
மிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்
துண்டுக் கரும்பைக் கவ்விக்கொண்டே வந்தமர்ந்த கழுகாரிடம், ‘‘கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் போலிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு வில்லங்கம் உருவாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டதும், அவர் மீது தமிழகக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாளே டெல்லிக்குப் படையெடுத்த போலீஸார், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் இருக்கும் ஷயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கஸ்டடி எடுத்து விசாரிக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், அவர்கள் இருவரையும் ரிமாண்டு செய்ய மறுத்த நீதிமன்றம், அடுத்தநாள் ஜாமீனில் விடுதலையும் செய்துவிட்டது. இது, எடப்பாடி தரப்புக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!’’
‘‘இருக்காதா பின்னே!’’
‘‘இத்தனை நாள்கள் கழித்து ஷயான் திடீரென இப்படிக் குற்றச்சாட்டுகளை வைப்பதன் பின்னணியில் வலுவான சக்தி இருக்கவேண்டும் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. அது தினகரனா, சக அமைச்சர்களா என்றெல்லாம் குழம்பிக்கிடக்கிறது அந்தத் தரப்பு. இதற்கெல்லாம் காவல்துறை விசாரணை மூலம் விடை கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், நீதிமன்றம் அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது. தினகரன் தரப்பு மீதுதான் அவர்களுக்கு அதிகமான சந்தேகம். ‘அடுத்த பொங்கலுக்குச் சிறையில் இருப்பார் எடப்பாடி’ என மேத்யூ தனது பேட்டியில் கூறியது, தினகரன் ஸ்டைலாக இருக்கிறது என்று யோசிக்கிறது முதல்வர் தரப்பு. மேலும், இது தொடர்பாக தினகரன் பெரிதாக ‘ரியாக்ட்’ செய்யாமல் இருப்பதும், சந்தேகத்தை வலுப்படுத்துகிறதாம்.”
‘‘ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தினகரனும் பேச ஆரம்பித்துவிட்டார் போலத் தெரிகிறதே!”
‘‘ஓ... ‘மேத்யூவைப் பார்த்து எதற்காக எடப்பாடி பதற வேண்டும்’ என்று தினகரன் கேட்டிருப்பதைத்தானே சொல்கிறீர். ‘இந்த விவகாரம் தானாகவே வெடித்துப் பரவட்டும். இதில் எடப்பாடி சிக்கிக்கொண்டிருப்பது, நமக்குச் சாதகமானதே. இடையில் புகுந்து நாம் எதையும் குழப்பிவிடக்கூடாது’ என்பதற்காகவே மிகமிகக் கவனமாக வார்த்தைகளை எடுத்துவிட்டுக்கொண்டிருக்கிறது தினகரன் தரப்பு. ஆனாலும், போகிற இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை வீசுவதால், வாயை மூடிக்கொண்டிருக்க முடியாமல் எதையாவது சொல்லவேண்டுமே என்று சொல்லிவருகிறாராம். அதேசமயம், ‘இந்த வீடியோ விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க தரப்பு இருக்கிறது’ என்றும் எடப்பாடி தரப்புக்குச் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், டெல்லியில் பலமாகக் கோலோச்சிய தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர்தான் இதன் பின்னணியில் முழுக்கச் செயல் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘டெல்லியில் மேத்யூ குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது முதல் தமிழகத்தில் கவர்னரைச் சந்தித்து தி.மு.க மனுக் கொடுத்ததுவரை அந்த அமைச்சர்தான் பிளான் போட்டுக் கொடுத்துள்ளார்’ என்று அ.தி.மு.க-வினர் சிலரே எடப்பாடியிடம் கொளுத்திப்போட்டுள்ளனர். அதையும் சீரியஸாக எடுத்துக்கொண்ட எடப்பாடி தரப்பு, தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிவிட்டது.’’

‘‘என்ன செய்யப்போகிறார்களாம்?”
