள பீடத்தின்மீது நிறுவப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி, இந்தச் சிலையைத் திறந்துவைக்க இருக்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

நெல்லை நுண்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்ட இந்தச் சிலை, அங்கிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதை நம்மிடம் விவரித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான கருமலையான், “எங்கள் ஊரில் அய்யனார் குதிரை எடுப்புக்கு, ஊரே திரண்டு குதிரையை உற்சாகமாகவும் பயபக்தியுடனும் சுமந்து வருவார்கள். அதைப்போல எங்கள் தோழர்கள், பேரெழுச்சி யுடனும் விண்ணதிரக் கோஷங்களை எழுப்பியபடி லெனின் சிலையை இங்கு கொண்டுவந்தனர். ஓவியர் சந்ரு, ஸ்வீட்டுடன் உற்சாகமாக வந்தார். பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சி, ஓவியர் சந்ருவின் முகத்தில் தெரிந்தது” என்றார்.

உழைக்கும் மக்களின் ‘மூலதனம்’ ஒருபோதும் மூழ்கிவிடாது!

- பி.ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்