‘‘மு.க.ஸ்டாலின் மீது ஏற்கெனவே இருக்கும் புகார்களைத் தோண்டியெடுக்கிறார்களாம். குறிப்பாக, சென்னை-அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தூசு தட்டுகிறார்கள். கோவில்பட்டியில் உள்ள ரமேஷின் மனைவியின் உறவினர்களிடம் கடந்த வாரம் ஒரு டீம் விசாரித்துள்ளது. நாகப்பட்டினம் சென்றும் ரமேஷுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடைய தொழில் தொடர்புகள் எல்லாம் அறிந்துவைத்திருந்தவர் ரமேஷ். இதில் ஏற்பட்ட பிரச்னையில்தான் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் அப்போது விவகாரம் பரபரப்பானது. தற்கொலைக்கு முன்பாக தி.மு.க தரப்பிலிருந்து ரமேஷிடம் தூதுவராகச் சென்ற தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. தி.மு.க மகளிர் அணியில் பொறுப்பு வகித்த சென்னை- கே.கே.நகர் பால்மலர் என்பவர்,
மர்ம நபர்களால் 2008-ல் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தையும் போலீஸார் இப்போது தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னொரு பக்கம் மத்திய அரசும் தி.மு.க-வுக்கு எதிராகக் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது!’’
‘‘ஆ.ராசா விவகாரத்தை வைத்துச் சொல்கிறீரா?’’
‘‘ஆமாம், கொடநாடு விவகாரம் குறித்து ஆ.ராசா பேட்டி கொடுத்த சில மணி நேரத்தில் தமிழக ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர், மத்திய அரசின் வி.ஐ.பி ஒருவருடன் தொடர்புகொண்டு ‘தேவையில்லாமல் ராசா பல விவகாரங்களைக் கிளறுகிறார். இதே நிலை நீடித்தால் தேர்தல் நேரத்தில் நமது கூட்டணிக்கு எதிராக வலுவான பிரசாரத்தைத் தொடங்கி விடுவார்கள்’ என்று புலம்பியுள்ளார். அதற்கு, ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பதில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சி.பி.ஐ தீவிரம் காட்டத் திட்டமிட்டிருக்கிறதாம். அவரின் நண்பர் சாதிக்பாட்ஷா தற்கொலை வழக்கு குறித்தும் சத்தமில்லாமல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சாதிக்பாட்ஷா மனைவியிடமும் பி.ஜே.பி தரப்பில் சிலர் பேசியுள்ளனர். அவரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி, தி.மு.க-வைத் திணறடிக்கலாம் என்கிற திட்டமும் இருக்கிறதாம்!’’

“அடேங்கப்பா...”
“இதற்கு நடுவே, இதே கொடநாடு விவகாரத்தை வைத்துத் தேர்தல் கூட்டணிக் கணக்குகளை முடித்துக்கொள்ளும் வகையில் எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம் பி.ஜே.பி. கொடநாடு விவகாரம் வெளியான பிறகுதான், பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க தரப்பில் மறைமுகமாகத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். ‘கொடநாடு விவகாரத்தில் தி.மு.க-வின் வாயை அடைக்க வேண்டும். மறுபுறம் எந்தச் சிக்கலும் வந்துவிடாமல் மத்திய அரசு தங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்கிற நெருக்கடியான நிலையில் எடப்பாடி தரப்பு இருக்கிறது என்கிறார்கள்.”
‘‘ஆக, சாமியே சரணம்தானா?’’
‘‘அதேதான். ஏற்கெனவே அ.தி.மு.க-வை, தன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வருமானவரித் துறை ரெய்டு,
சி.பி.ஐ விசாரணை என்று தொடர்ந்து பிடியை இறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் சளைக்காமல், அப்படியும் இப்படியுமாக டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருந்தனர் அமைச்சர்களும், அ.தி.மு.க பெரும் தலைகளும். இந்நிலையில், கொடநாடு விவகாரம் வகையாகச் சிக்கிவிட்டதால், ‘தொகுதி பங்கீட்டில் பி.ஜே.பி-யின் கை மேலும் உயரும்’ என்று கண்ணடிக்கிறார்கள் பி.ஜே.பி தரப்பினர்! ‘ஏற்கெனவே பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி விட்டது. அநேகமாக, அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை மார்ச் மாதத்தில் நடக்கலாம்’ என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.’’
“ஆனால், எடப்பாடி மீது விழுந்திருக்கும் கொலைப்பழியே... கூட்டணிக்கு நெகட்டிவ் ஆகிவிடாதா?’’
‘‘இதே கேள்வியை எழுப்பியபடிதான் டெல்லி பி.ஜே.பி தலைவர்களில் சிலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனராம். ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவாகும் சூழலில், இந்த விவகாரம் மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும். தேர்தலில் நமக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கலாம்’ என்று அவர்கள் யோசனை சொல்லி வருகிறார்களாம்.’’
‘‘அப்படியென்றால் யார் முதல்வர்?’’
‘‘பழையபடி செங்கோட்டையன் பெயரையே டெல்லியிலிருந்து சொல்லியுள்ளனர். விஷயம் எடப்பாடி தரப்பை எட்ட, முதல்வரை மாற்றுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். ஆனால், நாள்கள் நகர நகர மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகமாகவே, ‘முடியாத பட்சத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணியைப் பரிசீலிக்கலாம்’ என்று அரை மனதாக ஒப்புக்கொண்டிருப்பதாகவும் பேச்சு.’’

‘‘கொடநாடு விவகாரத்தில் தினகரன் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?’’
“‘மேத்யூ சொன்னது முழு உண்மை. எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வதை இனியும் தடுக்க முடியாது’ என்றே தினகரனும் சொல்கிறார். ‘கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டும் பதற்றமே அவர்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது. இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே மூடிமறைக்கத் திட்டமிட்டது எடப்பாடி பழனிசாமிதான். நான் இதில் பின்னணியில் இருக்கிறேன் என்று சொல்வது லாஜிக்கே இல்லாத விஷயம்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார் தினகரன்.’’
‘‘இறந்துபோன கனகராஜ் பற்றி, கவுண்டம்பாளையம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான ஆறுக்குட்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்களாமே?’’
‘‘ஆமாம். அவர் மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. ‘நீண்ட காலமாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமாக இருந்தவர் திடீரென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறியது, இந்த நிகழ்வுக்குப் பின்புதான்...’ என்கிற ரீதியில் ஆளுங்கட்சியினரே பேசிக்கொள்கின்றனர். கனகராஜின் மொபைல் போனில் கடைசி ஓராண்டில், நூற்றுக்கும் அதிகமான முறை அழைத்துப் பேசியவர்கள் பட்டியலை எடுத்ததில் ஆறுக்குட்டியின் எண்ணும் இருந்துள்ளது. அதன் அடிப்படையில், ஆறுக்குட்டியை ஏற்கெனவே போலீஸ் விசாரித்துள்ளது!’’
‘‘அவ்வளவு நெருக்கமா?’’
‘‘அதற்குக் காரணம் இருக்கிறது. கார்டனிலிருந்து வெளியேறிய பின்பு கனகராஜ், சென்னையிலுள்ள கட்டுமானத் தொழிலதிபர் ஒருவரிடம் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார். அந்தத் தொழிலதிபர், ஆறுக்குட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். ஆறுக்குட்டி சென்னைக்கு வரும்போதெல்லாம்,அந்தத் தொழிலதிபரின் வாகனத்தைத்தான், பயன்படுத்துவாராம்’’
‘‘சரி...’’
‘‘2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு ஒரு வழக்குத் தொடர்பாக ஆறுக்குட்டி சென்னை வந்தபோதெல்லாம் கனகராஜ்தான் உடன் இருந்தாராம். தவிர, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, ஆறுக்குட்டியிடம் பேசிய கனகராஜ், ‘எனக்குத் தெரிந்த ஒரு பார்ட்டியிடம் பெரிய தொகை இருக்கிறது. அதை மாற்றித் தந்தால் கமிஷன் கிடைக்கும். ஏற்பாடு செய்து தர முடியுமா?’ என்று கேட்டாராம். அதற்கு, ‘இந்த விவகாரம் எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு யாரையும் தெரியாது’ என்று மறுத்துவிட்டாராம் ஆறுக்குட்டி. அதற்குப் பிறகு தொடர்பே இல்லை என்று போலீஸில் ஆறுக்குட்டி சொல்லியிருக்கிறார்.’’

‘‘கொடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் பணிகளைச் செய்த சஜீவன் மீதும் சந்தேகம் கிளம்பியதே?’’
‘‘சம்பவம் நடந்தபோது, துபாயில் இருந்தார் சஜீவன். ஆனால், ஷயான் உள்ளிட்டோரை கனகராஜுக்கு அறிமுகம் செய்ததே இவர்தான் என்கிற பேச்சும் உண்டு. ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், சஜீவனின் பரிந்துரையால் நீலகிரி அ.தி.மு.க-வினர் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள்தான், இப்போதும் இந்த விவகாரத்தைக் கிளப்பிக் கொண்டுள்ளனர் என்கிறார்கள்!’’ என்ற கழுகார் விருட்டெனப் பறந்தார்!
படங்கள்: எம்.விஜயகுமார், வி.ஸ்ரீனிவாசுலு